என் மலர்
தமிழ்நாடு
கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்
- பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100 கட்டணம் நிர்ணயம்
- ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250 கட்டணம் நிர்ணயம்
சென்னை கத்தீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நினைவை போற்றுவதற்காக சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் செம்மொழிப் பூங்காவுக்கு எதிரில் செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் 6.09 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.45 கோடியே 99 லட்சம் செலவில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவின் நுழைவுவாயிலில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுள்ள ஜிப்லைன் எனப்படும் கம்பியில் தொங்கியபடி செல்லும் சாகச பயணம், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி பனி மூட்டப்பாதை, 2,600 சதுர அடி நீளமுள்ள ஆர்க்கிட் குடில், அரியவகை கண்கவர் பூச்செடிகளை காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரத்துடன் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம் மற்றும் சிற்றுண்டியகம், சுவரோவியம் ஆகியவை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100, சிறியவர்களுக்கு ரூ.50 என்றும், இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டை பெறலாம். 'கியூ ஆர்' கோடு மூலமாகவும் நுழைவுச்சீட்டை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு - ரூ.200/- குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு - ரூ.75/- எனவும், மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு - ரூ.50/- எனவும். கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.