என் மலர்
இந்தியா
மகா. தேர்தலில் 'இ.வி.எம். முறைகேடு' நடந்துள்ளதாக பதவியேற்பை புறக்கணித்த எதிர் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள்
- 6 மாதம் முன் நடந்த மக்களவை தேர்தலில் 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் இந்தியா கூட்டணி கைப்பற்றியது
- அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
நடந்து முடிந்த மகாராஷ்டிர தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. 10 நாட்களாக நீடித்த குழப்பத்திற்குப் பின்னர் நேற்று முன்தினம் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 3 வது முறையாக மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றார். என்சிபி பிரிவு தலைவர் அஜித் பவார் மீண்டும் துணை முதல்வர் ஆனார். கடந்த முறை முதல்வராக இருந்த சிவசேனா பிரிவு தலைவர் ஷிண்டே துணை முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார்.
288 சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக கூட்டணி 235 இடங்களை கைப்பற்றிய நிலையில் எதிர்த்து போட்டியிட்ட மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] மொத்தமே 46 இடங்களில் தான் வென்றது.
முன்னதாக இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளைக் கைப்பற்றி இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருந்தது. பாஜக கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 6 மாதத்துக்குள் மக்கள் எப்படி மாற்றி வாக்களிப்பார்கள் என்றும் இது பாஜக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்து பெற்ற வெற்றி என்றும் காங்கிரஸ் கூட்டணி குற்றம் சாட்டி வருகிறது.
புதிதாக அமைக்கப்பட்ட 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையின் சிறப்பு மூன்று நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பாஜகவை சேர்ந்த இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் தலைமையில் , எம்.எல்.ஏ.க்களுக்கான பதவிப்பிரமாணம், சபாநாயகர் தேர்தல், புதிய அரசாங்கத்திற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு மற்றும் ஆளுநர் உரை ஆகியவை இந்த கூட்டத்தில் இடம்பெறும்.
அந்த வகையில் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் எம்எல்ஏக்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். ஆனால் இவிம் இயந்திர முறைகேட்டை முன்னிறுத்தி எதிர் கூட்டணியாகக் காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணத்தை புறக்கணித்துள்ளனர்.
எங்கள் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ இன்று பதவியேற்க மாட்டார் என்று இன்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். EVM மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் இன்று பதவியேற்கவில்லை. ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என்று ஆதித்திய தாக்கரே தெரித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் கேள்விகளை எழுப்பியுள்ளன, முழு செயல்முறையும் கறைபடிந்ததாகத் தெரிகிறது. மக்கள் மகிழ்ச்சியடையவில்லை, ஏதோ தவறாக தோன்றுகிறது என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேட்டிவார் குற்றம் சாட்டியுள்ளார்.