search icon
என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • கிண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்றனர்.
    • கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தூத்துக்குடி:

    மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சென்னை கிண்டியில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போராட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    கடலூர் மாவட்டத்தில் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

    சேலம் மாவட்டம் கோட்டை மைதானம் பகுதியில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் ஒருங்கிணைந்த திமுக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

    • 442-வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி தேரோட்டம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 5.45 மணிக்கு 2-ம் திருப்பலியும், நடை பெற்றது. அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும், 8.30 மணிக்கு பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

    அப்போது தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பாட்டிருந்த படகில் இருந்து சைரன் ஒலி இசைக்கப்பட்டது. சமாதானபுறாக்கள் பறக்கவிடப்பட்டது.

    விழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகர் மேயர் ஜெகன் பெரியசாமி உட்பட ஆயிரகாக்கானோர் கலந்து கொண்டனர்.

    பகல் 12 மணிக்கு முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய மாதா அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை, ஆசீர் ஆகியவை நடைபெறுகிறது,

    திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடிக்கு பல ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்துள்ளனர். வருகிற 5-ந் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவிழாவில், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த தேவாலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த தேவாலயமானது சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த தேவாலயத்தில் சாதி, மத பாகுபாடு இன்றி தூத்துக்குடி மக்கள் அனைவரும் கொண்டாடும் திருவிழா ஆகும். இந்த ஆண்டு 442-வது ஆண்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழா நாட்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ-மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும்.

    இந்த கொடியேற்ற திருவிழாவை முன்னிட்டு 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்,5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஆங்காங்கே சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 

    • சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கல்லாமொழி கிராம கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து தூத்துக்குடி 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், செல்வகுமார், ராமச்சந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் இருதய ராஜ்குமார், இசக்கிமுத்து,முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லாமொழி கடற்கரை வழியாக இன்று அதிகாலை 2 மணிக்கு சந்தேகத்திற்கிடமாக வந்த லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 106பீடிஇலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    அவற்றை இலங்கைக்கு படகில் கடத்துவதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் ஆரக்கோட்டை காரைக்குடியை சேர்ந்த அருள் விஜயகாந்த் (வயது 35) மற்றும் நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மா சாலையைச் சேர்ந்த பாண்டியன் (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் பைபர் படகையும், வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 75 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
    • விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

    இங்கு நாள் தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என தென் மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆடி மாத பவுர்ணமி திதியை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இவர்கள் திருச்செந்தூர் கடல் மற்றும் நாழி கிணறு ஆகிய புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை நேரம் நெருங்க, நெருங்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் கோவில் வளாகம் முழுவதும் சுற்றி வந்து கூட்டத்தை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

    பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். அவர்கள் தரிசனம் செய்ய தனி பாதை, கடற்கரை செல்வதற்கு தனி பாதை அமைக்கப் பட்டுள்ளது.

    பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம், கழிப்பறை கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

    பக்தர்கள் தரிசனம் முடித்து இரவு கடற்கரை மணலில் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் நிலா சோறு சாப்பிட்டு இரவு முழுவதும் அங்கேயே தங்கினர்.

    இன்று அதிகாலை நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வந்த வாகனங்களை நிறுத்த போலீசார் தெப்பக்குளம் அருகிலும், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே உள்ள இடத்திலும், ஐ.எம்.ஏ. ஹால் அருகிலும், தினசரி மார்க்கெட் பகுதி என 6 இடங்களில் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

    இந்நிலையில் விடுமுறை தினமான இன்றும் காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடினர். பின்னர் அவர்கள் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    • பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கடைக்காரருக்கு திடீரென புது விதமான யோசனை தோன்றியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மெஞ்ஞானபுரத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் கரும்புச்சாறு பிழிந்தெடுத்து விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் அவ்வப்போது வேலைக்கு ஆட்கள் தேவை என பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கும்.

    அதன்படி, வேலைக்கு இளைஞர்கள் சிலர் வருவார்கள்.

    சில நாட்களில் நின்று விடுவார்கள்.

    இந்த நிலையில் கடைக்காரருக்கு திடீரென புது விதமான யோசனை தோன்றியுள்ளது.

