search icon
என் மலர்tooltip icon

  மற்றவை

  • எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.
  • சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது.

  கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 'மரோட்டிசால்' கிராமத்தைச், 'சதுரங்க கிராமம்' என்றே அழைக்கிறார்கள்.

  இங்கு ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் சதுரங்க வீரர், வீராங்கனைகள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சதுரங்க விளையாட்டை அறிந்தவர்கள் அதிகம் உள்ள ஊர் என்ற பெருமையை இக்கிராமம் பெற்றிருக்கிறது.

  இங்கு வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்கள், கடை வாசல்கள் என்று எல்லா இடங்களிலும் மக்கள் சதுரங்க விளையாட்டில் மூழ்கியிருப்பதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம்.

  சதுரங்கத்துக்கும் இந்தக் கிராமத்துக்கும் எவ்வாறு இப்படி ஓர் ஆழமான உறவு ஏற்பட்டது?

  அதற்கு இக்கிராம மக்கள் கைகாட்டுவது, 60 வயதான தேநீர்க் கடைக்காரர் உன்னிகிருஷ்ணனை.

  கிராம பொது மைதானம் அருகே உள்ள உன்னிகிருஷ்ணனின் தேநீர்க் கடைதான், இங்கு சதுரங்கம் வேர் விட்ட இடம்.

  தற்போது சதுரங்க விளையாட்டு ஆர்வலர்களால் களைகட்டியிருக்கும் இந்த இடம், ஒரு காலத்தில் குடிகாரர்களின் ராஜாங்கமாகத் திகழ்ந்தது.

  பகலில் குடிகாரர்கள் லூட்டி அடிக்கும் இந்த மைதானம், இரவில் அவர்கள் மோதல்கள், வழிப்பறியில் ஈடுபடும் இடமாகமாறும்.

  இக்கிராமத்தில் கள்ளச்சாராயம் தாராளமாகக் காய்ச்சப்பட்டதால், கலால் வரித் துறையின் சோதனை அடிக்கடி நடக்கும். கிராமத்தினரே கலால் வரித் துறை சோதனையை இயல்பாக எதிர்நோக்கிக் காத்திருப்பது வழக்கம்.

  இப்படி இரவில் கண் விழித்துக் காத்திருந்ததுதான், மரோட்டிசாலில் சதுரங்க விளையாட்டு வளர்வதற்கும் காரணமாக அமைந்தது என்பது ஆச்சரியமான விஷயம்.

  இதுபற்றிக் கூறும் உன்னிகிருஷ்ணன், "1970-ஆம் ஆண்டுகளில் இரவில் கலால் ஆய்வர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது பொழுதுபோவதற்காக நாங்கள் சதுரங்கம் விளையாட ஆரம்பித்தோம். ஆரம்பத்தில் இப்படி ஒருவிதக் கட்டாயத்தில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினாலும், நாளடைவில் அது எங்களுக்கு ரொம்பவே பிடித்துப் போனது." என்கிறார்.

  இக்கிராமத்தினருக்கு பகல், இரவு என்றில்லை, எப்போது நேரம் கிடைத்தாலும் உடனே சதுரங்கம் விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.

  -வீரமணி வீராசாமி

  • எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்.
  • வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

  பலே பாண்டியா திரைப்படத்தில் 2 ஜோடிகள் பாடும் முதலிரவுப் பாடல் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யிடம் சிச்சுவேஷன் சொல்லப்படுகிறது! அப்போது மெட்டுக்குப் பாட்டெழுதும் வழக்கம் கிடையாது! கன்னல் தமிழில் கவியரசர் எழுத, அதை படித்த மறு நொடியே எம்.எஸ்.வி அருமையான மெட்டைப் பிடித்துவிடுவார்.

