என் மலர்
கதம்பம்
கசப்பில் கவனம் வேண்டும்!
- உடல்தன்மையின் சமநிலை மாறுபட்டு நோய்களுக்கும் அழைப்பு விடப்படுகிறது.
- நீங்கள் எடுத்துக்கொண்ட உணவையும் மருத்துவரிடம் கூறிவிடுவது நல்லது.
அறுசுவை உணவே நமது உணவு பழக்கத்தின் அடிப்படையாக இருக்கிறது. ஒவ்வொரு சுவையும் ஒவ்வொரு உடல் உறுப்பின் செயல்பாட்டை பராமரிக்கிறது என்பதால் தான், அறுசுவையும் நமது உணவில் இருக்கவேண்டும் என்று கூறுகிறோம்.
ஆனால் கசப்பு, துவர்ப்பு, புளிப்பு சுவைகளைக் குறைத்துவிட்டு, இனிப்பும், காரமும், உவர்ப்பும் அதிகமுள்ள உணவுகள் தான் தற்போது பெரும்பாலோனோரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் உடல்தன்மையின் சமநிலை மாறுபட்டு நோய்களுக்கும் அழைப்பு விடப்படுகிறது.
இதற்கு எதிர்மாறாக, கசப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்பதால், நீரிழிவு கட்டுக்குள் இருக்கும் என்று, அளவிற்கு அதிகமான கசப்பு உணவுகளை உண்ணும் நோயாளிகளும் இருக்கிறார்கள். அதுவும் தவறு.
பசியைத் தூண்டுதல், உடல் அழுக்கு நீக்குதல், மற்ற ஐந்து சுவைகளையும் சரியாக உணரவைத்தல், உடல் வறட்சி மற்றும் குளிர்ச்சித் தன்மையை சரிசெய்தல் போன்றவை கசப்புத் தன்மையின் பயன்கள்.
ஆனால், அதே கசப்பு சுவை அளவிற்கும் அதிகமாக சேரும்போது, உடல் அரிப்பு, தடிப்பு, உப்புசம், மெலிந்த உடல் வாகு, பசியின் குறைபாடு, வாயில் உமிழ்நீர் குறைந்து வறட்டுத் தன்மை போன்றவை ஏற்படும்.
ஒருநாளைக்கு கசப்பு சுவையுள்ள காய்களை 50 முதல் 75 கிராம் அளவிற்கு உண்ணலாம். இரத்த சர்க்கரையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு, மூன்று வகை கசப்பு உணவுகள் உண்பதைத் தவிர்க்கவேண்டும்.
ஒருவேளை, மேற்கூறிய அறிகுறிகள் இருக்குமாயின், நீங்கள் எடுத்துக்கொண்ட உணவையும் மருத்துவரிடம் கூறிவிடுவது நல்லது.
-வண்டார்குழலி