என் மலர்
தமிழ்நாடு
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு- மருத்துவர் சஸ்பெண்ட்
- பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
- போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது மூச்சு விட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தது.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததற்கு மருத்துவரின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இதைதொடர்ந்து, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் தொடர்ந்தது.
இந்த போராட்டத்தால், மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுகள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பானுமதி உத்தரவிட்டார்.
மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும் மயிலாடுதுறை- கும்பகோணம் சாலையில் பெண்ணின் உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இறந்த குழந்தையின் சடலத்துடன் 12 மணி நேரத்திற்கும் மேலாக பொது வெளியில் போராடி வருவதால், நோய்த்தொற்று அபாயம் ஏற்படும் போராட்டத்தைக் கைவிடும்படி போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஃப்ரீஸர் பாக்ஸ் வரவழைத்து அதில் குழந்தையின் உடலை கிடத்தி பெற்றோர் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.