search icon
என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தமிழக வெற்றிக் கழக மாநாடு 27-ந்தேதி நடைபெறுகிறது.
    • பந்தல் அமைக்கும் பணி இன்று முதல் நடைபெற இருக்கிறது.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கான வேலைகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மாநாட்டுக்காக பிரமாண்ட பந்தல் போடப்பட இருக்கிறது. இதற்கான பந்தல் கால் நடும் விழா இன்று காலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்று அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்தனர். பின்னர் மாநாட்டுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

    பந்தக்கால் நட்பபட்ட போது தளபதி, தளபதி என கட்சி நிர்வாகிகள் முழக்கமிட்டனர். பந்தக்கால் நடப்பட்ட விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தின் முக்கிய கோவில்கள், தேவாலயம், மசூதி ஆகிவற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. இதில் த.வெ.க. கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    பூமி பூஜை மற்றும்டி பந்தக்கால் நடும் விழாவிற்கு வந்தவர்களுக்கு இட்லி, பொங்கல், பூரி, வடை ஆகியவை காலை உணவாக வழங்கப்பட்டது.

    மாநாடு நடைபெறும் இடத்திற்கு புஸ்சி ஆனந்த் வந்ததும், அவருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.

    • மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.
    • சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை.

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்ல்லூர் பகுதியில் உள்ள கோட்டமருதூர் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    சிறுவர்கள் ஹரிஹரன் (11), ஜீவிதன் (10) மற்றும் தர்ஷன் (8) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மீனவர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசிய நிலையில், வலையில் சிறுவர்கள் சடலமாக சிக்கினர்.

    இதைதொடர்ந்து, சிறுவர்களின் உடலை மீட்டு அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.
    • 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

    விக்கிரவாண்டி:

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் இம்மாதம் 27-ந் தேதி நடைபெறுகிறது. இம்மாநாடு நடைபெற விதிக்கப்பட்ட 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளை மாநாட்டில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறி காவல்துறை அனுமதி அளித்தது.

    இதையடுத்து மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள், மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மாநாட்டு திடலில் பூமி பூஜையை செய்து மாநாட்டுக்கான ஆயத்த பணியை தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் கட்சியின் மாநில செயலாளர் புஸ்சி ஆனந்த் நேற்று இரவு மாநாட்டிற்கு இடம் வழங்கிய நில உரிமையாளர்கள் 25 பேரை நேரில் சந்தித்து பூமி பூஜைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதில் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷி மோகன், துணைத்தலைவர் வடிவேல், வக்கீல் அரவிந்த், இளைஞரணி தலைவர் மோகன், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம்.
    • ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதம்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், மஞ்சள், விபூதி, குங்குமம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

    உற்சவ அம்மனுக்கு ஸ்ரீ வைஷ்ணவி தேவி அலங்காரம் செய்யப்பட்டு உட்பிர காரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

    இரவு 11 மணி அளவில் அங்கிருந்த அம்மன் பம்பை, மேளம் முழங்க வடக்கு வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்ப பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்தார்.

    பின்பு பூசாரிகள் பக்தி பாடல்கள் பாடினர். இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு அர்ச்சனையும், மகா தீபாரா ணையும் நடைபெற்றவுடன் ஊஞ்சல் உற்சவம் முடிவடைந்து அம்மன் மீண்டும் கோவிலின் உள்ளே சென்றார்.

    விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.
    • வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.

    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ளது அப்பம்பட்டு கிராமம். இப்பகுதியில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி வாசுதேவன் ஆகியோர் சமீபத்தில் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 1200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

    இதுபற்றி ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது:-

    அப்பம்பட்டு ஏரிக்கரையில் பச்சையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் காளி அம்மன் சன்னதியில் உள்ள சிற்பத்தை ஆய்வுசெய்தோம். அந்தச் சிற்பம் மூத்ததேவி, தவ்வை என்றும் வடமொழியில் ஜேஷ்டா என்றும் அழைக்கப்படும் தெய்வமாகும்.

    கரண்ட மகுடம், குழையும் காதணிகள் மற்றும் கழுத்து, கைகள், கால்களில் அழகிய அணிகலன்களும் இடையை மேகலை எனும் அணிகலனும் அழகு செய்கின்றன.