  இந்தப் பாடலின் சவாலான விஷயம், இது முதலிரவுப் பாடல். விரசமாக இருக்கக் கூடாது ஆனால் காதல் பொங்கி வழிய வேண்டும்! மிக மிக மிக லேசாக காமமும் தெரியவேண்டும்! சிச்சுவேஷனைக் கேட்டதும் கவிஞர் 2 நாட்கள் டைம் கொடு என்றாராம்! 3 நாட்கள் கூட தருகிறேன் எழுதுங்க என எம்.எஸ்.வி சொல்லிவிட்டு கிளம்புகிறார்!

  நான்கு நாட்கள் ஆகியும் கவிஞரிடம் இருந்து பதில் வரவில்லை! அவருக்கு போன் செய்த போது இன்னும் இரண்டு நாட்கள் டைம் கேட்கிறார்! எம்.எஸ்.வியும் சரி என்கிறார்! ஒரு வாரம் கடந்து விடுகிறது! மீண்டும் போன் செய்கிறார் எம்.எஸ்.வி. இப்பவும் கவிஞர் இல்ல விசு, இன்னும் நான் பாடல் எழுதலை என்கிறார் தர்ம சங்கடமாக!

  எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்! 'கவிஞரே இன்னிக்கு உங்க கிட்ட பாட்டு வாங்காம கிளம்பறதில்ல' என்கிறார் உறுதியாக!

  இல்ல விசு, முதலிரவு சூழலில் காமமும் காதலும் இல்லாமல் ஓரிரு வரிகள் எழுதலாம். மொத்தப் பாட்டும் எப்படி எழுத? எனக்கு காதல் ரசம் தான் பொங்குது என்கிறார்!

  அதெல்லாம் இல்ல கவிஞரே, உம்மால் முடியும்! நீர் எவ்வளவு பெரிய கவிஞர். இந்தச் சூழலுக்கு எழுதுவதா உங்களுக்கு கஷ்டம்! என்று உசுப்பிவிட, கவிஞரும் சரிப்பா யோசிக்கிறேன் என்கிறார்!

  அவரது சிந்தனையில் காதல் தான் பெருகுகிறது! அப்போது வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

  போய் பார்த்துவிட்டு வந்த அவரது உதவியாளர், "அய்யா நம்ம வீட்டு சமையற்காரர் தான் வாசலில் பழம் விக்கிறவர் கிட்ட என்னப்பா பழம் கொண்டுவான்னா.. காயா கொண்டுவந்திருக்கே! எல்லாமே தானா பழுத்த காய் மாதிரி இல்லியேன்னு சண்டை போடுறார்" இந்த வார்த்தையைக் கேட்டதும் கவிஞரது உள்ளம் துள்ளி குதிக்கிறது!

  ஆஹா காய் - பழம் இதை எப்படி மறந்தேன்! தமிழ் இலக்கணத்தில் கூட தேமாங்காய், புளிமாங்காய் இருக்கிறதே! அதை எண்ணாத 'மாங்காய்' மடையன் போல இருந்துவிட்டேனே என்று சரசரவென பாடல் வரிகளில் காய்களாக கொண்டுவந்து குவிக்கிறார்! அப்படி எழுதிய பாடலே இந்த அத்திக்காய் பாடல் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்…

  "அத்திக்காய் காய்காய்

  ஆலங்காய் வெண்ணிலவே

  இத்திக்காய் காயாதே

  என்னுயிரும் நீயல்லவோ

  கன்னிக்காய் ஆசைக்காய்

  காதல்கொண்ட பாவைக்காய்

  அங்கேகாய் அவரைக்காய்

  மங்கை எந்தன் கோவைக்காய்

  மாதுளங்காய் ஆனாலும்

  என்னுளங்காய் ஆகுமோ

  என்னை நீ காயாதே

  என்னுயிரும் நீயல்லவோ.."

  -வெங்கடேஷ் ஆறுமுகம்

  • நாம் டிசைன் செய்த ஒரு பொருள் இந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாக தேர்ந்தெடுக்கபட்டு விருது வாங்கியிருக்கிறது.
  • முக்கியமான எல்லா செய்திகளையும் சொல்லவேண்டும்.

