என் மலர்
இந்தியா
5½ டன் ரேஷன் அரிசியை தின்று ஏப்பமிட்ட எலிகள்- அதிகாரிகள் அதிர்ச்சி
- பழங்குடியின மக்களுக்கு கேரள அரசு சார்பில், மாதந்தோறும் 5½ டன் ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- ரேஷன் அரிசி மாயமான விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே இடமலைக்குடி என்ற மலைக்கிராமம் உள்ளது. மூணாறில் இருந்து, சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அந்த கிராமம் இருக்கிறது.
இந்தியாவிலேயே பழங்குடியின மக்களுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பஞ்சாயத்து இது. 6 மலைக்கிராமங்கள், 13 வார்டுகளை கொண்டது. இங்கு 1,200-க் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வசிக்கிற பழங்குடியின மக்களுக்கு கேரள அரசு சார்பில், மாதந்தோறும் 5½ டன் ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 20 நாட்களாக, இடமலைக்குடி கிராம மக்களுக்கு ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படவில்லை. இது பற்றி மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அரிசி ஏன் இன்னமும் வினியோகிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அரிசி இல்லை என்பது தெரியவந்தது. அப்படி என்றால் அங்கே இருந்த 5½ டன் அரிசி எங்கே போனது? என்ற கேள்வி எழுந்தது.
பழங்குடியின மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிற ரேஷன் அரிசி மூட்டை, மூட்டையாக இடமலைக்குடியில் உள்ள கூட்டுறவு சங்க குடோனில் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். அங்கிருந்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.
எனவே அந்த குடோனுக்கு நேரடியாக சென்று, அங்கிருந்த ஊழியர்களிடம் வழங்கல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் சொன்ன தகவல் அதிகாரிகளை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. அதாவது பழங்குடியின மக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 5½ டன் ரேஷன் அரிசியை எலிகள் தின்று விட்டதாக குண்டை தூக்கி போட்டனர். குடோன் ஊழியர்களின் இந்த பதில், வழங்கல்துறையினரை நிலைதடுமாற செய்து விட்டது.
டன் கணக்கில் ரேஷன் அரிசியை எலிகள் எப்படி தின்று அழிக்கும் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் எழுகிறது. இது, கேரள மாநில வழங்கல்துறையினரை மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையே ரேஷன் அரிசி மாயமான விவகாரம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேநேரத்தில், திருட்டுத்தனமாக வெளி மார்க்கெட்டில் ரேஷன் அரிசி கடத்தி விற்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வழங்கல் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக குடோன் பொறுப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வழங்கல்துறையினர் தெரிவித்தனர்.
எலிகள் தின்று இருக்கலாம் என்றாலும் 5½ டன் ரேஷன் அரிசியையும் தின்று இருப்பதாக எலிகள் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையதாக இல்லை. உண்மையாக தின்றவர்களை உடனடியாக கண்டறிய வேண்டும் என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.