என் மலர்
திருவள்ளூர்
- தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே மேனாம்பேடு சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் பட்டா கத்தியை சாலையில் உரசிய படி சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த அவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் மற்றும் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதனை கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
போதை வாலிபர்கள் வெட்டியதில் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நவீன்(20), பாடியை சேர்ந்த டிரைவர் அசான் மைதீன்(35), அம்பத்தூரைச் சேர்ந்த தனசேகரன்(47), வடமாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார்(35), தீபக் (27) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரவுடி கும்பல் அரிவாள், பட்டாகத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்ப சென்று விட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் நவீன் என்பவருக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு 22 தையல்கள் போடப் பட்டுள்ளன. அவரது இடது கையில் மோதிர விரல் துண்டானது. கட்டை விரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களும் தொங்கிய நிலையில் இருந்தது. அவருக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் டிரைவர் அசான் மைதீனுக்கு தலை நடுவில் 9 தையல்கள், தனசேகரனுக்கு கையில் 7 தையல்கள், வடமாநில வாலிபர்கள் மகேந்திர குமாருக்கு கழுத்தில் 6 தையல்களும், தீபக்கிற்கு தலையில் 13 தையல்களும் போடப்பட்டு உள்ளன. இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தை வட மாநில வாலிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான மங்களபுரத்தை சேர்ந்த நித்திவேல், மண்ணூர்பேட்டையை சேர்ந்த லக்கி என்கிற லோகேஷ், திருவேற்காடு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா போதையில் அவர்கள் கெத்து காட்டுவதற்காக பொதுமக்களை மிரட்டி வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடிகள் நித்திவேல் உள்பட 3 பேரையும் பிடிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் கிரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
- பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
திருவள்ளூர்:
திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு சப்தகிரி விரைவு ரெயில் வந்து கொண்டு இருந்தது. என்ஜின் டிரைவராக யுகேந்திரன் இருந்தார்.
ரெயில் திருவள்ளூர் அருகே வந்து கொண்டு இருந்தபோது என்ஜின் டிரைவர் யுகேந்திரனுக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாத நிலை உருவானது.
இதற்குள் இரவு 9 மணியளவில் ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையம் வந்தது. இதையடுத்து டிரைவர் யுகேந்திரன் எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் உள்ள 3-வது நடைமேடையில் நிறுத்தினர்.
பின்னர் அவர் தனது உடல்நிலை குறித்து சென்னையில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
பின்னர் உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரெயில் நீண்டநேரம் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். ஏராளமான பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து இறங்கி புறநகர் மின்சார ரெயில் மூலமாக சென்னைக்கு வந்தனர்.
பின்னர் இரவு 10.15 மணியளவில் சென்னையில் இருந்து வந்த மற்றொரு என்ஜின் டிரைவர் நிறுத்தப்பட்ட சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை நோக்கி ஓட்டி வந்தார்.
- கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
- புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆவடி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரி சுமார் 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம், புழல், பம்மது குளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிவரை பரந்து விரிந்து உள்ளது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடி.3300 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும் புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமுல்லைவாயல் மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஏரி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புழல் ஏரியில் கலந்து வருகிறது.
குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் எரியில் கலக்கிறது. திருமுல்லைவாயல் பகுதியில் பச்சையம்மன்கோவில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு மழைநீர்கால்வாய் உள்ளது.
இதேபோல், சி.டி.எச். சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதியிலும் புழல் ஏரியில் கலக்கும் வகையில் சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு மற்றொரு மழைநீர் கால்வாய் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த 2 மழைநீர் கால்வாய்களில், மாசிலாமணீஸ்வரர் நகர், கமலம் நகர், வெங்கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால் மழைநீர்கால்வாயில் கழிவு நீர் பாய்ந்து புழல் ஏரியில் கலந்து வருகிறது. ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் மூலம் மட்டுமல்லாமல், திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகாம்பாள்நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீரோடு கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது.
மேலும், அம்பத்தூர், திருமுல்லைவாயல் தென்றல் நகர், ஒரகடம் வெங்கடே ஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீரும் புழல் ஏரியில் சேருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.
- பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது.
- உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பூண்டி ஏரி முழு கொள்ளளவான 35 அடியை எட்டியது. இதையடுத்து ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த 12-ந் தேதி உபரி நீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் 16, 500 கன அடிவரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தற்போது பலத்த மழை இல்லாததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீர் கடந்த 2 நாட்களாக படிப்படியாக ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை முதல் பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 1810 கனஅடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 2749 மில்லியன் கன அடியாக உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 33.76 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏரி நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் பலத்த மழை பெய்தால் பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது.
- கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர், பொன்னேரி பகுதியில் சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிபிடி-5204 ரகத்தை விவசாயிகள் நடவு செய்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கன மழையால் பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. கோளூர், தேவம்பட்டு, கள்ளுர், மெதுர், திருப்பாலைவனம், தத்தைமஞ்சி, உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வயலில் 1000 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கி உள்ளன.
இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்
இதற்கிடையே சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்டு உள்ள நெற்பயிர்களில் நுனிக் கருகல் நோய் பரவி உள்ளது. இது குறித்து விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலா தேவி, வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ரமேஷ், வேளாண் அறிவியல் நிலையம் திரூர் முனைவர். சுதாசா, மீஞ்சூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி குமார் மற்றும் வட்டார வேளாண்மை அலுவலர்கள் கோளூர், மெதூர் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்டு உள்ள நெற்பயிர்களை ஆய்வு செய்தனர்.
அப்போது, நெல் பயிரில் அதிகமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் துத்தநாக சத்து குறைபாடு காரணமாக நுனிகருகல் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கட்டுப்படுத்த 200 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ யூரியா மற்றும் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை விசைத்தெளிப்பான் மூலம் தெளிக்குமாறு விவசாயிகளிடம் பரிந்துரை செய்து உள்ளனர்.
- பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி சிறையில் கஞ்சா, செல்போன், பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உள்பட 38 கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர்.
பூந்தமல்லி தனி கிளை சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைதிகளின் அறையில் சிறைத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 20 கிராம் கஞ்சா, 5 செல்போன்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் சிறைக்குள் இருக்கும் கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் கிடைத்தது எப்படி? என விசாரித்து வருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் கஞ்சா மற்றும் செல்போன் சிறைக்குள் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்பதால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த துணை ஜெயிலர் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஷ்வத்தாமன் உள்பட 23 பேர் மற்றும் மற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 38 கைதிகள் புழல் சிறைக்கு அதிரடியாக மாற்றப்பட்டனர்.
இவர்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் இரவோடு இரவாக சிறைத்துறை அதிகாரிகள் பூந்தமல்லி சிறையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர். இதையொட்டி பூந்தமல்லி தனி கிளை சிறை வளாகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கைதிகளை பார்க்க வரும் உறவினர்களிடம் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
- விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
- பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய்யின் த.வெ.க. கட்சியில் இணைவது பற்றி விரைவில் அறிவிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கௌரவத்தலைவர் ஜி.கே.மணி, "விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா பாமகவில் இணைய விரும்பினால் பரிசீலிப்போம்" என்று தெரிவித்தார்.
முன்னாக தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள போதிலும், தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்ததற்காக விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.
- பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
- விநாடிக்கு 16,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.
இதன் முழுகொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரம் படி நீர்இருப்பு 34.97 அடியாகவும் கொள்ளவு 3159 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என்பதால் அணையின் வெள்ள நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் மாலை 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து 12760 மில்லியன் கன அடி வந்து கொண்டிருப்பதால் 12000 கன அடி உபரி வெளியேற்றப்படுகின்றது.
இந்த நிலையில் பூண்டி ஏரியில் நீர்வரத்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் நீர் திறப்பும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
- ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரியில் மாலை 5 மணி முதல் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் நீர் திறப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 5,900 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், 5000 கன அடி நீர் வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
திருத்தணி:
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணை நிரம்பி உள்ளது.
கடந்த 2 வாரத்திற்கு முன்பு பலத்த மழை கொட்டியபோது உபரி நீர் திறக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் அம்மப்பள்ளி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் அம்மப்பள்ளி அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் நகரி, திருத்தணி, பள்ளிப்பட்டு வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்து பூண்டி ஏரிக்கு வருகிறது.
அம்மப்பள்ளி அணை திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருத்தணி அருகே உள்ள நெடியம், சமந்தவாடா, சுரக்காப்பேட்டை பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் மூழ்கி உள்ளன.
இதனால் அந்த பகுதியை சுற்றி உள்ள கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது. தரைப்பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் பல கிலோ மீட்டர் சுற்றி சென்று வருகின்றன. திருத்தணி, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்த்தலை ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு பாய்கிறது. கொசஸ்தலை ஆற்றின் கரைப்பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் அருகே உள்ள பிச்சாட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று காலை 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
- கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது.
கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் உள்ள கரையோர தாழ்வான கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆட்ராம்பாக்கம், ஒத்தப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
ஏரிக்கான நீர்வரத்து விநாடிக்கு 3500 கனஅடியாக உள்ளது. நீர் வரத்தை பொறுத்து நீர் திறப்பு அளவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.