என் மலர்
கோயம்புத்தூர்
- இந்த திருமணம் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
கோவை,
மரங்களின் ராஜா என்று அழைக்கப்படும் அரச மரத்தை சிவ பெருமானாகவும், மரங்களின் ராணியான வேப்பமரத்தை அம்பாளாகவும், பக்தர்கள் பாவித்து, அரச, வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் செய்து வைத்து வருகின்றனர்.
அப்படி செய்வதன் மூலம் குறைவில்லா சந்தான பாக்கியமும், கன்னிகா தானம் செய்த பலனும் கிடைக்கும். அத்துடன் மாதம் மும்மாரி மழை பெய்யும். பெண்களுக்கு ஏற்படும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
இப்பலன் அனைவருக்கும் சென்று சேர கோவை நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர் கோவிலில் அரச, வேம்பு திருக்கல்யாண நிகழ்ச்சியும், ஐம்பொன் விக்ரக பிரதிஷ்டையும் நேற்று நடந்தது.
கோவில் வளாகத்தில் உள்ள அரச வேம்பு மரத்தின் முன் வேள்விச்சாலை அமைத்து, வேதமந்திரங்கள் முழங்க மங்கல பொருட்கள் சமர்பித்து மஞ்சள் நாணை சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைவரும் வேப்பமரத்திற்கு அணிவித்தனர். வேப்பமரத்தில் அணிவித்த மலர் மாலைகளை, அரசமரத்திற்கு மாற்றி அணிவித்தனர். தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த தோடு, மொய் பணமும் எழுதினர்.
- கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர் தப்பினார்.
- வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கோவை:
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சாஹர் (வயது21). இவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும், இருகூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
கடந்த 29-ந் தேதி காதலர்கள் 2 பேரும் வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட்டில் உள்ள பிர்லா நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு நீர்வீழ்ச்சியின் அருகே காதலர்கள் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சாஹர் தண்ணீரில் தவறி விழுந்து விட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியான காதலி, காதலனை காப்பாற்ற முயன்றபோது, அவரும் தண்ணீரில் விழுந்து அடித்து செல்லப்பட்டார்.
இதில் கல்லூரி மாணவி அருகே இருந்த பாறையை பிடித்து உயிர் தப்பினார். ஆனால் சாஹர் நீர்வீழ்ச்சி தடாகத்தில் உள்ள சுழலில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து வால்பாறை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கல்லூரி மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் 5 நாட்களுக்கு பிறகு இன்று கல்லூரி மாணவர் சாஹரின் உடல் பிணமாக மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
- பல்கலைக்கழக ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
- கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது.
வடவள்ளி,
கோவை மருதமலை சாலை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. மிகவும் தொன்மையான இந்த கோவில் குமரன் குட்டை கருப்பராயன் என்று அழைக்கப்படுவது உண்டு.
மருதமலைக்கு செல்லக்கூடிய பக்தர்கள் முதலில் கருப்பராயனை வழங்கி சென்று வந்தனர். காலப்போக்கில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் கோவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.
மேலும் பக்தர்கள் வழிபட முடியாத அளவிற்கு பல்கலைகழக மதில் சுவர் எழுப்பப்பட்டது. இதையடுத்து மக்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதனை ஏற்று பல்கலைக்கழகம் அனுமதி அளித்தது. அதை தொடர்ந்து கோவிலை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நிதி திரட்டி கோவில் புனரமைப்பு பணி நடந்தது.
தற்போது பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் கால்கோள் விழாவுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து முதல் கால யாக பூஜை, கணபதி ஹோமம், நவ வேள்வியும் நடந்தது. தொடர்ந்து 2-வது கால யாகம், கருப்பராயன் வேள்வியும், கருவறை உயிர் பூப்பு பூசை, கருப்பராயன் திருமேனி நிலை நிறுத்துதல் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. 12 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து கருப்பராயன் சுவாமிக்கு நன்னீராட்டு மற்றும் அலங்காரம்நடந்தது. கோவை மாவட்டத்தில் முதல்முறையாக கருப்பராயன் கோவில் குடமுழுக்கு விழாவை பெண்கள் புனித நீர் ஊற்றி செய்து வைத்தனர் என்பது குறிப்பிடதக்கது. இதை பல்கலைக்கழக ஊழியர்கள் பலரும் வரவேற்று உள்ளனர்.
- ஆட்டு இறைச்சியை கம்பியிலிருந்து எடுக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியது.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மத்தம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி அங்காளஈஸ்வரி. இவர்களது மகன் பால்பாண்டி (வயது 16). அந்த அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
அங்காளஈஸ்வரி ரங்கசாமி என்பவரது தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். தோட் டத்தில் உள்ள ஆடு இறந்து போனது. இதனையடுத்து ரங்கசாமி ஆட்டை அங்காள ஈஸ்வரியிடம் கொடுத்து அவர் ஆட்டை உப்பு கண்டம் போட்டு வீட்டில் உள்ள கம்பியில் காய வைத்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வம், அவரது மகன் பால்பாண்டி ஆகியோர் கம்பியில் காய வைக்கப்பட்டு இருந்த ஆட்டு இறைச்சியை எடுத்தனர். அப்போது திடீரென 2 பேரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் பால்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய செல்வத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
- மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அட்டடி பகுதியை சேர்ந்தவர் மேத்யூ. இவரது உறவினர் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதற்காக மேத்யூ தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டில் உள்ள பீரோவை பார்த்தார்.