    அதன் விளைவாக வேலைக்கு ஆட்கள் தேவை என வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், "கரும்புச் சாறு கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சம்பளம் ரூ.18 ஆயிரம். வேலை நேரம்- காலை 8.30 மணி முதல் இரவு 9.30 மணிவரை. கல்வி தகுதி- பி.இ., பி.ஏ., பி.எஸ்சி., வயது வரம்பு 25-ல் இருந்து 40 வரை" எனவும், தொடர்புக்கு செல் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த பேனர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில், பணியில் ஈடுபட்டிருந்த 25 பெண்கள் மூச்சு திணறி அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

    மயக்கமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்ட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    தூத்துக்குடியில் இந்த ஆண்டு 442வது ஆண்டு பனிமயமாதா பேராலய திருவிழா கொண்டாடப்படுகிறது.

    1500 ஆண்டுகள் பழமையான இந்த பேராலயம் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்டது.

    இந்த பேராலயத்தில், ஆண்டு தோறும் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    அதன்படி, திருவிழா, ஜூலை 26ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்நிலையில், 10ம் நாளான வரும் ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூய பணிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட்.10 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்று தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது.
    • வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2-ம் படை வீடாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆனி வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் ஏராளமான மக்கள் சுவாமி தரினம் செய்தனர்.

    இந்த விழாவில் ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜா, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த பின்னர், கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அப்போது ஏராளமானோர் நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க ஆர்வம் காட்டினர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்தார்.

    இதை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சிலர் செல்பி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இதனால் சற்று தள்ளி நின்றபடியே தூய்மை பணியாளர்கள் நடிகை ரோஜா உடன் செல்பி எடுத்தனர்.

    இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படி செய்கிறார் ரோஜா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த பலரும் நடிகை ரோஜாவை விமர்சித்து வருகிறார்.

    • மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையா, இவரது மகன் மாடசாமி (வயது38).

    இவர் சொந்தமாக வேன் வைத்து தனியார் நிறுவனத்திற்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் ஏற்றி, இறக்கி வந்துள்ளார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகாஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் மாடசாமி நேற்று காலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்குப்பதிவு செய்து மாடசாமியை கொலை செய்தது யார்? எதற்காக அவரை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆனி வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    வருஷாபிசேகத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த மூலவர், வள்ளி, தெய்வானை அம்மாள் கும்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதேபோல் குமரவிடங்கபெருமான் சன்னதியில் சண்முகர் கும்பத்திற்கும், பெருமாள் சன்னதியில் பெருமாள் கும்பத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட கும்பங்கள் கோவில் விமான தளத்திற்கு எடுத்து வரப்பட்டு காலை 10.15 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் ஆகிய விமான கலசத்திற்கு புனித நீர் உற்றப்பட்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாள் விமான கலசத்திற்கும் வருஷாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமானும், வள்ளியம்பாளும் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இன்று இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாது.

    விழாவில் கோவில் இணை ஆணையர் கார்த்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து விமர்சித்தும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையிலும் பேசுகிறார்.
    • தலைவரின் கண் அசைவுக்காகத்தான், கட்சி தொண்டர்கள் பொறுமை காக்கிறார்கள்.

    தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது,

    மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சீமானின் பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது. தலைவர் கலைஞர் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்.

    தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர். இளைஞர்களுக்காக முதல் தலைமுறை பட்டதாரி திட்டம், கல்வி கடன் ரத்து, நுழைவு தேர்வு ரத்து, கணினி கல்வி வளர்ச்சி என அவர் கொண்டு வந்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    அவரை பற்றி இழிவாக பேசுவதை திமுக கண்டிக்கிறது. கட்சி தலைவர் என்பவர், ஆதரவாளர்களோ நிர்வாகிகளோ தவறாக பேசும் போது கண்டிக்க வேண்டும். மாறாக தலைவர் கலைஞர் குறித்து பேசும் போது இவர் சிரித்து கொண்டு இருக்கிறார். அவர் வழி நடத்த தெரியாத நிலையில் இருக்கிறார்.

    நமக்கு முன்பாக ஒன்று பேசுகிறார். பின்பு அந்த கருத்தை மாற்றி பேசுகிறார். கலைஞர் ஓய்வின்றி உழைப்பவர் எனவும், ஆளுமை எனவும் கலைஞர் மறைவின் போது தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். தற்போது வேறு விதமாக பேசுகிறார்.

    திமுக தொண்டர்களை பொறுத்தவரையிலும், தற்போதைய தலைவரின் கண் அசைவுக்காகதான் காத்திருக்கிறார்கள். பொறுமையாக இருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இருக்கிறோம். முதலமைச்சராக தலைவர் பொறுப்புடன் இருக்கிறார். ஆகவே பொறுமையாக இருக்கிறோம்.