    இரண்டு கால்களையும் தொங்கவிட்டு திண்டின் மீது அமர்ந்த நிலையிலும் வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக் குடத்தின் மீது வைத்தும் தவ்வை காட்சியளிக்கிறாள்.

    மிகுந்த கலையம்சங்களுடன் வடிக்கப்பட்டுள்ள இந்த தவ்வைச் சிற்பம் பல்லவர் கால சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

    இதன் காலம் கி.பி.8-9 ம் நூற்றாண்டு ஆகும். 1200 ஆண்டுகளைக் கடந்தும் அப்பம்பட்டு கிராமத்தில் தமிழர்களின் தாய் தெய்வமான தவ்வை (காளி அம்மன்) வழிபாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    செஞ்சிப் பகுதியில் பல்வேறு இடங்களிலும் தவ்வைச் சிற்பங்கள் காணக்கிடைப்பது இப்பகுதியில் காளி அம்மன் தெய்வத்தின் வழிபாடு பல்லவர் காலத்தில் சிறந்திருந்தது என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (32), இவரது நண்பர் பூபாலன் (49). இவர்கள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திண்டிவனத்தில் நிறுத்தி வைத்திருந்த தங்களது மோட்டார் சைக்கிளில் பேரணி கிராமத்திற்கு திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் விலங்கம்பாடி பெட்ரோல் பங்க் அருகே வரும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த காரானது ஏற்கனவே நடந்து சென்ற ஒருவர் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த கார் அய்யப்பன், பூபாலன் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் இறந்த ஒருவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் மயிலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
    • ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

    இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.

    ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.

    இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.

    இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

    தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.

    மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.

    மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

    பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

    அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

    லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.

    முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.

    செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.
    • நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    செஞ்சி:

    வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோட்டையை காண தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில் செஞ்சிக்கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது சம்பந்தமாக மத்திய அரசு யுனெஸ்கோ குழுவினருக்கு பரிந்துரை செய்தது. அதனை ஏற்று யுனெஸ்கோ குழுவினர் செஞ்சிக்கோட்டையை ஆய்வு செய்ய நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தர உள்ளனர். இதனை அடுத்து செஞ்சி கோட்டையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு புதிய தார்சாலை போடப்பட்டு உள்ளன.

    மேலும் தற்காலிக கழிவறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக தொல்லியல் துறை அலுவலர்கள் செஞ்சிக்கோட்டையில் முகாமிட்டு இந்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் மத்திய அரசு அதிகாரி மற்றும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் செஞ்சிக்கோட்டையை பார்வையிட்டு நடைபெற வேண்டிய பணிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் செஞ்சிக்கோட்டைக்கு ரோப் கார், படகு சவாரி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே வந்த மத்திய அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து இருப்பதாகவும் மேலும் தற்போது வரும் குழுவினரிடமும் மனு அளிக்க உள்ளதாகவும் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் தெரிவித்தனர். யுனெஸ்கோ குழுவினர் ஆய்வுக்குப் பின் செஞ்சிக்கோட்டை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டால் செஞ்சிக்கோட்டை உலக அளவில் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் எனவும் அப்போது மேலும் வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் இதனால் செஞ்சியின் வளர்ச்சி பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    யுனெஸ்கோ குழுவினர் வருகையையொட்டி நாளை ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் உட்பட அனைவரும் செஞ்சிக்கோட்டைக்குள் சென்று பார்வையிட அனுமதியில்லை.

    இத்தகவலை கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது.
    • 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டை நடத்துவதற்காக கட்சி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்ட காவல்துறை விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்காக அனுமதியை வழங்கியுள்ளது.

    ஏற்கனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மேலும் 33 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னதாக மாநாட்டிற்கு மது அருந்தி வரக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளைத் தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சோதனை நடத்தப்பட்டது.
    • சோதனையின் போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் சென்னை சாலையில் நகராட்சி அலுவலகம் செயல்ப்பட்டு வருகிறது. இங்குள்ள ஊழியர்கள், லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி தலைமையில் போலீசார் இன்று காலை 11.50 மணிக்கு ஜீப்பில் அங்கு சென்றனர்.

    அவர்கள் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். நகராட்சி அலுவலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவில் தான் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா என்பது தெரியவரும்.

    • விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
    • காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    விழுப்புரம்:

    தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் மாநாட்டில் நிறுத்துவதற்கு அனுமதி கோரி அந்தந்த அலுவலகங்களில் கட்சி நிர்வாகிகள் மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மாநாடுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கட்சி நிர்வாகிகள், வக்கீல்களுடன் சென்று மனு அளித்திருந்தார். மாநாடு நடத்துவதற்கு 33 நிபந்தனைகளை காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்டு அனுமதிக்காக காத்துள்ளனர்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் நாளன்று தீயணைப்பு வாகனம் பாதுகாப்பிற்கு நிறுத்த விக்கிரவாண்டி தீயனைப்பு நிலையத்திலும் ஆம்புலன்ஸ் நிறுத்த முண்டியம்பாக்கம் மருத்துவமனையிலும், சாலைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகம், ரெயில்வே நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கட்சி நிர்வாகிகள் தயார் செய்து வருவதால் காவல்துறையினர் அனுமதி கொடுத்தவுடன் மாநாடு நடைபெறும் இடத்தில் மேடை அமைக்கும் பணி நடைபெறும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.
    • காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    விழுப்புரம்:

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் நடந்த இக்கட்சியின் கொடி அறிமுக விழாவின் போது, கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை இம்மாதம் 23-ந்தேதியன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதாகவும், அதற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி கேட்டு ஏற்கனவே காவல்துறையிடம் அக்கட்சியினர் மனு கொடுத்தனர்.

    இதையடுத்து 33 நிபந்தனைகளுடன் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய நாட்கள் இல்லை என்பதாலும், இதனிடையே விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் வெளியானதாலும், மாநாடு தேதி தள்ளிப்போனது.

    மாநாட்டை எந்த தேதியில் நடத்தலாம் என்று கட்சி நிர்வாகிகளுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இந்நிலையில் மாநாடு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதையடுத்து அந்த தகவலை மீண்டும் மனு மூலம் காவல்துறையிடம் கொடுத்து அனுமதி பெறுவதற்காக நேற்று மாலை அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் கட்சி நிர்வாகிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர்.

    அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமாலை சந்தித்து, மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ள விவரத்தை எடுத்துக்கூறி அதற்காக அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு மனு ஒன்றை புஸ்சி ஆனந்த் கொடுத்தார்.

    அந்த மனுவில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு மாநாட்டை நடத்துவதாகவும், ஏற்கனவே காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை எந்தெந்த முறைகளில் பின்பற்ற இருப்பதாகவும், அது தொடர்பான விரிவான விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன. அம்மனுவுடன், மாநாட்டு திடல், மேடை, வாகனங்கள் நிறுத்துமிடங்கள், வழித்தடங்கள், தேசிய நெடுஞ்சாலை இவற்றை உள்ளடக்கிய மாதிரி வரை படத்தையும் இணைத்துக் கொடுத்தனர்.

    இம்மனுவை பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திருமால், இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து பதில் தெரிவிப்பதாக கூறினார்.

    அதன் பின்னர் வெளியே வந்த புஸ்சி ஆனந்த், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு அடுத்த மாதம் (அக்டோபர்) 27-ந்தேதி நடத்தப்படும் என்று எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதற்காக மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்ட விவரம் குறித்து காவல் துறையிடம் மனு அளித்துள்ளோம். அதில் காவல் துறையினர் கூறிய நிபந்தனைகளை கடைபிடிப்பது குறித்து நாங்கள் உரிய விளக்கம் அளித்துள்ளோம்.

    இம்மாநாடு மிக சிறப்பாக வெற்றி மாநாடாக நடைபெறும். மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் விவரம் உள்ளிட்ட எந்தவொரு தகவலாக இருந்தாலும் அதனை எங்கள் கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார். மாநாடு திட்டமிட்டபடி அக்டோபர் 27-ந்தேதி நிச்சயம் நடைபெறும். மாநாட்டுக்கான மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது விழுப்புரம்-கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, மாவட்ட தலைவர் குஷிமோகன், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் ஜி.பி.சுரேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    மாநாட்டையொட்டி செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக வெற்றிக்கழகத்தினர் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக கிராம புறங்களில் அதிகளவில் சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.

    ×