அப்போது அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மாயமாகி இருந்தது. இவர்கள் வெளியில் சென்றதை நோட்டமிட்டு மர்மநபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து மேத்யூ மேல்குன்னூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேத்யூவின் வீட்டின் அருகே வசித்து வரும் ஆரோக்கிய மேரி என்பவர் தான் நகை, பணத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கிய மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
- மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்கிருந்து 6 மலைகளை தாண்டி 7-வது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.
அடர்ந்த வனப்பகுதியான வெள்ளியங்கிரி மலையில் மழை காலத்தில் அடிக்கடி காலநிலை மாற்றம் ஏற்படும். எனவே மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மட்டுமே மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவிலில் இருந்து மலை மீது ஏறிச் செல்ல தொடங்கும் இடத்தில் உள்ள கேட் மூடப்பட்டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை வனத்துறை உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். தடையை மீறி பக்தர்கள் மலை ஏறி செல்வதை தடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் ஆங்காங்கே எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெள்ளியங்கிரி மலையில் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர். தற்போது மலையேற தடை விதிக்கப்பட்டு உள்ளது. மலை மீது பக்தர்கள் வீசிச்சென்ற பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெள்ளியங்கிரி மலையில் சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறிவிடும். திடீரென்று மழை, சூறாவளி காற்று வீசும். வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். அது நேரத்தில் பக்தர்கள் சென்றால் போதிய பாதுகாப்பு இருக்காது.
எனவே தான் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவது இல்லை. அதை மீறி பக்தர்கள் யாரும் மலையேறி செல்ல வேண்டாம். அதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி மலையேறும் பக்தர்கள் மீது வனபாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர்.
- பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
கோவை:
கோவை பெரியக்கடை வீதியை சேர்ந்தவர் ஜவகர் சுப்பிரமணியம். புளி வியாபாரி. சமூக ஆர்வலரான இவர் குளங்கள் தூர்வாருதல், மரம் நடுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
ஜவகர் சுப்பிரமணியம் அவரது மூத்த மகள் சுவர்ண பிரபாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் போது அதில் திருமண நிகழ்ச்சிக்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பணமோ, பொருளோ தர வேண்டாம். அதற்கு மாற்றாக 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பயன்பெறும் வகையில் புத்தகங்களை பரிசாக வழங்குங்கள் என அச்சடித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
கடந்த புதன்கிழமை மாலை ராம்நகரில் உள்ள மண்டபத்தில் ஜவகர் சுப்பிரமணியத்தின் மகள் சுவர்ண பிரபா- விக்ரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மண்டபத்தில் புத்தகம் பெறுவதற்கு என தனியாக அரங்கு அமைக்கப்பட்டு இருந்தது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 400-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வழங்கினர். மேலும் பார்சல் மூலமாக 1,200 புத்தகங்கள் என மொத்தம் 1,600 புத்தகங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கினர்.
இந்த புத்தகங்கள் மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பாட புத்தகங்கள், வரலாற்று புத்தகங்கள், தேர்வுகள் எதிர்கொள்ளும் வகையிலான புத்தகங்கள், கவிதை, இலக்கணம் தொடர்பான புத்தகங்கள் வழங்கப்பட்டு இருந்தது.
இந்த புத்தகங்களை ஜவகர் சுப்பிரமணியம் கலெக்டரின் அனுமதி பெற்று ஆனைகட்டி, வால்பாறை உள்ளிட்ட மலைவாழ் பகுதியில் வசிக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.
- காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
- பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.
கோவை:
கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.
இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.
இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.
காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.
இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.
இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.
இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஷர்மிளாவுக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை,
தமிழகம் முழுவதும் அண்மையில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்ய தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கோவை மாநகராட்சி துணை கமிஷனராக பதவி வகித்து வந்த ஷர்மிளா கோவை மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை துணை கமிஷனர் (கலால்) நந்தினி செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்ட வருவாய் அலுவராக பதவி வகதித்து வந்த லீலா அலெக்ஸ் சென்னை வெளிவட்ட சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே கோவை மாவட்ட வருவாய் அலுவலராக ஷர்மிளா இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
- கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சூலூர்,
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபானக்கூடம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு கருமத்தம்பட்டி நகராட்சியில் முறையான அனுமதி பெறவில்லை என கூறி கருமத்தம்பட்டி பாஜகவினர், பாஜக மாவட்ட மகளிர் அணி பொருளாளர் கார்த்திக்காயணி தலைமையில் மதுபான கூடம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, கடந்த 2 வருடங்களாக அனுமதியற்ற கட்டிடத்தில் தனியார் மதுபான கூடம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் இந்த கடை செயல்படுகிறது. எனவே இந்த கடையை உடனே சீல் வைத்து பூட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிறிது நேரம் கடையை மூடினர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் நாளை(இன்று) கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். இதனை அடுத்து சமரசம் அடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதற்கிைடயே அங்கு வந்த கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.தையல்நாயகி சம்மந்தப்பட்ட தனியார் மதுபான கூட்டத்தை ஆய்வு செய்தார்.