search icon
என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
    • பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை சந்தித்து கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டேன்.

    வெளிநாட்டு வாழ் குமரி மாவட்டத்தின் மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவை தேவை என்பதை எடுத்து கூறினேன்.


    அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.

    • இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது.
    • சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி வியாபாரமும் நடைபெற்று வருவதால் காலை முதல் மதியம் 1 மணி வரை இந்த மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் நெருக்கடியாக உள்ளது போன்ற காரணங்களை கூறி மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தபோது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீன் மார்க்கெட்டை மாற்றுவதற்காக சென்றனர். அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மார்க்கெட்டை மாற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள், ஜே.சி.பி. எந்திரம் மூலமாக வியாபாரிகள் கடை வைக்க முடியாத அளவிற்கு மணல்களை கிளறி விடும் நடவடிக்கையை எடுத்தனர். அவர்களுடன் வாக்குவாதம் செய்த வியாபாரிகள், தோண்டப்பட்ட குழிகளில் இறங்கி நின்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட வியாபாரிகள், மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துறை அதிகாரிகளை சந்திக்கப் போவதாக கூறினர். அதன்படி அவர்கள் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இதில் இருளப்பபுரம் சந்தை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பேரில் இன்று சில வியாபாரிகள் சந்தைக்கு வந்து கடை அமைத்தனர். இருப்பினும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    கடை அமைத்துள்ள வியாபாரிகள் கூறுகையில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக சந்தை செயல்பட்டு வருகிறது. தற்காலிக அனுமதியை நிரந்தரமாக பெற முயன்று வருகிறோம். அரசு எங்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    • கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது.
    • நைவேத்தியம் தயாரிக்க தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மிகவும் பழமையான கோவில் ஆகும். இந்த கோவிலின் உள் பிரகாரத்தில் வடக்கு பக்கம் மிகவும் பழமையான புனிதமான தீர்த்த கிணறு உள்ளது. இந்த கிணறு கடற்கரையில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ள போதும் உப்பு நீராக இல்லாமல் நல்ல குடிநீராக அமைந்து உள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் தினமும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை கோவில் மேல் சாந்தி அல்லது கீழ் சாந்தி குடத்தில் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கோவில் மூலஸ்தானத்துக்கு முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் இருந்து பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வழியாகத் தான் கோவில் மேல் சாந்திகள் இந்த தீர்த்த கிணற்றுக்குள் சென்று அபிஷேகத்துக்குரிய புனித நீர் எடுத்து வருவதற்கான வழி உள்ளது.

    மின்விளக்கு வசதி இல்லாத இருள் சூழ்ந்து கிடக்கும் இந்த சுரங்கப் பாதை வழியாகத்தான் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு நடக்கும் அபிஷேகத்துக்குரிய புனித நீரை கிணற்றில் இருந்து குடத்தில் மேல்சாந்திகள் எடுத்து வருவார்கள். மேலும் அம்மனுக்கு பூஜைக்கு பயன்படுத்துவதற்குரிய புனித நீரும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதுமட்டுமின்றி அம்மனுக்கு தினமும் காலையில் நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், அரவணை பாயாசம், பால் பாயாசம், பொங்கல் போன்றவைகளை தயாரிப்பதற்காகவும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் மடப்பள்ளிக்கு எடுத்து கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

    அதேபோல இரவு அம்மனுக்கு நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் அப்பம், வடை போன்ற பதார்த்தங்கள் தயாரிப்பதற்கும் இந்த தீர்த்த கிணற்றில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி வெளியூர்களில் உள்ள கோவில்களில் நடக்கும் கும்பாபிஷேகம், வருஷாபிஷேகம், திருவிழா, கொடை விழா மற்றும் சுப காரிய நிகழ்ச்சிகளுக்கு இந்த தீர்த்த கிணற்றில் இருந்துதான் குடங்களில் புனித நீர் எடுத்து பகவதி அம்மனின் காலடியில் வைத்து பூஜை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

