என் மலர்
தமிழ்நாடு
கடனை வசூலிக்கச் சென்ற நிதி நிறுவன ஊழியரை நாயை விட்டு கடிக்கச் செய்த பெண்
- நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
- புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.
கோவை:
கோவை அருகே உள்ள வெள்ளலூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி தர்ஷனா என்ற பிரியா(29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மணிகண்டன் ரூ.6½ லட்சத்துக்கு புதிதாக கார் வாங்கினார். அதற்கு முன்பணமாக ரூ.2 லட்சம் செலுத்தினார். மீதமுள்ள பணத்துக்கு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினார். அதற்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரத்துக்கும் மேல் தவணை தொகை செலுத்த வேண்டும்.
ஆனால் அந்த தவணை தொகையை மணிகண்டன் முறையாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அவர் 20 மாதத்துக்கும் மேல் தவணை தொகையை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர்கள், தவணை தொகையை செலுத்தவில்லை என்றால் காரை பறிமுதல் செய்வோம் என்று கூறினர்.
இதன்படி அந்த நிதிநிறுவனத்தில் வேலை செய்து வரும் ஜெகதீஷ்(45), சுரேஷ், கதிரவன் ஆகிய 3 பேரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்றனர். அப்போது மணிகண்டனும், அவரது மனைவியும் தங்களிடம் பணம் இல்லை என்றனர்.
இதனால் நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் தங்களிடம் இருந்த சாவியை வைத்து அந்த காரை எடுக்க சென்றனர். அப்போது அங்கு ஓடிவந்த மணிகண்டன் திடீரென காரை ஸ்டார்ட் செய்து, அங்கிருந்து ஓட்டிச்சென்றார். ஜெகதீஷ் உள்பட நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேரும் காரை நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்... என்று கூறியபடி பின்னால் ஓடினர். இருந்தாலும் மணிகண்டன் நிறுத்தாமல் காரை ஓட்டிச்சென்று விட்டார்.
அப்போது அங்கு நின்றிருந்த பிரியா, தான் வளர்த்து வரும் ஜெர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த நாயை அவிழ்த்து விட்டதுடன், ஜெகதீஷ் உள்பட 3 பேரை பார்த்து அவர்களை விடாதே, கடி.. கடி.. என்று கூறினார். உடனே அந்த நாய், வீட்டு வளாகத்தில் நின்றிருந்த ஜெகதீஷ் மீது பாய்ந்தது. அவரை 12 இடங்களில் கடித்து குதறியது.
நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த ஜெகதீசை அவர்கள் மீட்டு, அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயை ஏவி கடிக்க வைத்த பிரியாவை கைது செய்தனர்.