search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
    • கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவில் வருகிற நவம்பர் 5-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் போட்டியிடுவதாக அறிவித்தனர். அதன்படி இருவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    ஆனால் ஜனாதிபதி ஜோ பைடனின் நடவடிக்கைகள் சமீப காலமாக விமர்சனத்துக்குள்ளாகின. குறிப்பாக நேரடி விவாதத்தின்போது டிரம்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறியது, உக்ரைன் அதிபரை புதின் என குறிப்பிட்டது மற்றும் மனைவி என்று நினைத்து வேறொரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றது போன்றவை பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இதனையடுத்து ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டும் என சொந்த கட்சியினரே கூறி வந்தனர். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவேன் என பிடிவாதமாக இருந்து வந்தார். இதற்கிடையே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் டெலாவரில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து தான் விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக இந்திய வம்சாவளியும், துணை ஜனாதிபதியுமான கமலா ஹாரிசின் பெயரை அவர் முன்மொழிந்தார்.

    இவரது இந்த அறிவிப்புக்கு ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பூர்வீகம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். ஆங்கிலேய அரசாங்கத்தில் இவரது தாத்தா பி.வி.கோபாலன் ஸ்டெனோகிராபராக பதவி வகித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவில் சர்வீஸ் அதிகாரியாகவும் பணியாற்றி இருக்கிறார்.

    ஷாம்பியா நாட்டுக்கு அகதிகளை கணக்கெடுக்க ஆங்கிலேய அரசாங்கம் பி.வி.கோபாலனை அனுப்பி வைத்திருந்தது. அப்போது ஷாம்பியா நாட்டுக்கு குடும்பத்தோடு சென்று பின்னர் அமெரிக்காவில் பி.வி கோபாலன் குடியேறி உள்ளார். இவரது இரண்டாவது மகளான சியாமளாவுக்கும் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவருக்கும் பிறந்தவர் தான் இந்த கமலா ஹாரிஸ்.

    இவர் முன்பு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கலிபோர்னியாவின் முதல் பெண் உறுப்பினராகவும் அவர் பதவி வகித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அரசியலில் இருந்து வளர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று துளசேந்திரபுரம் கிராமத்திற்கு வருகை தந்து மக்களை சந்திக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு உறுதுணையாக அவர் பணியாற்ற வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற கிராம மக்கள் ஒன்றிணைந்து கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது.

    மன்னார்குடி:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இளஞ்சேரன் தலைமையில் வழக்கறிஞர்கள் மன்னார்குடி- மயிலாடுதுறை பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    தகவல்அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். அதன் பின்னர், சுமார் ½ மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வைப்பூர் அருகே பழையவலம் கிராமத்தில் சிவன்கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்தக்குளத்திற்கு பொதுமக்கள் சென்றனர்.

    அப்போது அங்கு மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இது குறித்து அவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அவர் இது குறித்து வைப்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் போலீசார் சிவன் கோவில் பெரிய குளத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கு கிடந்த அடையாளம் தெரியாத மனித மண்டை ஓடு மட்டும் எலும்பு துண்டுகளை சேகரித்து பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக பழையவலம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் குளத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்பு துண்டுகளும் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கருணாவூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவனும், அதே பகுதியை சேர்ந்த பிரசாந்த் (வயது 18) என்பவரும் உறவினர்கள்.

    இந்நிலையில் பச்சகுளம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவை காண்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளானது பச்சகுளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரசாந்த் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பள்ளி மாணவன் காயங்களுடன் சாலையில் கிடந்துள்ளார்.

    உடனடியாக இருவரும் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, தேவங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவில் திருவிழாவை காண்பதற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கோட்டகச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். கூலித் தொழிலாளி. இவரது மகன் மதன்ராஜ் (வயது 15). இவர் மன்னார்குடியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் அப்பகுதியில் மாரியம்மன் கோவிலில் ஆனி மாத திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் திருவிழாவிற்காக மதன்ராஜ் மற்றும் அவருடைய நண்பர்கள் ரூபன் (21) சஞ்சய் ( 19), சித்தார்த்தன் (22) ஆகியோர் கோவிலின் அருகே பேனர் வைத்தனர்.

    அப்போது அந்த பேனர் மேலே சென்ற மின் கம்பி உரசியதில் 4 பேர் மீதும் மின்சாரம் தாக்கியதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

