என் மலர்
உலகம்
டிரம்ப் பதவி ஏற்பதுதான் பாக்கி.. உக்ரைன் போர் விரைவில் முடிய உள்ளது.. அடித்துக் கூறிய ஜெலன்ஸ்கி
- ஜோ பைடன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைந்ததும் டிரம்ப் அதிபர் பதவியை ஏற்பார்
- தேதி மட்டும்தான் தெரியாதே தவிர போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் சேர உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இது நடந்தால் தங்கள் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால் ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போர் ஒரு முடிவை எட்டாமல் நீண்டுகொண்டே செல்கிறது.
உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வழங்கி வருகிறது.வட கொரியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு பக்க பலமாக உள்ளது. இந்நிலையில் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்து முடித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
ஜோ பைடன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரியில் முடிவடைந்ததும் டிரம்ப் அதிபர் பதவியை ஏற்பார். இதனால் சர்வதேச அரசியலில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்படும் என்று யூகிக்கப்படுகிறது. அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அந்நாட்டின் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, டிரம்ப் அதிபராகிய பின்னர் உக்ரைன் - ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பேட்டியில் ஜெலன்ஸ்கி பேசியதாவது, முடிவடையும் சரியான தேதி மட்டும்தான் தெரியாதே தவிர போர் விரைவில் முடிவுக்கு வர உள்ளது, வெள்ளை மாளிகையில் புதிய தலைமை கொண்டுள்ள கொள்கைகள், அவர்களின் அணுகுமுறை இதை உறுதி செய்கிறது.
டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவருடன் நான் [ஜெலன்ஸ்கி] பேசினேன். இந்த உரையாடல் ஆக்கபூர்வமாகவே இருந்தது. நமது நிலைப்பாட்டுக்கு எதிரான எதையும் அவர் பேசி நான் கேட்கவில்லை என்று தெரிவித்தார். 2 வருட போர் விரைவில் முடிவடைய உள்ளதாக ஜெலன்ஸ்கி உறுதிபட கூறியிருப்பது சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதற்கிடையே தனது மார் ஏ லோகோ எஸ்டேட்டில் நடந்த கண்காட்சியில் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 'மேற்கு ஆசியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக எனது நிர்வாகம் செயல்படும். ரஷ்யாவும், உக்ரைனும் போரை நிறுத்த வேண்டும்.ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக கடுமையாக உழைக்க போகிறோம்' என்று தெரிவித்தார்.