என் மலர்
உலகம்
விஷமுள்ள பாம்பு, தேள்களை கண்டால் என்ன செய்ய வேண்டும்?- பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் விளக்கம்
- அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
- தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.
துபாய்:
அமீரக பாலைவனத்தில் முகாமிடும்போது விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள் போன்ற பூச்சி வகைகளை கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அமீரகத்தில் உள்ள நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
அதன் தொகுப்பு பின்வருமாறு:-
அமீரக பாலைவன பகுதிகளில் முகாமிடுவது ஒரு புதுமையான அனுபவத்தை தருகிறது. பாலைவன பகுதி வெப்பம், குளிர் கலந்த அழகிய தரிசு நிலப்பரப்பாகும். இங்கு உலாவும் தனித்துவமான வன உயிரினங்கள் மற்றும் இரவு நேரத்தில் மின்னும் நட்சத்திரங்கள் ஆகியவை பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பாலைவன பகுதிகளில் முகாமிடுபவர்களுக்கு ஆபத்துகளும் காத்திருக்கிறது. குறிப்பாக அமீரக பாலைவனங்களில் ஆபத்தை வரவழைக்கும் விஷமுள்ள பாம்புகள் மற்றும் தேள்கள் இருக்கும் என்பதை அங்கு முகாமிடுபவர்கள் மனதிற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் இதுபோன்ற உயிரினங்கள் இலை குவியல்கள் மற்றும் அடர்ந்த தாவரங்களுடைய நிழலில் ஒளிந்திருக்கும்.
சரி அவ்வாறு முகாமிடும் பார்வையாளர்கள் விஷமுள்ள பாம்பு அல்லது பூச்சியினங்களை கண்டால் பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் அவற்றை கண்டதும் பயப்பட கூடாது. பெரும்பாலான பாம்புகள் மனிதர்களை தவிர்க்கும். தேவையில்லாமல் மனிதர்களை அவை தாக்குவதில்லை. எனவே பாம்புகளை கண்டால் மெதுவாக அங்கிருந்து விலகி சென்று விட வேண்டும். அவை அங்கிருந்து செல்லும் வரை அமைதியாக இருக்க வேண்டும். அவைகளை கைகளால் பிடிப்பதோ அல்லது தொட முயற்சிப்பதோ கூடாது. அதிக விஷமுள்ள பாம்புகளை கண்டால் மாநகராட்சியிடம் தகவல் அளிக்க வேண்டும்.
வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பான தொலைவில் விட வேண்டும். உணவு பொருட்களை முகாம் அருகில் வீசக்கூடாது. ஒருவேளை பாம்பு அல்லது தேள் கடித்து விட்டால் வேகமாக செயல்படுவதை அல்லது அசைவதை நிறுத்த வேண்டும். ஐஸ் கட்டிகள், காயத்தை வெட்டி ரத்தத்தை உறிஞ்சி எடுப்பது போன்றவைகளை தவிர்க்க வேண்டும். இது மேலும் தீங்கு விளைவிக்கும். உடனடியாக கடித்த பாம்பு அல்லது தேளை பாதுகாப்பான தொலைவில் இருந்து படம் பிடித்துக்கொண்டு சிகிச்சைக்கு மருத்துவ குழுவின் உதவியை நாட வேண்டும்.
அவர்களிடம் அந்த பாம்பு புகைப்படத்தை காட்டினால் அதற்கு ஏற்றவாறு விஷ முறிவு சிகிச்சை அளிப்பர். அமீரக பாலைவன பகுதிகளில் அரேபியன் சேன்ட் வைப்பர், அரேபியன் ஹார்ன்டு வைப்பர், சா ஸ்கேல்டு வைப்பர், பிளாக் டெசர்ட் கோப்ரா (பாலைவன கருநாகம்) ஆகிய விஷமுள்ள பாம்புகள் உள்ளன. தேள்களில் தடிமனான வாலுடைய வகை கொடிய விஷமுடையதாகும்.
எனவே நடக்கும்போது கணுக்கால் வரை மறைக்கும் வகையிலான ஷூ அணிந்து செல்வது கட்டாயமாகும். உறங்கி விட்டு மீண்டும் அணியும் போது உள்ளே பூச்சிகள் உள்ளனவா? என்பதை சோதனை செய்து விட்டு அணிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.