என் மலர்
தமிழ்நாடு
புயல் பாதித்த மாவட்டங்களில் சிறப்பு சிறு வணிகக் கடன் முகாம்- தமிழக அரசு
- சிறு வணிக கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச. 12 வரை நடைபெறுகிறது.
- விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வரை சிறு வணிகக் கடன்.
தமிழகத்தில் கடந்த மாதம் 30ம் தேதி முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக பரவலான மற்றும் கடுமையான மழைப்பொழிவு தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்தது.
குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.
இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டு, பொது மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பெரும் பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து உள்ளது.
இதைதொடர்ந்து, அதி கனமழையின் காரணமாக கடுமையான மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கடன் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
அதன்படி, முதற்கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணா.மலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரியில் சிறு வணிக கடனுக்கான சிறப்பு முகாம் நாளை முதல் டிச. 12 வரை நடைபெறுகிறது.
விழுப்புரம், கடலூரில் தகுதியானவர்களுக்கு 1 லட்சம் வரை சிறு வணிகக் கடன் தரப்படுகிறது என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.