என் மலர்
தமிழ்நாடு
லஞ்சம் வாங்கியதில் மேலும் 7 அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு
- சில உயர் அதிகாரிகள் அங்கிட் திவாரி லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
- அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
மதுரை:
மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் அங்கிட் திவாரி (வயது 32). இவர், கடந்த 2018-ம் ஆண்டு உதவி அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அதாவது, விசாரணை அதிகாரி அந்தஸ்தில் இவர் இருந்துள்ளார்.
காலங்கரை பகுதியில் எம்.என்.நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இந்த நிலையில் அங்கிட் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் சுரேஷ்பாபுவிடம் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்தாமல் இருப்பதற்காக முதல் தவணையாக கடந்த நவம்பர் 1-ந் தேதி ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றார். 2-வது தவணையாக ரூ.20 லட்சம் பெறும்போது கையும், களவுமாக அவரை கைது செய்தனர். பின்னர் அங்கிட் திவாரி, நீதிமன்ற காவலில் 15 நாள் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.
உடனடியாக அங்கிட் திவாரி பணிபுரியும் மதுரை அமலாக்கத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது வீட்டிலும் அதிரடியாக சோதனை செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவு வந்தது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருந்தது. பெண் ஊழியர்கள் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று காலை 7 மணி வரை என விடிய விடிய கிட்டத்தட்ட 13 மணி நேரம் தொடர்ச்சியாக சோதனை நடந்தது. பின்னர் அமலாக்கத்துறை அலுவலகம் மூடப்பட்டது.
சோதனை குறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது வருமாறு:-
ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி தப்பியபோது, போலீசாரிடம் சிக்கிய அங்கிட் திவாரியிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டன.
சில உயர் அதிகாரிகள் அவர் லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். பெரும் தொகையை குறி வைத்து லஞ்ச பேரம் பேசுவது இந்த அதிகாரிகளுக்கு வாடிக்கையாக இருந்துள்ளது.
தாங்கள் லட்சக்கணக்கில் லஞ்சமாக வாங்கும் பணத்தை 7 அதிகாரிகள் பங்கு போட்டுக்கொண்டு உள்ளனர். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும் இந்த சோதனை உதவி இருக்கிறது.
விரைவில் அந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். முழுமையான விசாரணைக்குபின்னரே, இதுகுறித்து மற்ற தகவல்களை தெரிவிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே அங்கிட் திவாரியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக நாளை (திங்கட்கிழமை) திண்டுக்கல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.