    உடன் அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மதன்ராஜ் ஏற்கனவே இறந்துள்ளதாக தெரிவித்தனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இறந்த மதன்ராஜ் உடலை உடற்கு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது கோவில் திருவிழாவில் பேனர் வைக்கும் பொழுது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
    • கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திருச்சிறுகுடி கிராமத்தில் மங்களாம்பிகை சமேத சூட்சுமபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய்க்கென்று தனி சன்னதி உள்ளது. திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    இத்தலத்தில் வழிபட்டால் வேண்டுவோருக்கு வேண்டிய பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருச்சிறுக்குடியில் சாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம் திருச்சிறுக்குடி சூட்சுமபுரீஸ்வரர் கோவிலின் தல வரலாறு அடங்கிய பதாகையினை கூர்ந்து படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோன்று திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் என்னும் ஊரில் உள்ள சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரநாதர் கோவிலும் அவர் தனது மகனுடன் சாமி தரிசனம் செய்தார். இந்த கோவிலில் ராகு-கேது ஒரே உடலில் அமைந்து இருப்பதால் இந்த கோவிலில் ராகு-கேது பரிகாரத்திற்கான பிரசித்தி பெற்றதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோவிலின் வாசலில் காத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தனது மகன் ரவீந்திரநாத் உடன் பதவி வரம் அருளும் திருச்சிறுக்குடி சூட்சமபுரீஸ்வரர் கோவில் மற்றும் ராகு-கேது பரிகாரத்தலமான திருப்பாம்புரம் பாம்புரநாதர் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    • திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக நன்னிலம், வலங்கைமான், குடவாசல், கூத்தாநல்லூர், நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் 75 லிருந்து 85 நாட்கள் ஆன பருத்தி பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி பருத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பருத்தி பயிரில் பூக்கள் வைத்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விழுந்து மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.மேலும் விவசாயிகள் பருத்தி வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பருத்தி பயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் இந்த தொடர் மழையின் காரணமாக பஞ்சு நிறம் மாறி வருவதாகவும் இதனால் பருத்தியின் தரம் குறைந்து குறைந்த விலைக்கு விற்பனையாகும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக கமலாபுரம், ஓகை ,பேரையூர், புனவாசல்,,பூந்தாழங்குடி, கீழ மணலி, மேல மணலி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கோட்டூர், விக்கிரபாண்டியம், புழுதிக்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 65 லிருந்து 70 நாட்களான பருத்தி பயிர்களில் தொடர் மழையால் பஞ்சு நிறம் மாறி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து பருத்தி பயிரிட்ட நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக வயல்களில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட நிலையில் மழை நீரை வடிய வைத்து மீதமுள்ள பருத்திச் செடிகளையாவது காப்பாற்றி விடலாம் என்கிற முனைப்பில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சு நிறம் மாறுவதால் மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் பருத்தியின் தரம் குறைந்து விட்டதாக கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கு பருத்தியை வாங்கும் நிலை ஏற்படும் எனவும் இதனால் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாத சூழல் ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள் பருத்தி பயிரை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.
    • மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று மாணவி தெரிவித்தார்.

    மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    மாணவி துர்கா தேவி கூறுகையில், "தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன். எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர்.

    இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

    • பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.
    • குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு (வயது 67). திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர். இவருக்கு கமலவதனம் என்பவருடன் திருமணம் முடிந்து செல்வப்பிரியா, தர்ஷினி ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

    இந்நிலையில், இவர் தனது சிறுவயதில் இருந்தே கம்யூனிஸ்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கினார். மேலும், மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகளிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மேலும், மாவட்ட, மாநில பொறுப்புகள், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர், மாநிலக்குழு உறுப்பினர், தேசியக்குழு உறுப்பினர், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்தார். இவர் திருவாரூர் மாவட்ட துணை செயலாளர், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இப்படி பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்ட இவர் கடந்த 1989-ம் ஆண்டு நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் பேட்டியிட்டு வெற்றி பெற்று, முதல்முறையாக மக்களவைக்கு சென்றவர். அதனைத் தொடர்ந்து, 1996, 1998, 2019 ஆகிய ஆண்டுகளில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பாராளுமன்றத்தில் தொகுதி மக்களின் பிரச்சினைகளை முன்வைத்து போராடியவர்.

    இப்படி தனது தொகுதி மக்களுக்காக குறள் கொடுத்து போராடி வந்த இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக மாற்று சிறுநீரகம் பொருத்திக்கொள்ளும் சிகிச்சையும் பெற்றுள்ளார். அந்த நிலையிலும் கட்சி பொறுப்புகளையும், மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தொகுதி பிரச்சினைகளிலும் ஓய்ந்து விடாமல் முனைப்போடு செயல்பட்டு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

    இந்நிலையில் செல்வராசு எம்.பி.க்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக அவர் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.40 மணி அளவில் திடீரென காலமானார். இந்த செய்தி அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

    இவரது இறுதிச்சடங்கு திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி கிராமத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    • பொதுத்தேர்வில் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி.
    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.

    paபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் போன்றே 10-ம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட 5.95 சதவீத மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்று வழக்கம்போல் அசத்தியுள்ளனர்.

    10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் பல்வேறு பாடங்களில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.

    பொதுவாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை வாழ்த்தி கொண்டாடிவது வழக்கம்.

    இந்நிலையில், மன்னார்குடியில் மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றதற்கு ஊர் மக்களே ஒன்றுக்கூடி கொண்டாடி வருகின்றனர்.

    மன்னார்குடியில் உள்ள வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மணிகண்டன் என்ற மாணவன் தனது 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச பாஸ் மார்க் எடுத்து 10ம் வகுப்பை தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்று 500க்கு 210 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    இதனால், மாணவர் மணிகண்டனுக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி ஊர் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

    • டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே ருக்மணிபாளையத்தில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக பால சுப்பிரமணியன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் 4 பேர் கொண்ட கும்பல் இலவசமாக மதுபானம் தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அந்த விற்பனையாளர் கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் அருகில் இருந்த பீர் பாட்டிலை எடுத்து விற்பனையாளர் பாலசுப்ரமணியனின் தலையில் தாக்கியுள்ளனர்.

    அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் பீரிட்டு வெளி வந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் பாலசுப்ரமணியனை மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இதுகுறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மன்னார்குடி அடுத்த சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், தாக்குதலில் ஈடுபட்ட நெடுவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்த திவ்யராஜ், அதே பகுதியை சேர்ந்த அஜித் மற்றும் சொக்கனானவூர் கிராமத்தை சேர்ந்த சரத் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். டாஸ்மாக் ஊழியரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.
    • மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் அமைந்துள்ளது. சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோவிலில் சிறப்பு குருபரிகார ஹோமமும், அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடந்தது. குருபகவானுக்கு தங்ககவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

     மாலை 5.19 மணிக்கு குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, குருபகவானுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    குருப்பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குருப்பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குருபகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். தஞ்சையை அடுத்த திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×