search icon
என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    வண்டலூர்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து, வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வெள்ளிக்கிழமை அன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
    • 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

    "ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    தாம்பரம்:

    சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ரெயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு செல்லப்படுவதாக பறக்கும் படையினருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது.

    இந்த பணம் நெல்லை தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்படுவதாகவும் தகவல் பரவியது.

    இதைத் தொடர்ந்து அந்த பணத்தை பிடிக்க பறக்கும் படையினர் அதிரடியாக களம் இறங்கினார்கள். நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்வதற்காக தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இதையடுத்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை கைப்பற்ற பறக்கும் படையினர் முடிவு செய்தனர்.

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8.40 மணி அளவில் தாம்பரம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு ரெயிலை நிறுத்தி சோதனை செய்வதற்காக பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தயார் நிலையில் இருந்தனர்.

    பறக்கும் படை அதிகாரியான செந்தில்பாலமணி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி, உதவி கமிஷனர் நெல்சன் மற்றும் போலீஸ் படையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    எஸ்-1 பெட்டியில் இருந்து எஸ்-10 பெட்டி வரைக்குள் ஏதாவது ஒரு ரெயில் பெட்டியிலேயே ரூ.4 கோடி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் பயணிப்பதாகவும் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவலை தெரிவித்தவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து பறக்கும் படையினர் சுமார் ½ மணி நேரம் ரெயிலை நிறுத்தி பயணிகளின் உடமைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது எஸ்-7 பெட்டியில் பயணம் செய்த 3 பேர் வைத்திருந்த 6 பைகளில் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பறக்கும் படை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அந்த பணத்தை அப்படியே பைகளோடு கைப்பற்றி பறக்கும் படை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். தாம்பரம் போலீஸ் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்போடு பைகளை கொண்டு சென்ற பறக்கும் படையினர் பணம் எண்ணும் எந்திரத்தின் மூலமாக எவ்வளவு பணம் உள்ளது? என்று எண்ணிப் பார்த்தனர்.

    அப்போது அதில் ரூ.3 கோடியே 99 லட்சம் பணம் இருந்தது. இந்த பணத்தை தாம்பரம் தாசில்தார் நடராஜனிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ரூ.4 கோடி பணத்தை எடுத்துச்சென்ற 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களது பெயர் சதீஷ், நவீன், பெருமாள் என்பது தெரிய வந்தது. இவர்களில் சதீசும், நவீனும் சகோதரர்கள் ஆவர். சதீஷ் பா.ஜனதா கட்சி நிர்வாகியாக உள்ளார்.

    இருவரும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் வேலை செய்து வருவதும், பெருமாள் என்பவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

    3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் நெல்லை தொகுதி தேர்தல் செலவுக்காக பணத்தை கொண்டு செல்வதாக கூறினார்கள். சட்ட விரோதமாக ரெயிலில் கடத்தப்பட்ட இந்த பணத்துக்கு கணக்கு ஏதும் இல்லாத நிலையில் 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.

    நெல்லையில் போய் இறங்கியதும் அங்கு ஒருவர் வருவார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள் என்று கூறியே எங்களிடம் இவ்வளவு பணமும் கொடுத்து அனுப்பப்பட்டிருப்பதாகவும் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து இந்த பணத்தை நெல்லையில் வாங்குவதற்கு தயாராக இருந்த நபர் யார்? என்பது பற்றியும், பணம் எங்கிருந்து எடுத்து வரப்பட்டது? என் பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனின் ஓட்டலில் இருந்தே ரூ.4 கோடி பணமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் நெல்லை தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று பறக்கும் படை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து ரூ.4 கோடி பணத்தின் முழு பின்னணியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறார்கள்.

    இதன்படி சென்னையில் 2 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நயினார் நாகேந்திரனின் உறவினரான முருகன் என்பவர் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

    அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள புளுடைமண்ட் ஓட்டலிலும் இன்று பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இந்த 2 இடங்களிலும் மேலும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ரூ.4 கோடி பணம் எப்படி ஒரே இடத்துக்கு கொண்டு வரப்பட்டது? எங்கெல்லாம் வசூல் செய்யப்பட்டது? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன. சென்னை கிரீன்வேஸ் ரோடு, யானைக்கவுனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பணத்தை வாங்கி மொத்தமாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஓட்டலில் வைத்து பைகளில் அடுக்கி உள்ளனர்.

