என் மலர்
உள்ளூர் செய்திகள்
4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை
- வீட்டுக்குள் புகுந்து பெண்ணிடம் நகை-பணத்தை கொள்ளையடித்த 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி,
திருச்சி ஏர்போர்ட் வளன்நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயமேரி (வயது 47). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சகாயமேரி தனியாக வசித்து வந்த நிலையில், கடந்த 14-6-2016 அன்று மாலை 3.45 மணிக்கு 4 பேர்் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர்.பின்னர் சகாயமேரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி தென்னூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த சேக் அப்துல்காதர் (34), நேருநகரை சேர்ந்த சபீர் முகமது (43), குத்பிஷாநகரை சேர்ந்த சாதிக்பாட்சா (43), சங்கிலியாண்டபுரம் உசேன் தெருவை சேர்ந்த முனீர்அகமது (37) ஆகியோரை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி மீனாசந்திரா முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.ஹேமந்த் ஆஜரானார். இந்தவழக்கில் சாட்சி விசாரணைகள் முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட சேக் அப்துல்காதர், சபீர் முகமது, சாதிக்பாட்சா, முனீர்அகமது ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகையை வசூலித்து பாதிக்கப்பட்ட சகாயமேரிக்கு வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.