என் மலர்
இந்தியா
- 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.
- பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாகவிழாவையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி இன்று முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. ஏராளமான பக்தர்கள் கோவில்களில் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சென்னை வடபழனி முருகன் கோவிலில் வைகாசி மாத பிரமோற்சவ விழா கடந்த மாதம் 24-ந்தேதி கொடியேற்றத்து டன் தொடங்கியது. தினமும் கோவிலில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
வைகாசி விசாகத்தையொட்டி இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி இன்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பின்னர் வள்ளி, தேவசேனா, சண்முகர் வீதி உலா நடைபெற்றது. பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் கோவிலில் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு முருகன் போலவே அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர்.
இன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து மயில் வாகன புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
நாளை (3-ந்தேதி) இரவு 7 மணிக்கு விசேஷ புஷ்ப பல்லக்கு வீதி புறப்பாடு நடக்கிறது. வருகிற 4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை பிரமோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி இன்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றன. மேலும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிதம்பர சுவாமிகள் சிறிய கோவிலில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சென்னை மற்றும் உள்ளூர் வெளியூரிலிருந்து பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றன. இதில் சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி அடுத்த பெரும்பேடு முத்துக்குமாரசுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்தனர். சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடைபெற்றன.
குன்றத்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாக விழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. கோவில் அடி வாரத்தில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தி விளக்கேற்றி வழிபட்டனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள 8-ம் படை முருகன் கோவிலில் இன்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியிலும் இன்று சிறப்பு பூஜை நடை பெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து தரிசனம் செய்தனர்.
பாரிமுனை ராசப்பா செட்டி தெருவில் அமைந்துள்ள கந்தகோட்டம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இன்று அதிகாலை முதல் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இன்று மாலையில் பூக்கடை பகுதியில் உள்ள தெருக்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
கீழ்க்கட்டளை பெரிய தெரு போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி 108 பால் குடம் ஏந்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.
- கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்த வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழே உயிராக, தமிழினமே உணர்வாக, தமிழர் நலனும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியுமே வாழ்நாள் செயல் திட்டமாக கொண்ட ஓய்வில்லா சூரியன், தனது 94 ஆண்டு ஆயுட்காலத்தில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர்.அரை நூற்றாண்டு காலம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருந்து தமிழ்நாட்டு அரசியலின் அச்சாணியாக செயல்பட்டவர். இலக்கியம் , கவிதை , இதழியல் , நாடகம் ,திரைப்படம் எனத்தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி முத்திரை பதித்த பன்முகத்திறன் கொண்ட படைப்பாளர்.
உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்த நம் 'தமிழினத் தலைவர்' கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளான நாளை 3-ந்தேதி அன்று திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழகம், வட்டக்கழகம், வார்டு கழகம், ஊராட்சி கழகங்கள் என மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் கலைஞரின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர்தூவி மரியாதை செலுத்தி புதிய கொடியேற்ற வேண்டும்.
பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், பார்வையற்றோர் இல்லங்கள், மாணவர் விடுதிகள், கருணை இல்லங்கள், பெண்கள் காப்பகங்கள், மனநலகாப்பகம், பார்வையற்றோர் இல்லம் போன்ற இடங்களில் வாழ்கின்றவர்களுக்கு காலை, மதியம், இரவு உணவுகள் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு, உடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், இலவச கண் மருத்துவ முகாம், ரத்த தான முகாம்கள் நடத்த வேண்டும்.
ஜூன் மாதம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கபடிபோட்டி, கிரிக்கெட் போட்டி என பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் சிறப்பாக நடத்திட வேண்டும்.மேலும் நடைபெறுகின்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்களை திரளாக பங்கேற்க செய்து நிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடிட வேண்டும். இவர் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
- வசந்திரமேஷ் 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது என கூறினார்.
- குடி நீர், தெருவிளக்கு பிரச்சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும் என கூறினார்.
பண்ருட்டி நகர் மன்ற கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணைத் தலைவர் சிவா,கமிஷனர்மகேஸ்வரிமுன்னிலைவகித்தனர். என்ஜினீயர் பவுல் செல்வம்,துப்புரவு அலுவலர் முருகேசன், மேலாளர் அசோக்குமார், மற்றும்கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்ட அஜெண்டாவை உதவியாளர்சோமசுந்தரம் படித்தார்.
