என் மலர்
தமிழ்நாடு
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
- கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.
இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.
இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.