  பில் கேட்ஸுக்கு ஒருமுறை அவரது கம்பனியில் இருந்த மேலதிகாரி ஒருவர் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.."நாம் டிசைன் செய்த ஒரு பொருள் இந்த ஆண்டுக்கான சிறந்த வடிவமைப்பாக தேர்ந்தெடுக்கபட்டு விருது வாங்கியிருக்கிறது" என..

  பில்கேட்ஸிடமிருந்து பாராட்டு வரும் என அவர் எதிர்பார்க்க, "எத்தனை ஆண்டுகளாக அந்த விருது வழங்கப்படுகிறது? இத்தனை ஆண்டுகளில் நம் கம்பனியின் எத்தனை தயாரிப்புகள் அந்த விருதை வாங்கியுள்ளன? மற்ற ஆண்டுகளில் எந்தெந்த கம்பனிகளின் தயாரிப்புகள் அந்த விருதை வாங்கின?" என கேட்டு பதில் மடல் அனுப்பினார் பில்கேட்ஸ்.

  அதன்பின்னர் பார்த்தால் அந்த ஒரு ஆண்டு மட்டுமே மைக்ரோசாப்ட் தயாரிப்புகள் அந்த விருதை வாங்கி இருந்தன. மற்ற ஆண்டுகளில் பிற கம்பனிகள் விருது வாங்கி இருந்தன.

  "முதலாளி பாரட்டுவார் என நினைத்து அவர்கள் அந்த தகவலை என்னிடம் அனுப்பினார்கள். ஆனால் வெறுமனே நல்ல செய்திகளை மட்டும் நிர்வாகிகளிடம் சொல்லி பாராட்டு பெற்றுவிடலாம் என்ற எண்ணம் தொழிலாளிகளிடம் வரக்கூடாது. முக்கியமான எல்லா செய்திகளையும் சொல்லவேண்டும்.

  அதனால் என்னிடம் நல்லவிசயத்தை யாராவது சொன்னால் பதிலுக்கு வேறு என்ன தவறாக நடக்கிறது என கேட்பது என் வழக்கம். அதனால் வெறுமனே நல்லவிசயத்தை மட்டும் தூக்கிக்கொண்டு என்னிடம் யாரும் வரமாட்டார்கள்" என்கிறார் பில்கேட்ஸ்

  இப்படி எல்லாம் வித்தியாசமாக சிந்தித்தால் தான் பிசினஸ் பிஸ்தாக்கள் ஆகமுடியும்.

  -நியாண்டர் செல்வன்

  • உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை.
  • பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

  ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு ஒரு வாக்கியம் இருக்கே, அது எவ்வளவு உண்மை?

  பெண்களைத் தொலைவில் வைத்தே பார்த்துப் பழகி விட்ட ஆண்கள் சொன்ன வார்த்தைகள் இவை. பெண்ணை முழுமையாக அருகிலிருந்து பார்க்கத் தவறி விட்டவர்களின் பக்குவமற்ற புலம்பல் இது.

  உண்மையில், ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ தாழ்ந்தவரில்லை. இரண்டு பேரும் இல்லாமல் குடும்பமோ, சமூகமோ, உலகமோ, எதுவுமே முழுமையடையாது.

  ஆனால், ஓர் ஆணால் உணர முடியாத சில நுட்பமான உணர்வுகளை ஒரு பெண்ணால் உணர முடியும்.

  ஆண் தன்னுடைய புத்தியால் செலுத்தப்படுகிறான். பெண்ணோ தன்னுடைய உள்ளுணர்வால் செலுத்தப்படுகிறாள்.

