என் மலர்
கதம்பம்
மறைமலையடிகளின் தமிழ்ப்பற்று
- பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின.
- பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.
'பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!''''
- என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட... தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ''நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. 'உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்' என்ற இடத்தில் 'தேகம்' என்பதை நீக்கிவிட்டு, 'உடம்பாகிய யாக்கை' என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது'' என்றார் சாமி வேதாச்சலம்.
''அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்'' என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம்.
''எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது'' என்று விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.
1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ''தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை.
'ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்' என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, 'மறைமலை அடிகள்' (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி - அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.