என் மலர்
உள்ளூர் செய்திகள்
புழல் ஏரியில் கலந்து வரும் திருமுல்லைவாயல் பகுதி கழிவுநீர்- தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது
- புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஆவடி:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. இந்த ஏரி சுமார் 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம், புழல், பம்மது குளம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிவரை பரந்து விரிந்து உள்ளது. புழல் ஏரியின் உயரம் 21.20 அடி.3300 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக புழல் ஏரி முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது. மேலும் புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருமுல்லைவாயல் மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஏரி அருகே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புழல் ஏரியில் கலந்து வருகிறது.
குறிப்பாக ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் எரியில் கலக்கிறது. திருமுல்லைவாயல் பகுதியில் பச்சையம்மன்கோவில் அருகே உள்ள குளக்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் வழியாக வெங்கடாசலம் நகர் பகுதியில் புழல் ஏரியில் சேரும் வகையில் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு மழைநீர்கால்வாய் உள்ளது.
இதேபோல், சி.டி.எச். சாலை அருகே சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக தென்றல் நகர் பகுதியிலும் புழல் ஏரியில் கலக்கும் வகையில் சுமார் 2½ கி.மீ. தூரத்திற்கு மற்றொரு மழைநீர் கால்வாய் உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த 2 மழைநீர் கால்வாய்களில், மாசிலாமணீஸ்வரர் நகர், கமலம் நகர், வெங்கடாசலம் நகர் மற்றும் சரஸ்வதி நகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் விடப்படுகிறது. இதனால் மழைநீர்கால்வாயில் கழிவு நீர் பாய்ந்து புழல் ஏரியில் கலந்து வருகிறது. ஏரி மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மழைநீர் கால்வாய்கள் மூலம் மட்டுமல்லாமல், திருமுல்லைவாயில் வெங்கடாசலம் நகர் அருகே உள்ள அனுகிரகம் நகர், கற்பகாம்பாள்நகர், சிவா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மழைநீரோடு கழிவுநீர் புழல் ஏரியில் கலக்கிறது.
மேலும், அம்பத்தூர், திருமுல்லைவாயல் தென்றல் நகர், ஒரகடம் வெங்கடே ஸ்வரா நகர் மற்றும் பம்மதுகுளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளின் கழிவுநீரும் புழல் ஏரியில் சேருகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்றார்.