  புத்தி என்பது வெளியிலிருந்து சேகரித்தது. அது எந்தத் தரத்தில் கிடைத்ததோ, அந்தத் தரத்தில் தான் செயல்படும். உள்ளுணர்வு வெளி அழுக்குகளால் அசிங்கப்படாதது. தூய்மையானது; புத்தியை விட உயர்வானது. அதனால், பெண்கள் ஆண்களை விட உணர்வுகளில் மேம்பட்டு இருக்கிறார்கள்.

  உலகின் பல விஷயங்களை விஞ்ஞானப் பூர்வமாக பகுத்துப் புரிந்து கொள்ள ஆணுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அவனுக்கு அருகிலேயே இருந்த பெண்ணின் நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது.

  புரிந்து கொள்ள முடியாததின் மீது இயல்பாகவே அச்சம் வரும். அச்சத்தால் பெண்ணை ஏறிட்டுப் பார்க்க விடாமல், தன் முரட்டுத் தனத்தால் தாழ்த்தி வைத்தான்.

  தன் உடல் வலுவைப் பிரயோகித்து, புத்தியின் தத்திரங்களைப் பயன்படுத்தி, அவளைத் தன் நிழலில் வைத்திருக்க வேண்டியதை எல்லாம் அவன் செய்து முடித்தான். அப்படிச் சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை.

  ஆவது நிச்சயமாக ஒரு பெண்ணால் தான், ஓர் உயிரைத் தன்னுள் வைத்து,உருவம் கொடுத்து இந்த உலகுக்கு உங்களைக் கொடுப்பவள் ஒரு பெண் தான். ஆனால், அழிவதற்கும் அவளையே பொறுப்பாக்கிப் பார்க்கிறான் என்றால், அப்புறம் அந்த ஆணுடைய பங்களிப்பு தான் என்ன?

  ஓர் ஆண், பெண்ணை மரியாதையுடன் உரிய மதிப்புடன் கையாளத் தெரியாவிட்டால், அவளால் அழிந்து போகக் கூடும்.

  - சாந்தசீலன்.

  • முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.
  • இரு வேளைகளில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

  பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைந்தது.

  காலை, மாலை என இரு வேளைகளில் தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

  அதன்படி, 24ம் தேதி தேனி, ஆரணி, 25ம் தேதி தென்காசி, ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

  ஆகஸ்டு 1ம் தேதி வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

  • ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.
  • நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

  ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இரும்புச்சத்து மிகவும் அவசியம்.

  * ஆரோக்கியமான உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக சாப்பிட வேண்டும்.

  * கீரை, இரும்புச்சத்து அதிகமுள்ள பயறு, பருப்பு வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்ற உணவகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  * இஞ்சி, தேனுடன் சிறிதளவு பேரீச்சம்பழம் சேர்த்து தினசரி சாப்பிட்டுவர இதைத் தடுக்கலாம்.

  * உலர் திராட்சை, முந்திரி, பாதாம், பேரீச்சை போன்றவற்றை முந்தைய நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் அரைத்துச் சாறாகக் குடிக்கலாம். இது உடல் வலுப்பெற உதவும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

  * தினசரி இரண்டு நெல்லிக்காய் மற்றும் 100 கிராம் அளவு கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டுவர, ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

  * தினசரி ஒரு வகையான பழம் என்னும் வீதம் பழமாகவோ பழச் சாறாகவோ குடிக்கலாம்.

  - டாக்டர். கர்ணன் மாரியப்பன்.

  • நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா.
  • முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி.

  'கன்பூசியஸ் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?'

  'இன்னா சொல்லிக்கிறார்?'

  'வேலைக்காரன் மீது சந்தேகப்படாதே. சந்தேகத்துக்குரிய நபரை வேலைக்காரனாக வைத்துக் கொள்ளாதே' அப்படின்னு சொல்லியிருக்கிறார். என்ன அருமையா சொல்லி இருக்கிறார் பாருங்க'

  'அட. இதை நம்ம திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்ப்பா. 'தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்'

  'சரி. இயேசு கிறிஸ்து பைபிள்ல என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?'

  'என்ன சொல்லியிருக்கிறார்?'

  'ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு… செய்தாயிற்று'

  'அட. இதேமாதிரி திருவள்ளுவரும் சொல்லியிருக்கார்பா. 'உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல்'

  'நெப்போலியன் போனபார்ட் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா? (இன்னும் முடியலையா?)

  ''என்ன சொல்லியிருக்கிறார்?'

  'முதலில் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. அப்போதுதான் கட்டளையிடுவது எப்படி என்பதை நீ கற்றுக்கொள்ள முடியும்னு சொல்லியிருக்கிறார்'

  'அடேங்கப்பா. இதையும் நம்ம திருவள்ளுவர் ஏற்கெனவே சொல்லிட்டார். 'நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது'

  அதாவது நுணுக்கமாக அடுத்தவர் பேசுவதைக் கேட்டு யார் ஒருத்தர் உள்வாங்குகிறாரோ நாளைக்கு அவர் பேசுறதைப் பார்த்து அடுத்தவங்க வணங்குற அளவுக்கு அவரோட பேச்சு இருக்கும் அப்படின்னு இதற்கு அர்த்தம்.

  -மோகன ரூபன்

  • பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணை பிடித்துவிடவே சம்மதம் என தலையாட்டினேன்.
  • ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே, நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்னை கேலி செய்தாள்.

  எம் ஆர் ராதா அவர்களின் நாடக கம்பெனியில் ஆறு வருடங்கள் வேலை செய்தேன்.

  ஒரு முறை வீட்டிற்கு வந்து போது என்னை பெற்ற தாயே, நடிக்க போன மூஞ்சியை பாரு என்று என்னை கேலி செய்தாள்.

  என் அப்பா கூட வேலை செய்யும் ஆசிரியர் ஒருவரின் பெண் இருப்பதாகவும் அவரை கல்யாணம் பண்ணி கொள்கிறாயா என கேட்கவும் நானும் சும்மா தானே இருக்கிறோம் என சரி என்றேன்.

  பொண்ணு பார்க்க போன இடத்தில் பொண்ணை பிடித்துவிடவே சம்மதம் என தலையாட்டினேன்.

  ஆனால் அந்த பெண் உள்ளே சென்று இவன் வடக்க பார்க்க சொன்னா தெற்கே பார்க்கிறான் ...

  இவனை கட்டிக் கொண்டு என்ன எழவ கொட்ட என்று தன் வீட்டாரிடம் சொன்னது என் காதில் விழுந்தது .

  அன்று வீட்டை விட்டு கிளம்பினேன்.அதனால் தான் இன்றைக்கு 728 படம் நடிக்க முடிந்தது.

  வெறி .. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி ..

  மானசீகமாக என்னை புறக்கணித்த அந்த பெண்ணுக்கு நன்றி சொல்வேன் என்றார் நடிகர் குமரி முத்து.

  -பிரசாந்த்

  • நாவல் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்கு.
  • நாவல் மர வேர் கூட நல்ல மருந்துதான்.

  நாவல் பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச பழம். எங்க ஊருல நவ்வாப்பழம்னு பேச்சு வழக்குல சொல்வாங்க. ஆத்தோரமா வளந்திருக்குற நாவல் மரங்கள்ல போட்டி போட்டு ஏறி பழம் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம்.

  நாவல் பழத்துல நிறைய சத்துக்கள் இருக்கு. நாவல் பழம் சாப்பிட்டா மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. நீரிழிவுக்கும் இது நல்லது.

  இதுல குறிப்பா நாவல் விதை சர்க்கரை வியாதிக்காரங்களுக்கு நல்ல மருந்து. நல்ல காய வச்ச புது விதைகளை இடிச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணும். பிறகு படிப்படியா சிட்டிகை அளவுல சாப்பிட்டாக்கூட போதும். விதைப்பொடியை அதிகமா சாப்பிட்டா நல்லதில்லை. அதேமாதிரி பழத்தையும் அதிகமா சாப்பிடக்கூடாது. நிறையபேர் பழம் ருசியா இருக்குன்னு சாப்பிட்டிருவாங்க. அப்பிடி சாப்பிட்டா நெல்லிக்காயை மென்னு தின்னுட்டு குளிர்ந்த தண்ணியை குடிச்சா போதும்.

