என் மலர்
உலகம்
சீண்டிய உக்ரைன்.. பெரும் அஸ்திரத்தை கையில் எடுத்த ரஷியா.. வெளியான பகீர் தகவல்!
- முதல் முறை அத்தகைய ஆயுதத்தை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
- கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
உக்ரைன் நாட்டின் மத்திய கிழக்கில் உள்ள நிப்ரோ நகரை குறிவைத்து ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. அந்த வகையில், உக்ரைனுக்கு எதிரான தாக்குதலை தொடங்கிய ஆயிரம் நாட்களில் முதல் முறையாக ரஷியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், ராணுவ பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்ட முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலாக இது இருக்கும். பொதுவாக இத்தகைய ஏவுகணைகள் அணு ஆயுதங்களை நீண்ட தூரம் சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை ஆகும். ரஷியா தாக்குதல் குறித்து உக்ரைன் கூறும் போது, ரஷியா என்ன வகை ஏவுகணையை பயன்படுத்தியது என்பதை தெரிவிக்கவில்லை.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதலின் பயன்பாடு குறித்து உக்ரைன் வெளியிட்ட அறிக்கை பற்றி ரஷியா சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், கீவ் சார்ந்த ஊடக நிறுவனம் வெளியிட்ட தகவல்களில் ரஷியா பயன்படுத்திய ஏவுகணை- RS-26 ரூபெஸ் என்றும் இது 5800 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது 12 மீட்டர்கள் நீளம், 36 டன் எடை கொண்டது ஆகும். இந்த ஏவுகணையால் 800 கிலோ அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டுள்ளது. ரஷிய ஏவுகணை தாக்குதல் மத்திய கிழக்கு நகரின் தொழில் நிறுவனங்கள் மற்றும் மிக முக்கிய உள்கட்டமைப்புகளை குறி வைத்து நடத்தப்பட்டது ஆகும்.