என் மலர்
இந்தியா
மேட்ரிமோனி ஆப் மூலம் பல ஆண்களை ஏமாற்றி 1.25 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் கைது
- முதல் கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை சீமா பெற்றுள்ளார்.
- விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார்
கடந்த 10 ஆண்டுகளாக பல ஆண்களை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.1.25 கோடியை செட்டில்மென்ட் என்ற பெயரில் வசூலித்து மோசடி செய்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசார் கைது செய்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் நிக்கி (எ) சீமா, கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்கள் கழித்து கணவரின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்து, சமரசமாக ரூ.75 லட்சத்தை பெற்றார்.
பின்னர் 2017 ஆம் ஆண்டில், குருகிராமில் உள்ள ஒரு மென்பொருள் பொறியாளரை சீமா திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று ரூ.10 லட்சத்தை செட்டில்மென்டாக பெற்று கொண்டார்.
இதனையடுத்து அவர் 2023 இல் ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரின் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்துடன் அவர் தப்பி சென்றுள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக கணவரின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர் போலீசார் சீமாவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசாரின் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின. திருமண மேட்ரிமோனி இணையதளங்களில் விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து சீமா வலைவீசியுள்ளார் என்றும் வெவ்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ.1.25 கோடி வசூலித்துள்ளார்" என்று போலீசார் தெரிவித்தனர்.