search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு நிலச்சரிவு... மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டருக்காக ரூ.153 கோடியை பிடித்தம் செய்த மத்திய அரசு
    X

    வயநாடு நிலச்சரிவு... மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டருக்காக ரூ.153 கோடியை பிடித்தம் செய்த மத்திய அரசு

    • வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன.
    • தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    கேரள மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் ஜூலை 30-ந்தேதி பெய்த கனமழை காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் அதிகமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன. இதனால் தரைவழி துண்டிக்கப்பட்டதால் மாநில பேரிடர் குழு, தேசிய பேரிடர் குழு, இந்திய ராணுவ விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலச்சரிவால் கேரள மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடும் கடும் துயரத்திற்கு உள்ளானது. இதனிடையே வயநாடு நிலச்சரிவு ஏற்படுத்திய சோகத்தால் கேரளாவில் ஓணம் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

    வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பல்வேறு மாநில அரசுகள் நிதியுதவிகளை அளித்தன. தமிழ்நாடு அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது.

    இதனிடையே, நாட்டையே உலுக்கிய இந்த நிலச்சரிவு பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிப்பதோடு ரூ.2000 கோடி சிறப்பு நிதி தொகுப்பை உடனடியாக வழங்க வேண்டும் எனறு பிரதமர் மோடிக்கு கேரள மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது.

    இந்த கடிதத்திற்கு மத்திய அரசிடம் இருந்து வந்த பதில் கடிதத்தில், நாட்டில் எந்தவொரு பேரிடரையும் தேசியப்பேரிடராக அறிவிக்க தற்போதுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியின் விதிமுறைகளில் இடமில்லை.

    மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் 2024-25ம் ஆண்டில் கேரள அரசுக்கு ரூ.388 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்களிப்பான ரூ.291 கோடி இரு தவணைகளாக விடுவிக்கப்பட்டது. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கேரளத்திடம் போதிய நிதி கையிருப்பு உள்ளது' என்று தெரிவித்து இருந்தது.

    இந்த நிலச்சரிவு மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணத்திற்கு கூடுதல் நிதி தேவைப்படும் என்பதால் மத்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பேரிடர் நிவாரண நிதியை அதிகரித்து வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக்கொண்டு நிலையில், மத்திய அரசு எந்த கூடுதல் நிதியையும் வழங்காமல் நிலச்சரிவின் போது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் மேற்காண்டதற்காக கேரள மாநிலத்து வழங்க வேண்டிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.153 கோடியை மத்திய அரசு பிடித்தம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×