என் மலர்
உலகம்
காங்கோவில் சோகம்: ஆற்றில் படகு கவிழ்ந்து 80 பேர் பலி
- நதியில் தத்தளித்த படகில் இருந்து பலர் மீட்கப்பட்டனர்.
- மேலும் சிலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம்.
கின்ஷாசா:
ஆப்பிரிக்க நாடான காங்கோவின் மாய்-நிடோம்பே மாகாணத்தில் காங்கோ ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான குவா ஆறு பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் இரவு மிகப்பெரிய படகு ஒன்று கவிழ்ந்து மூழ்கியது.
முஷீ நகரில் இருந்து தலைநகர் கின்ஷாசா நோக்கி வந்த படகு, லெடிபா கிராமத்தின் அருகே வந்தபோது விபத்தில் சிக்கியது. படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். மற்றவர்கள் மூழ்கினர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. ஆற்றில் தத்தளித்தவர்களை மீட்டனர். இறந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று மாலை நிலவரப்படி 21 குழந்தைகள் உள்பட 80க்கும் அதிகமானோரின் உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
பலர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.