    அவதூறு குற்றச்சாட்டு சொல்லும் போது கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., 'சீமான் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன் சாதி பேரை சொல்லி இழிவாக பேசுகிறார்' என, அருண் என்பவர் புகார் அளித்ததன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

    ஆனால் கருத்துரிமை பறிக்கப்படுவதாக சீமான் சொல்கிறார். பட்டியலின பட்டியலில் 15வது இடத்தில் அந்த சொல் இருப்பது சீமானுக்கும் தெரியும். திரைப்படத்தில் இந்த சொல்லை பயன்படுத்தியதற்காக சீமான் சில ஆண்டுகளுக்கு முன்பு வருத்தம் தெரிவித்ததை அனைவரும் அறிவார்கள். ஆனாலும் வாய்க்கு வந்தது போல் பேசி இருக்கிறார்கள். மீண்டும் அதே கருத்தை பேசி கைது செய்து பாருங்கள் என சீமான் பேசுவது, ஒரு தலைவருக்கான பண்பு இல்லை.

    சாதி, மத ரீதியிலான பிரச்சினைகளை உருவாக்கும் வகையில் சீமானின் பேச்சு இருக்கிறது. "நாமெல்லாம் தேவனுடைய பிள்ளைகள் என நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் பிள்ளைகள் ஆகி நீண்டகாலம் ஆகி விட்டது" என ஒரு அறிக்கையில் பழி சொல்லி பேசி இருக்கிறார்.

    துாய்மை பணியாளர்கள் எல்லாம் தெலுங்கில் இருந்து வந்தவர்கள் என பேசி இருக்கிறார். தமிழ், தமிழ்குடி என பேசும் இவர்கள் எப்படி சாதி பெயர் சொல்லி இழிவாக பேசுகிறார்கள்? சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அவர் பேசுவதை திமுக கண்டிக்கிறது.

    இன்று ஒன்று பேசுகிறார். அடுத்தாண்டு மாற்றி பேசுகிறார். ஆகையால் அவரது மனநிலையை சோதித்து கொள்ள வேண்டும்.

    தனிப்பட்ட முறையில் தவறான சொற்களை பயன்படுத்தி சீமான் பேசுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் அமைகிறது. இது ஏற்கதக்கதல்ல. நடைமுறைக்கு சாத்தியமில்லாததை அடுக்கு மொழியில் பேசி தமிழ் சமுகத்தை தவறாக வழி நடத்த முயற்சிக்கிறார்.

    கட்சி நடத்த எங்கிருந்து அவர் பணம் வாங்குகிறார் அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிறுத்தி உலகளவில் நன்கொடையை பெற்று வருகிறார்.

    தமிழ்நாட்டில் திமுக எதிர்ப்பை காட்டிக் கொள்வதற்காக திமுகவையும், தலைவரையும் அவதூறாக பேசுவதாக தெரிகிறது. சீமான்

    நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடுத்தனமாக பேசக்கூடாது. அரசியல் முதிர்ச்சி இல்லாத தலைவராக தெரிகிறார்.

    பச்சோந்தி போல் ஒருநாள் ஒரு கருத்தை ஆதரித்தும், பின்பு எதிர்த்தும் பேசி வருகிறார். சீமான் அரசியல் தலைவருக்கே

    தகுதியானவர் அல்ல. எங்களது தலைவர் குறித்து பேச அவருக்கு அருகதை கிடையாது எனவும் கூறினார்.

    • கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.
    • மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 70 ஆண்டுகள் தமிழ்நாட்டில் இருந்த சிறந்த ஆளுமை என கலைஞரை புகழ்ந்த சீமானே இப்போது கலைஞர் குறித்து அவதூறாக பேசுகிறார்.

    * அடுக்குமொழியில் பேசி தமிழ் சமூகத்தை சீமான் தவறாக வழிநடத்துகிறார்.

    * கருத்துரிமை என்கிற பெயரில் உண்மைக்கு புறம்பாக பேசுவதை ஏற்க முடியாது.

    * கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுவது தலைவருக்கான அழகல்ல.

    * சீமான் ஒரு அரசியல் அரைவேக்காடு, பச்சோந்தி.

    * இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சாத்தானுடைய பிள்ளைகள் என சீமான் பேசியிருந்தார்.

    * சட்டம், ஒழுங்கு பிரச்சனை, சாதி, மத ரீதியான பிரச்சனை உருவாக்குவதாகவே அவரது பேச்சு உள்ளது. அவரது பேச்சை திமுக வன்மையாக கண்டிக்கிறது.

    * மாற்றி மாற்றி பேசும் சீமான் தனது மனநிலையை பரிசோதித்து கொள்வது நல்லது என்று கூறினார்.

    ×