  நாவல் மர வேர் கூட நல்ல மருந்துதான். ராத்திரி நேரத்துல வேரை ஊற வச்சி காலையில எழுந்திரிச்சி தண்ணியை மட்டும் குடிச்சாக்கூட சர்க்கரை நோய் சரியாகும். இது உடம்புக்கு குளிர்ச்சியை தர்றதோட ஆண்மைக்குறைவுக்கும் நல்ல மருந்து. வேர்ப்பட்டையை கசாயம் வச்சி குடிச்சிட்டு வந்தா வயித்துப்போக்கு சரியாகும்.

  -மரிய பெல்சின்

  • என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.
  • நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

  ஒரு விழாவில், என் அருமை நண்பரும் தஞ்சைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான அவ்வை நடராஜன் பேசும்போது, "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்! அதை கேட்டு வாங்கிப் போனாள் -அந்த கன்னி என்னவானாள்?'' என்று கவியரசர் கண்ணதாசன் எழுதினார். இப்படி எழுத இன்று யாரேனும் இருக்கிறார்களா?'' என்று கூறினார்.

  என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டே அவ்வை நடராஜன் இவ்வாறு சொன்னபோது, அவை ஆரவாரித்து அதை ஆமோதித்தது.

  என் அன்புச் சகோதரி மனோரமா அவர்கள் ஒரு பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதினார்:

  "கண் போன போக்கிலே

  கால் போகலாமா?

  கால் போன போக்கிலே

  மனம் போகலாமா?

  மனம் போன போக்கிலே

  மனிதன் போகலாமா?

  மனிதன் போன பாதையை

  மறந்து போகலாமா?''


  என்று கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார், மனோரமா.

  பிரபல பட அதிபர் `ஜீவி' அவர்கள் ஒரு பத்திரிகையில், "நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ! நீரலைகள் இடம் மாறி நீந்துகின்ற குழலோ!'' என்று கண்ணதாசன் பாடல் எழுதினார். இது போல கற்பனை வளத்தோடு எழுத இப்போது யார் இருக்கிறார்கள்?'' என்று எழுதியிருந்தார்.

  இது குறித்து நான் விசனப்படவில்லை; பேசியவர்களின் வார்த்தைகளால் எவ்வித மனத்தாங்கலும் ஏற்படவில்லை.

  ஏனென்றால், அவர்கள் மூவரும் சிறப்பித்துப் பாராட்டிய மூன்று பாடல்களும் கண்ணதாசன் எழுதியவை அல்ல; அடியேன் எழுதியவை.

  நல்ல பாடல் என்றாலே, அதைக் கண்ணதாசன் எழுதியிருக்க வேண்டும் என்று மேற்சொன்ன மூவரும் நினைப்பதில் தப்பில்லை.

  `வாலி பாட்டு எது, என் பாட்டு எது என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் பலமுறை பாராட்டியிருப்பதை கவிஞர் நா.காமராசனை கேட்டுப்பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

  `நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்' என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு என்பதை, புகழ் வாய்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.

  -கவிஞர் வாலி

  • திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
  • துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

  உங்களது கர்மாக்களை கழிக்க பண்டைய சித்த நூல்களில் சொல்லப்பட்ட அபூர்வ வழிகள்...

  உங்களது கர்மாக்களை சதவிதமாக கணக்கில் வையுங்கள். 100 % என எடுத்துக்கொள்வோம். அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம். இதை செய்யுங்கள்...

