என் மலர்
வழிபாடு
தீர்க்க சுமங்கலியாக இருக்க... கேதார கௌரி விரதம்!
- கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம்.
- 21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம்.
தீர்க்க சுமங்கலியாக ஆசீர்வதிக்கும் விரதம்... கேதார கெளரி விரதம். தாலி பாக்கியத்தைத் தந்தருளும் விரதம், தாலி பலம் தரும் விரதம், கணவனின் ஆயுளை அதிகப்படுத்தித் தரும் விரதம், குடும்பத்தில் ஒற்றுமையை மேம்படுத்தித் தரும் விரதம் என்றெல்லாம் கேதார கெளரி விரதத்தை போற்றுகின்றனர் பெண்கள்.
உமையவள் கடைப்பிடித்த அந்த விரதம்தான் கேதாரீஸ்வர விரதம். கேதார கௌரி விரதம் என்றும் போற்றுவார்கள். கௌரிதேவியாகிய உமையவள் மேற்கொண்ட விரதம் என்பதால் கேதார கௌரிவிரதம் என்று இந்த விரதம் சொல்லப்பட்டது.
இந்த விரதத்தை புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை சதுர்த்தசி வரை 21 நாட்கள் அனுஷ்டிப்பார்கள். புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்கள் மத்திமம். இந்த நாட்களிலும் விரதம் மேற்கொள்வார்கள்.
தேய்பிறை அஷ்டமியில் துவங்கி சதுர்த்தசி வரை 7 நாட்கள் விரதம் அனுஷ்டிப்பது அதம பட்சம். புரட்டாசி தேய்பிறை சதுர்த்தசியன்று ஒருநாள் மட்டும் அனுஷ்டிப்பது சாமான்ய பட்சம் எனப்படும்! குறிப்பாக, ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியில் தீபாவளி அன்றும் இந்த விரதபூஜையை அனுஷ்டிப்பார்கள். மிக மிக முக்கியமாக, இந்த நாளில்தான் விரதம் மேற்கொள்வார்கள் பெண்கள்.
கேதார கௌரி விரதத்தை, சுமங்கலிகள் கடைப்பிடிக்க வேண்டும். ஆற்றங்கரைகளிலும் ஏரிக்கரைகளிலும் குளக்கரைகளிலும் மண்ணால் லிங்கம் அமைத்து பூஜித்து வந்தார்கள் அந்தக்காலத்தில்! ஆலமரத்தடியிலும் பூஜை செய்து பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.
விரத நாளில், ஸ்ரீவிநாயகப் பெருமானை வழிபட்டு, பிருங்கி, கௌதம முனிவர்களை வணங்கி சிவபூஜையைத் துவங்க வேண்டும். 14 அல்லது 7 என்ற எண்ணிக்கையில் மலர்கள், வில்வ இலைகள் சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்துகொள்ளவேண்டும்.
21 வகையான பட்சணங்களை சிவனாருக்குப் படைத்து வழிபடுதல் விசேஷம். நம்மால் முடிந்தவற்றைக் கொண்டும் நைவேத்தியம் செய்யலாம். பூஜையில் முக்கிய அங்கமாகத் திகழ்வது நோன்புச்சரடு. சிவனாரையும் சக்தியையும் மனதாரப் பிரார்த்தித்து, நோன்புச்சரடு கட்டிக்கொள்வார்கள் பெண்கள். வயது முதிர்ந்த சுமங்கலிகள், மற்ற பெண்களுக்கு, சுமங்கலிகளுக்கு நோன்புச்சரடைக் கட்டிவிடுவார்கள்.
கேதார கௌரி விரதத்தை, ஆத்மார்த்தமாகவும் முறையாகவும் செய்தால், பிரிந்த தம்பதி ஒன்றுசேருவார்கள். தாம்பத்யம் சிறந்து விளங்கும். மாங்கல்ய பலம் பெருகும். தீர்க்க சுமங்கலியாக வாழலாம். கணவரின் ஆயுள் நீடிக்கும்.
மாங்கல்யம் காத்தருளும் கேதார கெளரி நோன்பு இருந்து சிவ சக்தியை வழிபடுவோம்.