    பின்னர் ரெயில் மூலமாக பணத்தை எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டு கைதான 3 பேருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொடுக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    • ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார்.
    • கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில் பூதத்தாழ்வாருக்கு, ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரமத்தின் 12வது பீடாதிபதி ஸ்ரீ மத் ஆண்டவன் வராக மஹா தேசிகன் ரத்தின அங்கியை உபயமாக வழங்கினார். பின்னர் ரத்தின அங்கி அலங்காரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்று தரிசனம் செய்தார்.


    அறநிலையத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் சக்திவேல், மேலாளர் சந்தானம் மற்றும் பட்டாச்சாரியார்கள் வரவேற்றனர். செப்பு உலோகத்தில் தங்கமுலாம் பூசப்பட்டு, செம்பு கற்கள் பதித்து செய்யப்பட்டுள்ள இந்த விலை உயர்ந்த ரத்தின அங்கியை, ஆழ்வாரின் அவதார உற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய உற்சவங்களில் அலங்கார சேவையாற்ற பயன்படுத்த உள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தம்.
    • ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, ஜோத்பூர் நாகர்கோவில் விரைவு ரயில், தூத்துக்குடி விரைவு ரயில், ராமேஸ்வரம் விரைவு ரயில் மற்றும் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை மதுராந்தகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

    சிக்னல் கோளாறு காரணமாக ரெயில்கள் புறப்படாமல் இருப்பதால், பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் கூடுதல் சுங்ககட்டணம் செலுத்தி செல்ல வேண்டும்.
    • ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்கள் மாற்றி அமைப்பது வழக்கம்.

    இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலில் ஏப்ரல்-1ந் தேதி முதல் அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சவாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

    இதில் ஒரு முறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும், மாதாந்திர கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரையும் உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதில் பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப்பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்துக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஒரு மாதத்தில் 50 ஒரு வழிப்பயணத்துக்கு மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.45 முதல் ரூ.200 வரை உயர்த்தப்பட்டது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை அதிகரிக்கப்பட்டது. ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழிப்பயணத்தில் ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாதாந்திர கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரையும், தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் ரூ.10 வரையும் உயர்த்தப்பட்டது.

    பரனூர், ஆத்தூர் உள்ளிட்ட மொத்த 7 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.

    எனவே நாளை முதல் வாகன ஓட்டிகள் கூடுதல் சுங்ககட்டணம் செலுத்தி செல்ல வேண்டும். மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் கட்டணம் உயர்வு இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
    • அப்போது, இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க.தான் என கூறினார்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அ.தி.மு.க. சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி பற்றி தி.மு.க. ஏன் கவலைப்பட வேண்டும்?

    பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகும் கள்ளக் கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். யாருடனும் கள்ளக் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் அ.தி.மு.க.விற்கு இல்லை.

    தி.மு.க.வில் ஸ்டாலின் குடும்பத்தினரை தவிர வேறு யாராவது பதவிக்கு வர முடியுமா?

    இந்தியாவிலேயே ஜனநாயகத்துடன் இயங்கும் கட்சி அ.தி.மு.கதான்.

    அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை தி.மு.க. ஆட்சியில் உயர்ந்துவிட்டன.

    கொரோனா காலத்தில் கூட அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயராமல் பார்த்துக் கொண்டோம் என தெரிவித்தார்.

    • சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது.

    செங்கல்பட்டு:

    சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிட்டுள்ளது. கட்டண உயர்வு வரும் ஏப்.1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

    ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணம் ஆகியவற்றுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஒரு மாதத்தில் 50 ஒற்றை பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.60 முதல் ரூ.190 வரை உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் தனியார் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்.1 முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பூதத்தாழ்வார், நரசிம்மர், ராமன், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், கருடன் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 16ந் தேதி பங்குனி உத்திர உற்சவம் வெகு விமரிசையாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, தினமும் நில மங்கை தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர், கோவில் உள் பிரகாரத்தில் நிலமங்கை தாயார் சுற்றி வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், பங்குனி உத்திரம் நிறைவு நாளான நேற்று காலை பட்டாச்சாரியார்கள் மூலம் யாகம் வளர்த்து பெருமாள், தாயார், பூதத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டது., இதையடுத்து, மாலை 6 மணிக்கு நான்கு ராஜவீதிகள் வழியாக ஸ்ரீதேவி, பூ தேவியுடன், திருவீதி உலாவந்து தலசயன பெருமாள், நிலமங்கை தாயாருக்கு மாலை மாற்றிய திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    தாம்பரம்:

    சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள சேலையூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜான் செல்வராஜ். இவரது சொந்த ஊர் திருச்சி ஆகும். சென்னை மடிப்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்த அவர் அங்கிருந்தபடி சேலையூர் போலீஸ் நிலையத்துக்கு பணிக்கு சென்று வந்தார்.

    இவர் போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் இவர் அடிக்கடி மருத்துவ விடுப்பில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்தநிலையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றிருந்தார். அதன் பிறகு அவர் இதுவரை பணிக்கு திரும்பவில்லை.

    இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்காளதேசத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலையூர் போலீஸ் நிலையத்திலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வங்காளதேச எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக கூறி அவரை வங்காளதேச ராணுவ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து கோர்ட்டுகளுக்கு குற்றவாளிகளை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்ட போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜுக்கு, சட்டவிரோத கும்பலுடன் தொடர்பு எற்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் பிடிபடும் குற்றவாளிகளையும் கோர்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்படி அழைத்து செல்லும்போது அவருக்கு போதைப்பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாரின் மத்தியில் எழுந்துள்ளது.

    கைதான சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜிடம் வங்காளதேச ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்திய பிறகுதான் இது தொடர்பான விரிவான விவரங்கள் வெளிவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் இதற்கு முன்பு சென்னை மடிப்பாக்கம், தேனாம்பேட்டை போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றியுள்ளார். கடந்த 2 வருடமாக அவர் சேலையூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி டோல்கேட் சந்திப்பு பகுதியில், போலீஸ்காரர் ராஜ சேகர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அப்பகுதி மீன் கடை அருகில் 2 திருநங்கைகள் வாகன ஓட்டியிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    போலீஸ்காரர் ராஜ சேகர். தகவல் அறிந்து அங்கே சென்று இருவரையும் விசாரித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த திருநங்கைகள் இருவரும் போலீஸ்காரர் ராஜசேகரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தாக்கினர். மேலும் கல்லாலும் தாக்க முயன்றனர். அந்த நேரத்தில் திருக்கழுக்குன்றம் நோக்கி வந்த அரசு பஸ்சையும் வழிமறித்து அதன் முன்பு அமர்ந்து கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதுபற்றி அறிந்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே ரகளையில் ஈடுபட்ட 2 திருநங்கைகளையும் விசாரணைக்கு அழைத்தனர்.

    அவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்ட திருநங்கைகள் தாங்கள் வந்திருந்த மோட்டார் சைக்கிளில் கல்பாக்கம் நோக்கி தப்பி சென்று விட்டனர். திருநங்கைகள் தாக்கியதில் காயம்அடைந்த போலீஸ்காரர் ராஜசேகருக்கு மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ரகளையில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்கல்பட்டு:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது21). செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இரவு அவர் உடன் படிக்கும்

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் கிருஷ்ணன், கோகுல கண்ணன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். செங்கல்பட்டு, ராட்டிணங்கிணறு பகுதியில் இருந்து மேலமையூர் நோக்கி அண்ணா நகர் பிரதான சாலையில் சென்று கொண்டு இருந்தபோது திருமணி ஜானகிபுரம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான நந்தகோபால் என்பவர் மோட்டார் சைக்கிளில் எதிரே வந்தார்.

    திடீரென சதீஷ் மற்றும் நந்தகோபால் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்குநேர் அதிவேகமாக மோதியது. இதில் இரண்டு மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்கள் விபத்து நடந்த இடம் அருகே சாலையில் நடந்து சென்ற திருமணியை சேர்ந்த மேஸ்திரி தணிகாசலத்தின் (46) மீதும் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த சட்டக்கல்லூரி மாணவர் சதீஷ், மேஸ்திரி தணிகாசலம், ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாய் கிருஷ்ணன், கோகுல், பெயிண்டர் நந்தகோபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியான 2 பேரின் உடல்களும் அதே ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×