என் மலர்
தெலுங்கானா
- குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை.
- காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக அரசியல் செய்கிறது.
பெங்களூரு:
முன்னாள் பிரதமர் தேவகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
எனது 60 ஆண்டு கால அரசியல் போராட்டத்தில் எந்த சமுதாயத்திற்கும் அநீதி ஏற்பட ஜனதா தளம் (எஸ்) விடவில்லை. கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைந்தது. 14 மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. கூட்டணி ஆட்சியை கலைத்தவர்கள் யார்?. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அனுப்பி வைத்தவர்கள் யார்?. பா.ஜனதா ஆட்சி அமைய யார் காரணம்?. குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று நாங்கள் யாருடைய வீட்டிற்கும் செல்லவில்லை.
ஆனால் அவரை முதல்-மந்திரி ஆக்குமாறு காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். எக்காரணம் கொண்டும் காங்கிரஸ் சகவாசம் வேண்டாம் என்று நான் கூறினேன். இதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை. இப்போது பா.ஜனதாவுடன் ஜனதா தளம் (எஸ்) கூட்டணி வைத்தது ஏன்? என்று காங்கிரசார் கேள்வி எழுப்புகிறார்கள். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்தோம்.
குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம். ராகுல் காந்தி பேசும்போது, ஜனதா தளம் (எஸ்) கட்சியை பா.ஜனதாவின் 'பி-டீம்' என்று பேசினார். அவர் பேசுவதற்கு முன்பு உண்மை நிலையை ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். காங்கிரசால் மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பாற்ற முடியுமா?. காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்காக அரசியல் செய்கிறது.
மாநிலங்களவை தேர்தலில் பாரூக்கை நிறுத்தினோம். அவரை காங்கிரஸ் தோற்கடித்தது. குமாரசாமியால் அரசியல் வாழ்க்கை பெற்ற செலுவராயசாமியை மந்திரி ஆக்கியுள்ளனர். எங்கள் கட்சிக்கு காங்கிரஸ் மோசம் செய்தது தொடர்பாக 100 உதாரணங்களை என்னால் கூற முடியும். எல்லா கட்சிகளும் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க அங்கு பா.ஜனதாவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் சேர்ந்து செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தாலும், மதசார்பற்ற கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷாவிடமே கூறியுள்ளேன்.
இவ்வாறு தேவகவுடா கூறினார்.
- பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
- ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க. பல்வேறு வீயூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 1-ந் தேதி தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மற்றும் 3-ந் தேதி நிஜமாபாத்தில் பா.ஜ.க பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேச உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக எம்.பி. லட்சுமணன் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது.
- செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
பெங்களூரு:
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதை கண்டித்து பெங்களூருவில் நேற்று விவசாய சங்கங்கள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு காலை உணவு ஓட்டல்களில் தயார் செய்து வழங்கப்பட்டது. இதில் பெங்களூரு யஷ்வந்தபுரம் யார்டு போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மதிய உணவாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. இதில் யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கிய தக்காளி சாதத்தில் செத்த எலி கிடந்தது.
இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சாப்பாட்டை சாப்பிடாமல் தூக்கி வீசினர். இந்த தகவல் போலீசாருக்கு பரவியதால், மற்ற போலீசாரும் உணவை சாப்பிடாமல் குப்பையில் போட்டுள்ளனர். இந்த தக்காளி சாதம் யஷ்வந்தபுரத்தில் உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து போலீசாருக்கு வழங்கப்பட்டதும், அதில் தான் செத்த எலி கிடந்ததும் தெரியவந்தது. இந்த டிபன் சென்டரில் இருந்து 180 போலீசாருக்கு உணவு ஆர்டர் செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து அறிந்ததும் யஷ்வந்தபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரிகளை, பெங்களூரு மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுஜித் கடுமையாக கடிந்து கொண்டார். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு ரூ.200 அரசு சார்பில் வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் ஏன் போலீசாருக்கு தரமான உணவு வழங்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பி டோஸ் விட்டுள்ளார். சம்பவம் பற்றி போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நிருபர்களிடம் கூறுகையில், யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்த எலி கிடந்துள்ளது. முழுஅடைப்பையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வழங்கிய உணவிலேயே செத்த எலி கிடந்துள்ளது. நல்ல வேளையாக அந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. அந்த உணவை யாராவது சாப்பிட்டு இருந்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டியிருக்கும். எனவே செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக யஷ்வந்தபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு, மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செத்த எலி கிடந்த உணவு வினியோகித்த ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும்.
- நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ரங்கைய்யா பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி லட்சுமி. அந்த பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது.
கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தம்பிகள் மனைவிகளான லட்சுமி, பாலாமணி, அவரது மகன் சரண், லட்சுமி மகள் லாவண்யா ஆகியோர் வந்திருந்தனர்.
நேற்று லட்சுமி, பாலாமணி, சரண், லாவண்யா ஆகியோர் அங்குள்ள கோவில் குளத்திற்கு சென்றனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவன் சரண் கோவில் குளத்தின் கரையோரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சரண் கோவில் குளத்தில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடினான்.
இதனை கண்ட அவரது தாய் பாலாமணி மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட லட்சுமி மற்றும் லாவண்யா இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்களை குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.
குளத்தில் அதிக அளவு களிமண் உள்ளதால் சிறுவன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலையில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்தது.
- கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
- ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
20 மாடிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன. முழுவதும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது
இந்த கட்டிடத்தில் 4-வது மாடியில் டி.ஜி.பி அலுவலகம் 18-வது தளத்தில் கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது. மற்ற உயர்மட்ட அதிகாரிகளின் அறைகள் 7-வது மாடியில் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான கேமராக்களை இந்த அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.
பேரழிவு ஏற்பட்டால் அனைத்து செயல்பாடுகளையும் மையமாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறை அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது.
கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய அலுவலகம் தெலுங்கானா மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
- பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது
வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.
இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.
நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:
ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.
இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.
எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர்.
- தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட்டுகள் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
சோனியா காந்தி அம்மன் வேடத்தில் நகை கிரீடம் அணிந்தபடி அதில் காட்சியளித்தார்.
மேலும் அவரது வலது கையில் இருந்து தெலுங்கானா தோன்றுவது போல வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரிய அளவில் சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தின் அன்னை என அதில் எழுதியுள்ளனர்.
இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, சோனியா காந்தியை 'தெலுங்கானா தாய்' போல் சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"பாரதம் முழுவதும், சக்தி பெண் வடிவமும், தாய் தேவியின் பல்வேறு வெளிப்பாடுகளும் சனாதன தர்மத்தில் வழிபடப்படுகின்றன. தெலுங்கானாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கிராம தேவதை உள்ளது, அந்த கிராமத்தை காக்கும் மற்றும் மக்களுக்கு பலம் தரும் தெய்வம். கிராமத்து மக்கள் தெய்வத்தின் ஆசீர்வாதத்தை தவறாமல் நாடுகிறார்கள்.
"ஊழல் காங்கிரஸ் தலைவரை தெலுங்கானா அன்னையாக சித்தரித்து ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் கட்சி சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது" என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்பது கட்சி ஒழுக்கத்திற்கு எதிரானது என ஒரு காலத்தில் கூறினார்கள். தற்போது சோனியா காந்தியை பாரதமாதாவிற்கு இணையாக சமன் செய்வது போல அம்மன் வேடத்தில் சித்தரித்துள்ளனர்.
இது முற்றிலும் வெட்கக்கேடானது என கடுமையாக பா.ஜ.க.வினர் விமர்சனம் செய்துள்ளனர்.
- 2023 இறுதிக்குள் 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெற போகிறது
- மகாலஷ்மி திட்டத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும்
இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறவிருக்கிறது. தற்போதைய ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து 25-க்கும் மேற்பட்ட கட்சிகள், "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் எதிர்கட்சிகள் கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் இந்த வருட இறுதிக்குள் சட்டீஸ்கர், ம.பி., மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில சட்டசபைகளுக்கான தேர்தலும் நடைபெறவிருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று தெலுங்கானாவில் ரங்காரெட்டி மாவட்டத்தில் துக்குகுடா நகரில் விஜயபேரி சபாவில் ஒரு மிக பெரும் கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் அவர் அம்மாநில மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
தெலுங்கானா மக்களுக்கு 5 உத்திரவாதங்களை வழங்குகிறேன். அவை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்படும். மகாலஷ்மி திட்டம் எனும் திட்டத்தின்படி தெலுங்கானாவில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும். சமையல் கியாஸ் ரூ.500 தொகையில் வழங்கப்படும். தெலுங்கானா மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தெலுங்கானாவில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்க காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன்.
இவ்வாறு சோனியா காந்தி அறிவித்தார்.
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஆஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் 'ரீல்ஸ்' நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற 'டபிள்யூ.டபிள்யூ.ஈ.' போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சாமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.
- காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினர்களின் கூட்டம் ஐதராபாத்தில் நடந்தது.
- இதில் முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் பங்கேற்றார்.
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் நிதி மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.
இதைச் செயல்படுத்தக் குறைந்தது 5 அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பா.ஜ.க.வில் போதிய அளவில் எம்.பி.க்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும்.
இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள் என தெரிவித்தார்.