என் மலர்
இந்தியா
சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு- இதுவரை 16.25 லட்சம் பேர் தரிசனம்
- மண்டல பூஜையின் முன்னோடியாக 25-ந்தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
- மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலையில் நடை திறக்கப்படும்.
சபரிமலை:
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்பட்டது. 16-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது. கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 26-ந்தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 25-ந்தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து 22-ந்தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது. 26-ந்தேதி மண்டல பூஜைக்கு பின் அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலையில் நடை திறக்கப்படும்.
இந்தநிலையில் சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தும், உடனடி முன்பதிவு செய்தும் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை 16.25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4 லட்சம் அதிகமாகும். இதனிடையே நேற்று சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராதவிதமாக ரத்துசெய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெருக்கடி காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.