என் மலர்
தமிழ்நாடு
விருதுநகர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்து- பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
- திடீரென்று மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது.
- மினி பஸ் கவிழ்ந்து பலியான நால்வரில் 2 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமம். ஆரம்பம், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தபோதிலும், கல்லூரி படிப்பிற்கு மாணவ, மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
அதிலும் குறிப்பாக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மம்சாபுரத்திற்கு இயக்கப்பட்ட போதிலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் இயக்கப்படுவதால் அதனை நம்பியே மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் இருந்து வருகிறார்கள்.
இந்தநிலையில் மம்சாபுரத்தில் இருந்து இன்று காலை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்தபோது திடீரென்று அந்த மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சல் போட்டார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்த போராடியும் முடியாமல் போனது. கடைசியில் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். பஸ் கவிழ்ந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, விபத்து பகுதிக்கு திரண்டு வந்தனர்.
உடனடியாக மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன. அக்கம்பக்கத்தினர் பஸ்சுக்குள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இருந்தபோதிலும் இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்களான சதீஷ்குமார், வாசுராஜ், ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் நிதிஷ்குமார் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
மேலும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலர் 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி காலை நேரங்களில் மம்சாபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.