    இந்த தீர்த்த கிணறு குப்பை கூழங்கள் விழுந்து மாசுபட்டு விடக்கூடாது என்பதற்காக கிணற்றின் மேல் பகுதியில் இரும்பு கம்பி வலைகளால் மூடப்பட்டு உள்ளது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த தீர்த்த கிணற்றில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பணம், காசு மற்றும் தங்கம், வெள்ளி போன்றவைகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக காசி, ராமேசுவரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு வரும் வடமாநில பக்தர்கள் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மற்றும் பகவதி அம்மன் கோவிலில் உள்ள தீர்த்த கிணற்றில் அதிக அளவில் பணம் காசுகளை காணிக்கையாக கொண்டு வந்து கொட்டி வணங்கி செல்கிறார்கள்.

    பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம் மற்றும் காசுகள் இந்த தீர்க்கக் கிணற்றின் மேலே உள்ள கருங்கற்களால் ஆன தளத்தில் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக போடும் பணம், காசுகள் இந்த கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இதுவரை கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டு எண்ணப்படவில்லை.

    இந்த நிலையில் கோவிலில் ஆய்வு செய்ய வந்த கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இந்த தீர்த்த கிணற்றை பார்வையிட்டார். அப்போது தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகளை எண்ண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்த்த கிணற்றுக்கு செல்லும் சுரங்க பாதையில் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தீர்த்த கிணற்றில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் திறந்து எண்ண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
    • கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.

    கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜருக்கு ஆயிரம் அடி உயர சிலை நிறுவ வேண்டும் என்று பாராளுமன்றத்தில் விஜய்வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருந்தலைவர் காமராஜர் நாட்டிற்கு செய்த நற்பணிகளை போற்றும் வகையில் அவருக்கு கன்னியாகுமரியில் ஆயிரம் அடி உயரத்திற்கு சிலை ஒன்றினை நிறுவ வேண்டும் என்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் பாராளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பினார்.

    பாராளுமன்றத்தின் 377-வது விதியின் கீழ் இன்று கோரிக்கையை சமர்ப்பித்த விஜய்வசந்த் எம்.பி தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்விகண் திறந்த வள்ளல் கர்மவீரர் காமராஜர் நாட்டுக்கு செய்த சேவைகளை உலகிற்கு எடுத்து சொல்லும் வகையில் கன்னியாகுமரியில் ஆயிரம் அடி சிலை ஒன்றினை நிறுவ வேண்டும். இந்தச் சிலை பெருந்தலைவரின் புகழை பரவ செய்வதுடன் கன்னியாகுமரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும்.

    இந்த சிலை அமையும் பட்சத்தில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை அது ஈர்த்து உள்ளூர் வணிகத்தை பெருக செய்து நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள் இதனால் பயனடைவார்கள்.

    மேலும் கட்டுமான தொழில் மூலம் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் இந்த சிலையை நிறுவிய பின்னர் வணிக ரீதியாகவும், வேலை வாய்ப்புகள் பெருகும் வகையிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு கன்னியாகுமரியின் மற்றுமொரு பரிணாம வளர்ச்சியை நாம் காண வழி வகை செய்யும்.

    மேலும் இந்த சிலையின் கீழ் பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றினையும் அமைக்க வேண்டும்.

    இந்த சிலை அமைக்கும்போது சுற்றுச்சூழல் மாசுபடாத வகையிலும் கடல் சூழலையும், கடல் உயிரினங்களையும் பாதிக்காத வகையில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொண்ட பின் இதனை கட்ட வேண்டும்.

    பெருந்தலைவர் காமராஜரின் இணை இல்லா சரித்திரத்தை உலகெங்கும் உள்ளவர்கள் அறியும் வகையில் இந்த சிலையை நிறுவ அரசு முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து.

    தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக கன்னியாகுமரி கடல்பகுதி விளங்குகிறது. இங்கு தினமும் பல நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து செல்கின்றனர்.

    அந்த வகையில், கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அங்கு தியானம் செய்யும் இடம் மற்றும் திருவள்ளுவர் சிலை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்கின்றனர்.