  (1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)

  தானியங்கள் வைத்தால் = 5 % (-)

  (2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)

  (3)மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)

  (4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)

  (5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)

  (6)யானைகளுக்கு உணவளித்தால் = 68% (-)

  (7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)

  (8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)

  (9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தால் = 86% (-)

  (10)சகோதர சகோதரிகள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)

  (11)கர்பஸ்திரிகளுக்கு.. = 78% (-)

  (12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதவர்களுக்கு.. = 70% (-)

  (13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)

  (14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)

  (15)நோயளிகளுக்கு = 93% (-)

  (16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)

  (17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.

  இவைகளுக்கு துன்பம் விளைவித்தால் அப்படியே 3 மடங்கு கர்மா அதிகரிக்கும்.

  - அகத்தியர் கர்ம காண்டம் நூலில் இருந்து... ஜோதிடர் பழனியப்பன்

  • பல் மருத்துவர்களுக்கான தகுதிகள் வகுக்கப்பட்டன.
  • தமிழ் நாட்டில் சீன பல் மருத்துவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டனர்.

  உலகின் முதல் பல் மருத்துவக் கல்லூரி, அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள பால்டிமோரில் 1840ஆம் ஆண்டு துவங்கப்பட்டது..

  இந்தியாவின் முதல் பல் மருத்துவக் கல்லூரி, கல்கத்தாவில் 1920இல் தான் துவங்கியது. லண்டனில் படித்த டாக்டர் ஆர் அகமத் என்ற மருத்துவர்தான் அந்த கல்லூரியை நிறுவினார்.

  ஆனால், கி மு 3800 முதல் கி மு 1300 வரையிலான காலகட்டத்தில் இந்திய துணைக் கண்டத்தில் பல் மருத்துவம் சிறப்புடன் இருந்து என்று பல்வேறு குறிப்புகளில் காணமுடிகிறது.

  சிந்து சமவெளியில் அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் பல்லைத் துளையிடும் மருத்துவக் கருவிகள் கிடைத்திருக்கின்றன.

  இதன்படி பார்த்தால் பல் மருத்துவத்தின் அடித்தளமாக சிந்து சமவெளி இருந்திருக்கும் என்று கணிக்க முடிகிறது.

  சுமார் 6000 ஆண்டுகளாக சீனாவில் பல் மருத்துவம் மிகவும் பிரபலமாகவும் பரவலாகவும் பயன்பாட்டில் உள்ளது

  1980கள் வரை, சீனத்துப் பல் மருத்துவர்கள், சீனாவுக்கு வெளியே, சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய ஆசிய நாடுகள் பலவற்றில் சிகிச்சை அளித்து வந்தனர்.

  தமிழ்நாட்டில், 1990கள் வரை சீனத்து பல் மருத்துவ மனைகள் இல்லாத நகரங்கள் கிடையாது.

  சொத்தையான பற்களை அகற்றுதல், Cavity எனப்படும் புழைகளை வெள்ளி தங்கம் போன்ற உலோகங்களால் அடைப்பது, எனாமல் எனப்படும் மேற்பூச்சு சிதைவுகளால் பாதிக்கப்பட்ட பற்கள் மீது தங்க முலாம் பூசுதல் ஆகியவை பண்டைய சீன பல் மருத்துவ முறைகளில் சிறப்பு வாய்ந்தவை. இந்த சீனத்து பல் மருத்துவர்கள் பரம்பரை பரம்பரையாக பல் சீரமைப்பு செய்பவர்கள்.

  1985களுக்குப் பிறகு இந்தியாவில் பல் மருத்தும் அலோபதி வசப்பட்டு அதற்கான கல்லூரிகள் நாடெங்கும் நிறுவப்பட்டன. பல் மருத்துவர்களுக்கான தகுதிகள் வகுக்கப்பட்டன.

  இதன் பிறகு தமிழ் நாட்டில் சீன பல் மருத்துவர்கள் படிப்படியாக காணாமல் போய்விட்டனர்.

  -சுந்தரம்

  ×