search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    2024 இல் 104 பத்திரிகையாளர்கள் கொலை.. காசாவில் பாதி பேர் - இந்தியாவில் 3 பேர்
    X

    2024 இல் 104 பத்திரிகையாளர்கள் கொலை.. காசாவில் பாதி பேர் - இந்தியாவில் 3 பேர்

    • பாகிஸ்தானில் 6 பேர், வங்கதேசத்தில் 5 பேர் மற்றும் இந்தியாவில் 3 பேர் அடங்குவர்
    • உலகம் முழுவதும் 520 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் உள்ளனர்

    உலகளவில் இந்த ஆண்டு [2024 இல்] 104 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகச் சர்வதேச பத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ) தெரிவித்துள்ளது.

    இன்று அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பதிவான 104 கொலைகளில் பாதி காசாவில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் களத்தில் செய்தி சேகரித்த 55 பாலஸ்தீனிய ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.

    உலகளவில் கடந்த ஆண்டு [2023 இல்] 129 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த ஆண்டில் இறப்பு குறைந்திருந்தாலும் கூட இது மோசமான ஆண்டுகளில் ஒன்றாகவும் பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தான ஆண்டாக அமைந்துள்ளது என IFJ பொதுச் செயலாளர் அந்தோனி பெல்லாங்கர் தெரிவித்துள்ளார். உலகின் கண்களுக்கு முன்பாக நடக்கும் இந்த படுகொலைகளைக் கண்டிப்பதாக பெல்லங்கர் கூறியுள்ளார்

    மேலும் காசாவில் கடந்த "அக்டோபர் 7, 2023 அன்று போர் தொடங்கியதிலிருந்து, குறைந்தது 138 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று IFJ கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

    மேலும் காசாவில் களத்தில் தாக்குதலால் உயிரிழந்தவர்கள் தவிர்த்து வேண்டுமென்றே பல ஊடகவியலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்று பெல்லாங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மத்திய கிழக்கிற்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான இடமாக ஆசிய நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆசிய நாடுகளில் 20 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களில் பாகிஸ்தானில் 6 பேர், வங்கதேசத்தில் 5 பேர் மற்றும் இந்தியாவில் 3 பேர் அடங்குவர் என்று IFJ அறிக்கை கூறுகிறது.

    கோப்புப் படம்

    மேலும் உக்ரைன் போரில் 2024 இல் நான்கு பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 520 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் உள்ளனர்.

    கடந்த ஆண்டு மட்டுமே 427 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். கருத்துச் சுதந்திரத்தை நசுக்கி செய்தியாளர்களைச் சிறை வைப்பதில் சீனா முதலிடத்தில் உள்ளது.

    Next Story
    ×