என் மலர்
இந்தியா
டோலி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி- சபரிமலையில் போராட்டங்கள் நடத்த தடை
- சபரிமலை ஆராதனைக்குரிய இடமாகும்.
- விரதம் இருந்து வரும் பக்தர்களிடம் விலை பேசுவது ஏற்புடையது அல்ல.
திருவனந்தபுரம்:
சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் டோலி தொழிலாளர்கள் அய்யப்ப பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து டோலி சேவைக்கு முன்கூட்டியே பணத்தை செலுத்தும் (பிரீபெய்டு) வசதியை ஏற்படுத்த போவதாக தேவஸ்தானம் அறிவித்தது.
இதை கண்டித்து சபரிமலையில் நேற்று முன்தினம் 1,500-க்கும் மேற்பட்ட டோலி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வயதான மற்றும் உடல் நலம் குன்றிய அய்யப்ப பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பின்னர் டோலி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் திரும்ப பெறப்பட்டது.
இந்தநிலையில் இந்த போராட்ட பிரச்சினை தொடர்பாக கேரள ஐகோர்ட்டின் தேவஸ்தான சிறப்பு அமர்வு விவாதித்தது. இதுதொடர்பாக கோர்ட்டு வெளியிட்டுள்ள தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலை ஆராதனைக்குரிய இடமாகும். எனவே இங்கு போராட்டங்கள் நடத்தக்கூடாது. அதனை அங்கீகரிக்க முடியாது. பம்பை, சபரிமலையில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகள், பக்தர்களின் ஆராதனை உரிமையை பாதிக்கும் செயலாகும். டோலி தொழிலாளர்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக பேசி தீர்த்து இருக்க வேண்டும். விரதம் இருந்து வரும் பக்தர்களிடம் விலை பேசுவது ஏற்புடையது அல்ல. பக்தர்களை அழைத்து செல்ல முடியாது என கூற டோலி தொழிலாளர்களுக்கு அதிகாரம் இல்லை. அதே போல் பக்தர்களை சுமந்து செல்லும் வழியில் அவர்களை நடுவழியில் இறக்கி வைத்து பணம் கேட்டு மிரட்டும் டோலி தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.