என் மலர்
தமிழ்நாடு
தண்டவாளத்தில் 420 கொக்கிகள் கழற்றப்பட்ட விவகாரம்: ரெயில்வே துறையை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு
- ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
- தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை.
மதுரை:
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட மானாமதுரை-ராமநாதபுரம் ரெயில் பாதையில் பரமக்குடி-சூடியூர் இடையே ரெயில்வே தண்டவாள இணைப்பு கொக்கிகள் (கிளிப்புகள்) கழன்று கிடந்தன.
இந்த சம்பவம் ரெயில்வே வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே, கடந்த ஒரு வருடத்திற்குள் 18 ரெயில் விபத்து சம்பவங்கள் நடந்துள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து காரைக்குடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து என்ஜினீயரிங் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவரிடம் மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, ரெயில்வே போலீசார் வேறு கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால், மதுரை-ராமேசுவரம் ரெயில், விபத்தில் இருந்து தப்பியது. மேலும், கொக்கிகள் கழற்றப்பட்ட சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் 420 கொக்கிகளும் மாற்றப்பட்டு அந்த பாதையில் வழக்கமான ரெயில் போக்குவரத்து தொடங்கியது. ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, வழக்கு விசாரணைக்காக ஒப்பந்த பணியாளர்களிடமும், அந்த பாதையில் ரெயில்களை இயக்கிய என்ஜின் டிரைவர், உதவி டிரைவர் ஆகியோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக செய்யப்படவில்லை என தெரியவருவதாகவும் கூறினர்.
அதேபோல, கொக்கிகளை கழற்றி இரும்பு கடைகளில் விற்பனை செய்யும் நோக்கத்திலும் நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவத்தை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் அல்லது இந்த பணியில் அனுபவம் உள்ளவர்களை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த நோக்கத்திற்காக செய்யப்பட்டது, இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மட்டுமே விசாரணையில் தெரிய வேண்டியுள்ளது.
ஏனெனில், தண்டவாள கொக்கிகளை கழற்றிய நபர்கள் அதனை எங்கும் எடுத்துச் செல்லவில்லை. கழற்றிய இடத்திலேயே வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் இடையே ஏதும் பிரச்சனையா, ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பிரச்சனையா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு படையை சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் தொழில்நுட்ப ரீதியான விசாரணையில் ரெயில்வே போலீசாருக்கு உதவி வருகின்றனர். அத்துடன், அந்த பகுதியை சுற்றிலும் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளிடம் ரெயில்வே போலீசார் பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.