என் மலர்
கிரிக்கெட் (Cricket)
ஹென்ரிக்ஸ் அதிரடி சதம்: பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 206 ரன்களை எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 210 ரன்களை எடுத்து வென்றது.
செஞ்சுரியன்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சுரியனில் இன்று நடைபெறறது.
டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தது. சயீம் அயூப் 98 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பாபர் அசாம் 31 ரன்னிலும், இர்பான் கான் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டன் 2 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரீசா ஹென்ரிக்ஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்து அசத்தினார். அவருக்கு வான் டெர் டுசன் நன்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 157 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 117 ரன்னில் வெளியேறினார். 63 பந்தில் 10 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 117 ரன்களை எடுத்தார். வான் டெர் டுசன் அரை சதம் கடந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.