என் மலர்
உலகம்
தாய்லாந்தில் 3 நாளாக சிக்கித் தவிக்கும் பயணிகள் - சம்பவம் செய்த ஏர் இந்தியா
- இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக தகவல்.
- தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து.
டெல்லி வரவேண்டிய 100-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான பயணிகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களாக தாய்லாந்தின் பூகெட்டில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த விமானம் நவம்பர் 16 ஆம் தேதி இரவு டெல்லி நோக்கி புறப்பட்டதாக கூறப்படுகிறது.
எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான புறப்பாடு தாமதமாகி இருக்கிறது. பல மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதன்பிறகு தான் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அடுத்த ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். மேலும், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக ஏர் இந்தியா நவம்பர் 16 ஆம் தேதி அறிவித்து இருக்கிறது. பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு மற்றும் இதர உதவிகளுக்கு ஏர் இந்தியா வழிவகை செய்வதாக அறிவித்து இருக்கிறது.
சில பயணிகளுக்கு மாற்று விமானங்களில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. சில பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திரும்ப வழங்குவது மற்றும் வேறு தேதியில் பயணம் மேற்கொள்வது பற்றி பயணிகளுக்கு ஏர் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. பயணிகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
ஏற்கனவே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விமானம் பயணத்திற்குத் தயார்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் இரண்டரை மணி நேரம் கழித்து மீண்டும் ஃபூகெட்டில் தரையிறங்கியது, அதன்பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. எனினும் பயணிகள் ஃபூகெட்டில் சிக்கிக்கொண்டனர்.
முன்னதாக, விமான நிறுவன வட்டாரம், "பல பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுமார் 40 பேர் இன்னும் ஃபூகெட்டில் உள்ளனர், அவர்கள் இன்று மாலை திருப்பி அனுப்பப்படுவார்கள்" என்று கூறினார்.