என் மலர்
தமிழ்நாடு
அதிமுக கிளை செயலாளர் கொலை- போலீசார் விசாரணை
- கணேசன் தினமும் அதிகாலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் அவர் மதியம் வரை அங்கேயே இருப்பார்.
- சம்பவம் நடந்த பகுதியில் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து விசாரனையை தொடங்கினர்.
சிவகங்கை:
சிவகங்கை அருகேயுள்ள நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 72). தற்போது அவர் சிவகங்கை நகர் பகுதியில் வசித்து வந்தார். அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் இவர் ரியல் எஸ்டேட் தொழிலோடு, நாட்டார்குடியில் பெட்டிக்கடை ஒன்றும் வைத்து நடத்தி வந்தார்.
தினமும் அதிகாலையிலேயே கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபடும் அவர் மதியம் வரை அங்கேயே இருப்பார். பிற்பகலில் அங்கு வரும் அ.தி.மு.க. பிரமுகர்கள், நிர்வாகிகளுடன் சேர்ந்து கட்சி பணிகளில் ஈடுபடுவார்.
இந்தநிலையில் இன்று காலை தூங்கி எழுந்த கணேசன் வழக்கம்போல் பெட்டிக்கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்திறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று கணேசனை சூழ்ந்து கொண்டனர். நீங்கள் யார் என்று கேட்டதற்கு பதில் எதுவும் கூறாத அந்த கும்பலை சணேசனை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தது.
இதில் நிலைகுலைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. முன்னதாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வரும் வழியில் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் காலில் பலத்த காயம் அடைந்த அவர் தப்பி ஓடியதால் உயிர் பிழைத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போன அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த திருப்பாச்சேத்தி போலீசார் கொலையுண்டு கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் கொலையாளிகள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்து விசாரனையை தொடங்கினர். முதல் கட்ட விசாரணையில், நாட்டார்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் சுவாமி சிலைகள் வைப்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த கொலை நடைபெற்றிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக தீபாவளி அன்று சிவகங்கை அருகேயுள்ள வாணியங்குடியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மணிகண்டன், களத்தூரைச் சேர்ந்த மூதாட்டி லெட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இன்று அ.தி.மு.க. கிளைச் செயலாளர் கணேசன் உட்பட மூன்று கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளன. ஆனால் அதில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களை போலீஸ்காரர் ஒருவர் ஒருமையில் பேசி திட்டியதாக பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கையில் தொடர் கொலைகளால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.