என் மலர்
கதம்பம்
அலர்ஜி எதனால் ஏற்படுகிறது?
- பல வகை மருந்துகள், சிலருக்கு ஒத்து கொள்ளாமல் அரிப்புகளை ஏற்படுத்தும்.
- தேனீ, வண்டு, குளவி போன்றவை கொட்டினாலோ, வலியுடன் கூடிய அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும்.
சாதாரணமாக உடலில் கொசு, எறும்பு, சுளுக்கை (சிவப்பான பெரியஎறும்பு), கம்பளிப்பூச்சி போன்ற பூச்சிகள் கடித்தாலோ, தேனீ, வண்டு, குளவி போன்றவை கொட்டினாலோ, கடுமையான வலியுடன் கூடிய அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படக்கூடும். சிலருக்கு வலியுடன் உடல் முழுவதும் தடிப்பு ஏற்படக்கூடும்.
வீட்டில் முருங்கை மரம் இருந்து கம்பளி பூச்சிகள், காயப்போடும் துணியின் மீது ஊர்ந்து இருந்தாலோ, பட்டு இருந்தாலோ அந்த துணியை போடும் போது கூட அரிப்பு ஏற்படலாம்.
பல வகை மருந்துகள், சிலருக்கு ஒத்து கொள்ளாமல் அரிப்புகளை ஏற்படுத்தும். சிலருக்கு அலர்ஜிக்கு பரிந்துரைக்கும், கொடுக்கும் அவில் போன்ற மருந்துகள் கூட ஒத்துக்கொள்ளாது.
விதவிதமான இரசாயனம் கலந்த மற்றும் கலக்காத இயற்கை தலைச்சாயங்கள், முகத்திற்குப் போடும் அழகு கிரீம்கள், குளிக்கும், துவைக்கும், பாத்திரம் தேய்க்கும் சோப்புகள், எதுவும் அரிப்பை ஏற்படுத்தலாம். சிலருக்கு உபயோகிக்கும் பிராண்டுகளில் இருந்து வேறு வகைக்கு மாறினாலே ஒத்துக் கொள்ளாது.
சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பிரண்டை, எள், தக்காளி, கத்திரிக்காய், சோயா, காளான், முட்டை, அன்னாசி போன்றவைகள், கருவாடு, இறால் போன்ற சிலவகை மீன்கள், அரிப்பை ஏற்படுத்தலாம்.
அஜின மோட்டோ என்ற சுவையூட்டி உப்பு சேர்த்த துரித உணவு வகைகள் பலருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.
மாநகரங்களில் வீதிதோறும் விற்கும் சாயம் பூசிய சில்லிசிக்கன், சில்லி காலிபிளவர், சில்லி காளான், பேல்பூரி, பானிபூரி போன்றவற்றில் பச்சை நிற, சிகப்பு நிற சாயம் சேர்த்த ரசம் அலர்ஜியுடன் புற்றுநோயையும் வரவைக்கும்.
உணவு அலர்ஜி உள்ளவர்கள் ஏதேனும் பலகாரம் சாப்பிடும் போது அவற்றில் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள் கலந்துள்ளனவா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். கடையில் ரெடிமேட் உணவு வகைகள் வாங்குவதாக இருந்தால் அவற்றில் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்கள் கலந்துள்ளனவா என்பதை படித்துப் பார்த்து உறுதி செய்து வாங்க வேண்டும்.
பொருள்களை காலாவதி தேதிக்கு முன்பே உபயோகிக்க வேண்டும். சமைத்த பொருள்களை மீண்டும் குளிர்பதன பெட்டியில் வைத்து அடுத்தநாள் சூடுபண்ணி சாப்பிடும் போதும் குறிப்பாக சிக்கன் பலருக்கு ஒவ்வாமை ஏற்படும். அது வாந்தி அல்லது வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி போன்றவற்றையும் ஏற்படுத்தக்கூடும்.
பார்த்தீனியம் போன்ற சில விஷச் செடிகள் மேலே பட்டால் அரிப்பு வரும். உலகில் சூரியனுக்கு கீழுள்ள எதுவும், (சூரியனையும் சேர்த்து) யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஒவ்வாமையை உண்டு பண்ணும். எனவே எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
லேசான தடிப்பு மற்றும் அரிப்பு உள்ள இடத்தில் தேங்காய் எண்ணை தடவினால் பெரும்பாலானவர்களுக்கு சரியாகிவிடும். அரிப்பு மற்றும் சிவந்தபடை உடெலங்கும் பரவினாலோ, மூச்சு திணறல், தொண்டையில் அடைப்பது போல இருந்தாலோ உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். ஒவ்வொரு நிமிடம் தாமதிப்பதும் உயிருக்கு ஆபத்து. சொந்த வைத்தியம் இதுபோன்ற நேரங்களில் கைக்கொடுக்காது.
-டாக்டர் ரவிக்குமார்