search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.
    • செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், இன்று 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

    வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனுவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    செல்வகணபதிக்கு 2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் அளித்த புகார் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது.
    • வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கியது. 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில் மொத்தம் 1403 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருப்பதால் மொத்த வேட்புமனு எண்ணிக்கை 1749 ஆக உள்ளது.

    40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் வேட்பு மனுவை பரிசீலனை செய்து வரும் தேர்தல் அதிகாரி சேலம் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

    2 இடங்களில் வாக்கு இருப்பதாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    உரிய விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறி வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார்.

    அதேபோல் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் மனோ ஆகியோரின் வேட்புமனுக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    பரஸ்பரம் ஆட்சேபணை தெரிவித்த நிலையில் 2 பேரின் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
    • குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி, தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல்மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

    தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழ்நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.
    • இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்தது மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காது உள்ளிட்ட காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் நடப்பு ஆண்டில் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாமல் போனது.

    இதனால் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியது.

    இந்நிலையில் இன்று கால்வாய் கரையோர மக்களின் கோரிக்கையை ஏற்று மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கரை கால்வாயில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இன்று முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் வெளியேற்றப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில் வருகிற 29-ந்தேதி முதல் புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி நாளை (28-ந்தேதி) முதல் வருகிற 1-ந்தேதி வரை 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதையொட்டி சேலம் புதிய பஸ்நிலையம், பெங்களூரு, சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும் இயக்கப்படுகின்றன.

    அதே போல ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவிற்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்திற்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருவிற்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களை அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையங்களிலும், இணைய தள முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து பயணிகள் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்து அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இல்லாத பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து சேலம் வடக்கு தொகுதிக்குட்பட்ட செவ்வாய்ப்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் இன்று அதிகாலை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் 70 கிலோ வெள்ளி கொலுசுகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, சேலம் கோட்டாட்சியர் அம்பாயிர நாதனிடம் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை கிண்டியைச் சேர்ந்த அணில் (30) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து, வெள்ளி கொலுசு சங்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கூறுகையில், உரிய ஆவணங்கள் இருந்தும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுக்க உள்ளதாகவும் கூறினர்.

    • கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர்.
    • கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு சூட்கேசில் அடைக்கப்பட்ட பிணம் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த பெண்ணின் உடல் அரை நிர்வாணமாக இருந்தது. முகம் அழுகிய நிலையில் அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது.

    போலீசார் விசாரணையில் பெண்ணின் உடல் இருந்த சூட்கேஸ் கோவையில் வாங்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த சூட்கேசை வாங்கியவர் யார் என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சூட்கேஸ் வாங்கிய நபர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பறவைக்கோட்டை பகுதியை சேர்ந்த நட்ராஜ் (வயது 32) என்பது தெரிய வந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

    நட்ராஜூக்கு திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அவர் கத்தார் நாட்டுக்கு வேலைக்கு சென்றார். அதே நாட்டில் நட்ராஜ் பணிபுரிந்த பகுதியில் தேனி மாவட்டம் முத்துலாபுரத்தை சேர்ந்த சுபலட்சுமியும் (33) வேலை பார்த்து வந்துள்ளார். சுபலட்சுமிக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவரிடம் விவாகரத்து பெற்று இருந்ததாக தெரிகிறது.

    இருவரும் தமிழர்கள் என்ற முறையில் அறிமுகமான நட்பு நாளடைவில் நெருக்கத்தை ஏற்படுத்தியது. வெளிநாட்டில் இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்ததுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இருவரும் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளனர். அதன்பிறகு கத்தார் நாட்டுக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் கோவையில் பீளமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    கள்ளக்காதலி சுபலட்சுமி பெயரை நட்ராஜ் கையில் பச்சை குத்தி உள்ளார். கோவையில் கணவன்-மனைவியாக கடந்த ஒரு ஆண்டாக வாழ்க்கை நடத்தி வந்த அவர்களுக்கு இடையே கடந்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த நட்ராஜ் அங்கு கிடந்த கம்பியை எடுத்து சுபலட்சுமியை தாக்கி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுபலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    உடனே தன்னுடைய நண்பர் கனிவளவனை வீட்டுக்கு அழைத்து நட்ராஜ் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அவர் உதவியுடன் சூட்கேஸ் ஒன்றை வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளனர்.