    இந்த நிலையில், கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள நீர்மட்டம் தாழ்வின் காரணமாக விவேகானந்தர் மண்டபத்திற்கான சுற்றுலா படகு சேவை இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கடலின் நீர்மட்ட தன்மையைப் பொறுத்து காலை 11.30 மணியளவில் படகு போக்குவரத்து சேவை தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்த அரிவிப்பு பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.

    • ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    • திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கோடம்பாக்கம் வட்டார நாடார் சங்கத்தின் ஏழாம் ஆண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.


    கோடம்பாக்கம் நாடார் சங்க தலைவர் மாம்பழம் ராஜேந்திரன் நாடார் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.

    முன்னதாக கோடம்பாக்கம் நாடார் சங்க நிர்வாகிகளில் ஒருவரான மறைந்த டாக்டர் சபாபதி அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு உதவி வழங்கினோம்.


    இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பால் கனகராஜ் திரைப்பட நடிகர் ஜீவா தங்கவேல் ஜாக்குவார் தங்கம் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்த்ராஜ் நாடார், பொதுச்செயலாளர் சந்திரசேகர் நாடார் கோடம்பாக்கம் நாடார் சங்க காப்பாளர் ஜார்ஜ் நாடார், முன்னாள் தலைவர் ஐ கே ரூபன் நாடார், சாந்தகுமார் நாடார் சங்க ஆலோசகர் ரூபன் நாடார் துணைத்தலைவர் மணி நாடார் சுரேஷ் குமார் நாடார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று முன்னதாக பம்மல் நாடார் பேரவை சார்பில் குடும்ப விழா மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடார் பேரவை தலைவர் வி எஸ் கணேசன் நாடார் தலைமையில் நடைபெற்றது.


     இந்த நிகழ்ச்சியில் பேரவை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு காமராஜர் புகழ் பாடினேன்.

    • கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது.
    • 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள அமராவதியை சேர்ந்தவர் மகேஷ்(வயது38). வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்த இவர், தனது மனைவி ஷோபியுடன் தக்கலையில் உள்ள வட்டம் அண்ணா நகரில் ஒரு வீட்டின் மாடியில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் மகேஷ் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு முதலில் திருமணமாகி மனைவி பிரிந்து விட்டதும், அதன்பிறகு விமானத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் சென்னையை சேர்ந்த ஷோபி என்பவரை 2-வது திருமணம் செய்திருப்பதும் தெரியவந்தது.

    ஷோபி தனது பெற்றோரை பார்க்க சென்னை சென்றிருந்த நேரத்தில் தான் மகேஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்தது யார்? என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். சம்பவ இடத்திலும், மகேசின் வீட்டிலும் மது பாட்டில்கள் கிடந்ததால், அவர் நண்பர்களுடன் மது அருந்தி இருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதினர்.

    அதனடிப்படையில் கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தியதில் திருவிதாங்கோடு மல்லன்விளையை சேர்ந்த மெக்கானிக் பெனிட்(27), பொற்றைகாட்டுவிளை பெயிண்டர் திரேன்ஸ்(23), மல்லன்விளை பிபின் ஜேக்கப்(23) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.

    கேரளா மற்றும் சென்னைக்கு விரைந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில் மகேசின் உறவினர்கள் நேற்று தக்கலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் கூறினர்.

    அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், மகேஷ் உடல் வைக்கப்பட்டு இருந்த ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் மகேஷ் கொலையில் தேடப்பட்ட பிபின் ஜேக்கப், கோவையில் பதுங்கிருப்பது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படையினர் கோவை விரைந்தனர். அவர்கள் பிபின் ஜேக்கப் தங்கியிருந்த வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்தனர்.

