என் மலர்
தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி ஓ.கே. சொன்னால் தமிழகம் முழுவதும் பணியாற்ற நான் தயார்- விஜயபிரபாகரன்
- 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது.
- இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது.
பெரியகுளம்:
தேனி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியகுளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க. கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-
எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி அ.தி.மு.க. கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்.
கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க., எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. ஆகியவை தான் மக்கள் கட்சி. அவை தான் மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க. 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் 40க்கு 40 வெற்றி பெறவில்லை. 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது. மற்ற 19 தொகுதிகளும் அவர்கள் கூட்டணி கட்சிகளின் பலம் உள்ள தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி அதிலிருந்து வெற்றி பெற்றுள்ளனர்.
விஜயகாந்த் இருந்தபோது அவரை மீடியாக்கள் கிண்டலும், கேலியும் செய்து ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது மக்கள் அவரை நல்லவர் என்று கூறுகின்றனர். நாங்கள் பணம் வாங்குகின்ற கட்சி என்றும், பேரம் பேசுகின்றோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. பணம் வாங்கியதும் இல்லை. 2005ம் ஆண்டு எங்களது சொந்த நிலத்தை வைத்துத்தான் மாநாடு நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகின்றோம். எனவே இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வாக்களித்தால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக அமரும். எனவே மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.