என் மலர்
தமிழ்நாடு
மாணவர்கள் தாய் மொழியை மறந்து விடக்கூடாது- முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
- நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள்.
- அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைகழகம் சார்பில் மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி தொடக்க விழா நேறறு நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதியை திறந்து வைத்தும், மாணிக்க விழா மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன்பின் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மாணிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் யோசனை, அனுபவம் மற்றும் திட்டங்கள் தான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணம் ஆகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளார். 4 தலைமுறைகளை கண்டவர். அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். அவருடைய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணமாகும். அவர் 1984-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கினார். 2001-ல் இது பல்கலைக்கழகமாக மாறியது. முதலில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்பொழுது 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
அடுத்து அவர் டெல்லியில் தன்னுடைய பல்கலைகழகத்தை தொடங்க வேண்டும். இவர் சமூக உயர்வுக்காக பாடுபட்டவர். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகாரம் செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அதனால் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள். அரசு வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கலை தீர்த்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இன்னும் மக்களுக்கு அதிகமான உதவிகள் விரைந்து தேவைப்படுகிறது.
எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. அரசே அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும். மாணவர்கள் பெரியவர்களை மதித்து நடப்பதோடு தங்களுடைய குறிக்கோளை மறந்து விடக்கூடாது. இன்றைய மின்னணு சாதனங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அதனை கவனமுடன் கையாள வேண்டும். தேவைப்படும்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போனை கொடுக்க வேண்டும். தற்போது செல்போனிலேயே அதிக நேரம் மாணவர்கள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடித்தால் தங்களது அப்பா, மனைவி பெயரை சொல்வதற்கு கூட கூகுளை தான் தேடும் நிலை ஏற்படும்.
அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். நடு ஜாமத்தில் தூங்க செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். மாணவர்கள் உயர்வாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
பீட்சா, பர்கர் எல்லாம் இந்தியாவின் உணவு இல்லை. இவை அனைத்தும் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவாகும்.
நாம் புரோட்டின் மிகுந்த சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
நீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஓட்டு என்பது சக்தி வாய்ந்தது. உங்களுடைய ஓட்டு உங்களுடைய தலை எழுத்தை மாற்றும்.
எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எத்தனை மொழியை கற்றுக் கொண்டாலும் தங்களது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார்.