என் மலர்
தமிழ்நாடு
தமிழக சட்டசபை டிசம்பர் முதல் வாரத்தில் மீண்டும் கூடுகிறது
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூட்டத் தொடர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.
- எதிர்க்கட்சிகள், ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முயல்வார்கள்.
சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி கூடியது. முதல் நாளில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டு அவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. 21-ந் தேதியில் இருந்து அரசுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம், அமைச்சர்களின் பதிலுரை, 55 மானியக் கோரிக்கை மீது வாக்கெடுப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஜூன் 29-ந் தேதி வரை 9 நாட்கள் காலையிலும், மாலையிலும் அவை கூடியது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக சட்டசபையில் அ.தி.மு.க.வினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் ஜூன் 26-ந் தேதி முதல் சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து நீக்கிவைக்கப்பட்டனர். இதனால் அடுத்தடுத்து அவை கூடும் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கு பெற முடியாத சூழ்நிலை எழுந்தது.
ஆனால் அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீக்கி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றும், அதை கூட்டத்தொடர் என்றில்லாமல், கூட்டம் என்று மாற்றிக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். அந்த தீர்மானம் நிறைவேறியதை தொடர்ந்து அடுத்து வரும் சட்டசபை கூட்டத்தொடர்களில் அ.தி.மு.க.வினர் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 29-ந் தேதி சட்டசபை கூட்டம் முடிந்ததால் அடுத்த 6 மாதங்களுக்குள் அதாவது டிசம்பர் 28-ந் தேதிக்குள் மறுபடியும் சட்டசபை கூட வேண்டும். இதுதொடர்பாக சமீபத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்தனர். அதில், இந்த மாதம் இறுதி வாரம் அல்லது வரும் டிசம்பர் முதல் வாரத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் 2 வாரங்களுக்குள் வெளியாகிறது. சபாநாயகர் அப்பாவு அந்த அறிவிப்பை வெளியிடுவார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சட்டசபை கூட்டத் தொடர்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆளும் கட்சியினர் தாங்கள் செய்த சாதனைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த முயற்சிப்பார்கள்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஆட்சியில் நடக்கும் தவறுகளை வெளிப்படுத்த முயல்வார்கள். எனவே வரும் கூட்டத்தொடர் கடுமையான விவாதங்களுடன் காரசாரமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த கூட்டத்தொடரில் புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.