கூட்டத்தில் நடந்தவிவாதம் வருமாறு:- கிருஷ்ணராஜ் (வாழ்வுரிமை கட்சி): வார்டு பகுதியில் குடிநீர் இணைப்புகள் உடனே வழங்க வேண் டும். பொதுமக்கள் கடு மையாக அவதிப்பட்டு வருகின்றனர். வசந்திரமேஷ் (தி.மு.க): 2 வருடமாக சமுதாய கூடம் பழுது அடைந்து உள்ளது. குடிநீர் பற்றாக்குறை உள்ளது. தெருவிளக்குகள் எரியவில்லை. மோகன் (அ.தி.மு.க): எனது வார்டில் உள்ள குறைகளைசரி செய்யக்கோரி கொடுத்த மனு க்கள் என்ன ஆனது.ஆதி திராவிட மக்கள் வசிக்கும் நந்தனார் காலணியில் 3சாலைகள் உள்ளன. அதில் ஒன்று மண்சாலையாக உள்ளது. ஒன்று நடக்க கூட முடியாத அளவுக்கு உள்ளது உடனே சரி செய்ய வேண்டும் .
ராமலிங்கம் (தி.மு.க.): கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்றுபண்ருட்டி நகரில் சுற்றி திரிந்த 50க்கும் மேற்பட்ட பன்றி களைபிடித்து வனப்பகுதியில் விட்டதற்கு நன்றி. சோழன் (தி.மு.க): 50 வருடமாகவே ஓடாத தேரை ஓடவைத்ததற்கும் வார்டு பகுதியில்வளர்ச்சி பணிகளை உடனே நிறைவேற்றி தந்தமைக்கு நன்றியையும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆணையாளர் மகேஷ்வரி: ஆதிதிராவிட மக்கள் அதிகம்வசிக்கும் பகுதியில் நமக்கு நாமேதிட்டத்தின் மூலம் பணிகள் செய்ய 5-ல் ஒரு பங்குஅதாவது திட்ட மதிப்பீடு ஐந்து லட்சம் என்றால் ஒரு லட்சம் செலுத்தினால் போதும் . ராமதாஸ்(சுயே): ரயில்வே காலணியில் சாலை, தெரு விளக்குகால்வாய் அமைத்து தர வேண்டும்.
ஜரின்னிசா (தி.மு.க) தண்டு பாளையத்தில் கழிவு நீர் வாய்க்காலில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலை எல்லாம் வழிந்து சுகாதாரகேடுஏற்படுகிறது. ஏ.கே.எஸ். மண்டபம் பின் புறம் உள்ள தெருக்களில் சாலை வசதி கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தெரு மின் விளக்கு அமைத்து தரவேண்டும்
தலைவர் ராஜேந்திரன்: ஓட்டு போட்டவர்கள், போடாதவர்கள், ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பார்ப்பதில்லை .பண்ருட்டி நகராட்சியில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 33 வார்டுகளில் பொதுமக்கள் நலன் கருதி வளர்ச்சி பணிகள் செய்யப்படும். நாய்கள் பிடிக்கப்படும். சமுதாய கூடம் பணி டெண்டர் விடப்பட்டுள்ளது. குடி நீர், தெருவிளக்கு பிரச் சனைகள் 15 நாட்களுக்குள் சரி செய் யப்படும். ெரயில்வே காலணியில் கல்வெட்டு அமைத்து சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும் . பண்ருட்டி நகராட்சியில் முதன்மை நகராட்சியாகபாடுபட்டுவருகின்றேன். இவ்வாறு விவாதம் நடந்தது.
- காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன் மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது.
- காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த மாதம் பொறுப்பு ஏற்றது. கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகதாது அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவில் இருந்து 10.01.2022-ல் நடை பயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகதாதுவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்.
தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்கப் போவதாக கூறி இருக்கிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டுநீர்கூட காவிரியில் வராது. உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018-ல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் ஆபத்துதான் விளையும்.
எனவே ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கவே கூடாது. தமிழ்நாட்டின் மரபு உரிமையை கர்நாடக மாநிலம் பறித்துக் கொள்வதை ஏற்கவே முடியாது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை தமிழ்நாடு அரசு விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவேரிபட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணம் அடுத்த மிட்டஅள்ளி பாரத கோவில் கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் (49). இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.
இவரது மனைவி பாப்பாத்தி (44). இவர்களுக்கு சசிகலா, சரண்யா, செவ்வந்தி ஆகிய 3 மகள்களும், மணிகண்டன் (26) என்ற மகனும் உள்ளனர். இதில் 3 பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
கடைசியாக தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்த நிலையில் மணிகண்டனுக்கு பெண் பார்ப்பதற்காக நேற்று மாலை பச்சையப்பனும், பாப்பாத்தியும் அவர்களது பேரன் தட்சன் ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் மணிகண்டனும், அவரது தங்கை சரண்யாவும் சென்றனர்.
அப்போது கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நாட்டான் கொட்டாய் பிரிவு ரோடு அருகே செல்லும் போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்து பச்சையப்பன் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பச்சையப்பன், பாப்பாத்தி, தட்சன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே 3 பேரும் விபத்தில் காயமடைந்ததை கண்டு மணிகண்டனும், சரண்யாவும் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாப்பாத்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக பச்சையப்பன் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பச்சையப்பனும் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த குழந்தை தட்சனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான வேன் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகனுக்கு பெண் பார்க்க சென்று தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன் கண்டித்துள்ளார்.
- வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது.47). இவரது மகன் தமிழேந்தி (15) இவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில், தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன், தமிழே ந்தியை கண்டித்துவிட்டு, வேலையின் காரணமாக மங்கலம்பே ட்டைக்கு புறப்பட்டு சென்று விட்டார், பின்னர், வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீஸில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக் கான தொண்டு நிறு வனங்கள் மற்றும் சேவை புரிபவர்கள், சிறப்பாக சேவைபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற் படுத்தும் நோக்கத்தோடு, அவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டும் 15-ந் தேதி நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் தமிழக அளவில் சிறப்பாக சேவைபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு கீழ்காணும் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மாற்றுத்திறனாளி களுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறு வனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனா ளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறு வனத்திற்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்களுக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். மேற்காணும் விருது களுக்கான விண்ணப்ப படிவங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகம், கடலூர் அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய அனைத்து சான்றிதழ் களுடன் 26-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமோ விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- டிரைவரிடம் 2 பவுன் தங்க நகை பறித்தனர்
- போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
புதுக்கோட்டை மாவட்டம் களத்தூர் கிராமப்பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 32) இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் மெட்டல் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று திண்டிவனம் செல்வதற்காக லாரியில் மோகன்ராஜ் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் சஞ்சீவி நகர் அருகே லாரியை மோகன்ராஜ் நிறுத்தினார். அப்பொழுது 3 மர்ம ஆசாமிகள் மோகன்ராஜ்யிடம் தகராறாரில் ஈடுபட்டு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர். இது குறித்து கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம ஆசாமிகள் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
- அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.
கடலூர்:
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு செய்தார்.அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மாலினி வரவேற்று அழைத்துச் சென்றார். ஆய்வின் போது புறநோயாளிகள்பிரிவு, தொற்றா நோய் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, ஆய்வகம், மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆய்வு செய்து, புறநோயளிகள் பிரிவில் பதிவு மேற்கொள்ளப்படுவது மற்றும் பல்வேறு பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெறவந்த பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.நோயாளிகளிடம் காசு கொடுத்தீர்களா என்று கேட்டதற்கு இல்லை நன்றாக கவனிக்கிறார்கள் என்று நோயாளிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். டாக்டர்கள், துப்புரவு பணியாளர்கள், செவிலியர் பற்றாக்குறை உள்ளது என்று தலைமை மருத்துவர் எடுத்து கூறினார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம்.
- பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
சென்னை:
சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 4.3 கி.மீ. தொலைவுக்கு 4-வது புதிய பாதை அமைக்கும் திட்டத்துக்கு நடப்பாண்டில் மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த புதிய ரெயில் பாதை திட்டப் பணிகளை விரைவில் தொடங்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக, சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வேளச்சேரி - கடற்கரை இடையே இயக்கப்படும் பறக்கும் மின்சார ரெயில்கள் வரும் ஜூலை 1-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு சேப்பாக்கம் வரை மட்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்ததும் பறக்கும் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் வழித்தடம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் பரங்கிமலையில் இருந்து இனி நேரடியாக கடற்கரை பகுதிக்கு செல்லலாம் என்று காத்திருந்தோம். 12 ஆண்டுகள் காலதாமதத்துக்கு பிறகு நேரடி ரெயில் இணைப்பை பெற இருந்தோம். பறக்கும் ரெயில் சேப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டால் அங்கிருந்து சென்ட்ரல், பாரிமுனை மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா ரெயில் நிலையம் வரையிலாவது இயக்க வேண்டும்" என்றனர்.
இந்த நிலையில் ரெயில் பயணிக்கு பாதிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது மற்றும் ரெயில் சேவை வழங்குவது தொடர்பாக ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாளில் தெற்கு ரெயில்வே அதிகாரிகளும், மாநில போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இது குறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரை- எழும்பூர் 4-வது புதிய ரெயில் பாதை முக்கியமானதாக உள்ளது. இதற்கான பணியை விரைவில் தொடங்க உள்ளோம். பயணிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல், வேளச்சேரி பறக்கும் ரெயில்களை சிந்தாதிரிப்பேட்டை அல்லது பூங்கா வரை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பூங்கா வரை பறக்கும் ரெயில் இயக்கப்பட்டால் பயணிகள் தாம்பரம்-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில்களில் ஏறி தாங்கள் போக விரும்பும் இடத்துக்கு செல்ல வசதியாக இருக்கும். எனவே பறக்கும் ரெயிலை பூங்கா வரை இயக்குவது பற்றியே ஆலோசித்து வருகிறோம். பயணிகளின் வசதி கருதி இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.