என் மலர்
உலகம்
துபாயில், புதிய தனியார் பல்கலைக்கழகம்- வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
- தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
- கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
துபாய்:
இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே சிறப்பான நட்புறவு நிலவி இருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக நேற்று அமீரகம் வருகை புரிந்தார். அவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் வரவேற்றார்.
இந்த வருகையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
சிம்பயோசிஸ் சர்வதேச (டீம்ட் யுனிவர்சிட்டி) என்ற தனியார், நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்தியாவின் புனே நகரில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் பெங்களூரு, ஐதராபாத், நாசிக், நொய்டா, நாக்பூர் போன்ற பல்வேறு நகர வளாகங்களில் அமைந்துள்ளது.
தற்போது துபாயில் சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பல்கலைக்கழகத்தை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா மற்றும் அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மாற்று எரிசக்தி, உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகம் இருந்து வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அமீரகத்துக்கு வந்ததையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சாதனை முயற்சியாக கூட்டு பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த புதிய பல்கலைக்கழகம் துபாயில் தொடங்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் இந்தியா தயாராகி வருகிறது.
மேலும் இருநாடுகளுக்கு இடையே மின்சார வாகனம், தூய்மை மற்றும் பசுமை தொழில்நுட்பங்கள், மாற்று எரிசக்தி, விண்வெளி, சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் மேம்பட உதவியாக இருக்கும். கல்வித்துறை வளர்ச்சிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விழாவில் அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், பல்கலைக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து துபாய் அல் ஜடாப் பகுதியில் அமைந்துள்ள முகம்மது பின் ராஷித் நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்திய மந்திரி பங்கேற்று 'ஒய் பாரத் மேட்டர்ஸ்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.
இதையடுத்து துபாய் துறைமுக பகுதியில் அமைய இருக்கும் 'பாரத் மார்ட்' என்ற வணிக வளாகத்தின் திட்டப்பணிகளை துறைமுக அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆய்வு செய்தார்.