    பின்னர் வாடகை கார் ஒன்றை இவர்களே எடுத்தனர். டிரைவர் வேண்டாம் என்று கூறி விட்டு நட்ராஜூம், கனிவளவனும் பெண்ணின் உடல் இருந்த சூட்கேசை காரில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். உடலை எங்கு வீசினால் கண்டுபிடிக்க முடியாது என்று இருவரும் திட்டமிட்டனர். அதன்படி காரில் 2 நாட்களாக சுபலட்சுமி உடலுடன் சுற்றி திரிந்துள்ளனர்.

    அப்போதுதான் ஏற்காடு மலைப்பகுதிக்கு மனைவி, குழந்தைகளுடன் நட்ராஜ் சுற்றுலா வந்தது நினைவுக்கு வந்தது. அங்கு சென்று சுபலட்சுமி உடலை வீசினால் யாரும் கண்டுபிடிக்க முடியாது என நினைத்துள்ளார். அதன்படி கடந்த 1-ந் தேதி ஏற்காட்டுக்கு வந்துள்ளனர். அன்று இரவு 40 அடி மலைப்பாதை பகுதியில் சுபலட்சுமி உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை வீசி விட்டு சென்றுள்ளனர்.

    போலீசுக்கு பயந்து ஒரு வாரம் சொந்த ஊரான மன்னார்குடியில் இருந்த நட்ராஜ் அதன்பிறகு கோவையில் சுபலட்சுமியுடன் தங்கி இருந்த வாடகை வீட்டுக்கு வந்ததும், அங்கிருந்து வேலைக்கு சென்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

    உடனே போலீசார் நட்ராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் இருவரையும் கைது செய்து சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவிக்கப்பட்டு விட்டன.

    இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.

    சேலம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கிய அவர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து இன்று மாலை திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாங்கோவில் நவலூர் குட்டப்பட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.

    இதில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரிக்கிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகின்றனர்.

    • டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது குறித்து சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. டாக்டர் ராமதாஸ் வேடந்தாங்கல் பறவை போல அடிக்கடி கூட்டணியை மாற்றி கொண்டிருக்கிறார். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும், தண்ணீர் வற்றினால் சென்று விடும்.

    அப்படி ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி மாறிக்கொண்டு இருக்கும் கட்சியை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதுமட்டுமல்ல ராமதாஸ் ஒரு பேட்டியின்போது பா.ஜனதாவிற்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். தற்போது அந்த கட்சியில் இணைந்து அவரது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதாக கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியை ஆதரிக்கின்ற கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை கூட்டணி கட்சிகளை நம்பி இல்லை. கூட்டணி கட்சிகள் வந்தால் வரவேற்போம். அதே நேரத்தில் கூட்டணி கட்சிகள் வராவிட்டாலும் எங்களுடைய சொந்த பலத்தில் நிற்போம். நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். அ.தி.மு.க. பொன்விழா கண்ட கட்சி ஆகும். அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது, உயர்நிலைக்கு வந்தது. மேலும் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு அடித்தளம் போட்டது.

    எனவே நாங்கள் கூட்டணி கட்சிகளை நம்பி கட்சி நடத்தவில்லை.

    ஒரு ரூபாய் செலவு செய்கிறாரா? இல்லையா? என்பதை அண்ணாமலையை பின்தொடர்ந்து சென்று பாருங்கள். ஒரு ரூபாய் செலவு செய்யாமல் தேனீர், தண்ணீர் கூட குடிக்க முடியாது. அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தந்த கட்சி செலவு செய்வார்கள். தேர்தல் ஆணையமும் இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. தி.மு.க. ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஊழல் இல்லாத இடமே கிடையாது. போதைப்பொருள் விற்பனையை தி.மு.க. நிர்வாகிகளே செய்கின்றனர். அவ்வாறு இருக்கும் நிலையில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

    இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    • வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது.
    • வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.

    அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.

    • திருச்சியில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
    • திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

    இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.

    இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.

    தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

    ×