என் மலர்
உலகம்
வங்காளதேசம் சம்பவம் தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணைக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து
- வங்காளதேச வன்முறைக்கு பின்னால் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக தகவல்.
- ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்து அரசு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக முடிவு ஏதும் எடுக்கவில்லை.
வங்காளதேசம் நாட்டில் வேலைவாய்ப்பில் தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீட இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்த பிறகு, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதனால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். வன்முறையில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. மற்றும் சீனாவின் பாதுகாப்புத்துறை ஆகியவை வங்காளதேசத்தில் மாணவர் அமைப்புகளை தூண்டிவிட்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளது. பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்காளதேசத்தின் தேசியவாத கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்திடம் ஷேக் ஹசீனா அடைக்கலம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம் நிலவி வரும் வன்முறை தொடர்பாக ஐ.நா. தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டேவிட் லாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் "இதுவரை இல்லாத வன்முறை மற்றும் உயிரழப்புகள் வங்காளதேசத்தில் இரண்டு வாரங்களில் நடைபெற்றுள்ளன. ராணுவத் தளபதியால் ஒரு இடைக்கால அரசு அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது அந்நாட்டின் ஜனநாயக எதிர்காலத்தை நோக்கிய நடவடிக்கையை பார்க்க நாங்கள் விரும்புகிறோம்.
வன்முறைறை முடிவுக்கு கொண்டு வர, மீண்டும் அமைதி திரும்ப, மேலும் உயிரிழப்பை தவிர்க்க அனைத்து தரப்பிலும் இருந்து ஒன்றிணைந்து பணியாற்றுவது அவசியம்.
இங்கிலாந்து- வங்காளதேசம் மக்களிடையே ஆழமான தொடர்பு உள்ளது. காமன்வெல்த் மதிப்புகளை பகிர்ந்து கொள்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா லண்டனிடம் அடைக்கலம் கேட்டுள்ளார். ஆனால் லண்டம் இது தொடர்பாக அதிகார்ப்பூர்வ பதில் ஏதும் அளிக்கவில்லை.
ஷேக் ஹசீனாவின் தங்கை மகள் (niece) துலிப் சித்திக் (இங்கிலாந்து பாஸ்போர்ட் வைத்துள்ள ஷேக் ரெஹானாவின் மகள்) ஹம்ப்ஸ்டீட் என்ற வடக்கு லண்டனில் இருந்து பகுதியில் இருந்து தொழிலாளர் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கருவூல துறையின் ஜூனியர் மந்திரியாக உள்ளார். இதனால் ஷேக் ஹசீனா கடைசியாக லண்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.