    பின்பு வீட்டுக்குள் இருந்த பிபினை கைது செய்தனர். கைது செய்த அவரை தனிப்படை போலிசார் இன்று காலை தக்கலைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    பிபின் ஜேக்கப் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
    • மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில பாரத தலைவர் மோகன் பகவத் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அங்கு விவேகானந்த கேந்திராவுக்கு செல்லும் அவருக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் கேந்திர நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். இரவு அங்கு தங்குகிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் விவேகானந்த கேந்திர பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் அங்குள்ள வளாகத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவரை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மோகன் பகவத் இரவு விவேகானந்த கேந்திராவில் தங்குகிறார். 24-ந் தேதி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் அவர் கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் பார்வையிடுகிறார். அன்று இரவு கன்னியாகுமரியில் தங்கும் அவர் 25-ந் தேதி காலை 10 மணிக்கு கார் மூலம் திருவனந்தபுரம் சென்று விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.

    மோகன்பகவத் வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிறந்தநாள் கொண்டாடினார்.
    • கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட விஜய்வசந்த் அமோக வெற்றி பெற்றார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனவர் விஜய்வசந்த். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு விஜய்வசந்த் முகநூல் பதிவு மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

    இத்துடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தலைவர் திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் தலைமையில் அவரது திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

    • ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    குழித்துறை:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 23 புதிய அரசு பஸ்கள் இயக்கத்தை அமைச்சர் சிவசங்கர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பஸ்சில் சிறிது தூரம் பயணம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் இயக்கப்படுகின்ற பழைய பஸ்களை மாற்றி 7700 புதிய பஸ்கள் வாங்க பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டு 23 புதிய பஸ்கள் இன்று துவக்கி வைத்துள்ளோம்.

    இந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் 300 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும், கலைஞர் ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14 ஆயிரம் பஸ்கள் தான் வாங்கப்பட்டது. பழைய பஸ்களை தற்போது சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம் என்பதே கிடையாது. தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்தார். ஓரிரு மாநிலங்களில் மட்டும் தான் தற்போது ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பஸ் கட்டணத்தை விட அருகில் உள்ள மாநிலங்களில் அதிகமாக வசூலித்து வருகின்றனர். டீசல் விலை ஏறும் போதெல்லாம் கட்டண தொகையை உயர்த்தி வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தான் கட்டண உயர்வு என்பது இல்லை, மகளிர் விடியல் பயணத்தின் காரணமாக போக்குவரத்து துறையின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதற்கு செலவாகும் தொகை 2800 கோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்.

    இதனால் தான் போக்குவரத்து பணியாளர்களுக்கு மாதத்தின் முதல்நாள் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன், வட மாநிலங்களுக்கு எல்லாம் சென்றதில்லை என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருப்பதால் தான் அவர் நிம்மதியாக தேர்தலில் நிற்கவும் பாதுகாப்பாக இருக்கவும் செய்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
    • மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கைவசம் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத்தரக் கோரியும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவதுபோல், மத்திய அரசும் தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும், மீண்டும் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், நமது மீனவர்கள் மீதான நீதிமன்ற தண்டனையை நிறுத்தக் கோரியும், இந்திய மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.


    முன்னதாக ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தேன்.

    ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் வட்டார மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


    மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.


     கோட்டார் ஆயர் நசரேன் சூசை அவர்கள் நடத்திய இந்த திருப்பலியில் நானும் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றேன்

    • மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.
    • ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடித்து வருகிறது. நேற்றும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இதமான குளிர் காற்று வீசியது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்து வருவதால் ரம்யமான சூழல் நிலவுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மழை கொட்டி தீர்த்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறையத் தொடங்கியுள்ளது.

    திற்பரப்பு அருவியில் கடந்த 2 நாட்களாக குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்றும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 3-வது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 44.82 அடியாக உள்ளது. அணைக்கு 1061 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 582 கன அடி தண்ணீர் மதகு வழியாகவும், 256 கன அடி தண்ணீர் உபரி நீராகவும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.15 அடியாக உள்ளது. அணைக்கு 696 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 460 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.43 அடியாக உள்ளது. அணைக்கு 163 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. நாகர்கோவில் நகரில் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு சூறைக்காற்று வீசியதால் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் பரித விப்பிற்கு ஆளானார்கள்.

    ×