என் மலர்
உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர்-பொன்னேரி பகுதியில் பலத்த மழையால் 1000 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு- அதிகாரிகள் ஆய்வு
- நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
- கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.
இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்
இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.