search icon
என் மலர்tooltip icon

  விருதுநகர்

  • நீதிமன்ற வளாகத்தில் சந்திரசேகர் என்பவர் திடீரென உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயன்றார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சுமார் 15 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. எப்பொழுதும் மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த நீதிமன்ற வளாகம் நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அமைதியாக காணப்பட்டது.

  இந்தநிலையில் மதியம் ஒரு வாலிபர் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறயடித்தவாறு கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தார். இதைப்பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

  இதற்கிடையே தீப்பற்றி எரிந்த உடலுடன் வந்த வாலிபர் சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்தார். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயம் அடைந்து இருந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

  இதற்கிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தீக்குளித்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா மந்தித்தோப்பு எம்.கே.டி.நகரை சேர்ந்த கனகராஜ் மகன் சந்திரசேகர் என்பது தெரிய வந்தது.

  இவர் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் ஒரு லாரி செட்டில் வேலை பார்ப்பதாகவும், இவர் மீதான இரண்டு வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருவதாகவும், அவரது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

  கோவில்பட்டியை சேர்ந்த இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் விடுமுறை என்று தெரிந்தும் எதற்காக வந்தார், தீக்குளிக்க காரணம் என்ன என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சந்திரசேகர் இன்று காலை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

  கோர்ட்டு வளாகத்தில் தீக்குளித்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • இந்துமதி அணிந்திருந்த தாலிச்செயினையும் பறித்துக்கொண்டு கும்பல் அங்கிருந்து தப்பியது.
  • கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  ராஜபாளையம்:

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது42). இவர் அங்குள்ள ஜவகர் மைதானத்தில் உடல் பருமன் எடை குறைப்பு மையத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(38). இவர்களுக்கு சந்தோஷ்(10) என்ற மகனும், சுவாதி(7) என்ற மகளும் உள்ளனர்.

  இவர்களின் வீடு ஊரின் ஒதுக்குபுறத்தில் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும். இந்த நிலையில் நேற்று இரவு முருகானந்தம் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது.

  இதனால் திடுக்கிட்டு எழுந்த முருகானந்தம் குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க 5 பேர் முகமூடி அணிந்து கதவை உடைப்பது தெரியவந்தது.

  சிறிது நேரத்தில் அந்த கும்பல் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் முருகானந்தத்தை சரமாரியாக தாக்கிய அவர்கள் வாயில் துணியை திணித்து கையை கயிற்றால் கட்டினர். தொடர்ந்து இந்துமதி மற்றும் 2 குழந்தைகளையும் அந்த கும்பல் கயிற்றால் கட்டிப்போட்டது.

  அதன் பின் அவர்கள் வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 60 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

  மேலும் இந்துமதி அணிந்திருந்த தாலிச்செயினையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதன் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும். இன்று காலை வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்த அந்தப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது முருகானந்தம், இந்துமதி மற்றும் 2 குழந்தைகள் மயக்க நிலையில் இருந்தனர். உடனே பொதுமக்கள் அவர்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து நடந்த விவரங்களை கேட்டறிந்தனர்.

  இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. நாகராஜன், ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த நபர்கள் நடத்திய இந்த கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

  அண்மையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபர்களை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதே பாணியில் ராஜபாளையத்திலும் கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது.

  நடிகர் கார்த்திக் நடித்த 'தீரன்' படத்திலும் கொள்ளையர்கள் வீட்டை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் இடம்பெறும்.

  அதுபோல இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் அந்தப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

  • விருதுநகர் அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்தனர்.
  • வெடிவிபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமுதேவன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

  இந்த விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டருக்கும், காவல் கண்காணிப்பாளருக்கும் மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  • பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  • கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

  அருப்புக்கோட்டை:

  அருப்புக்கோட்டையில் 100 வருடங்கள் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த சில மாதங்களாக கும்பாபிஷேக சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடியவுள்ள நிலையில் வருகிற 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

  இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் பணிகள் நடைபெறவில்லை.

  இந்த நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஏற்கனவே கட்டப்பட்டிருந்த யாகசாலைகளை இடித்து சேதப்படுத்திவிட்டு சென்றனர். இன்று காலை கோவிலை திறப்பதற்காக வந்த அர்ச்சகர்கள் யாகசாலை சேதமடைந்தி ருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

  சிவகாசி:

  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, ஏழாயிரம் பண்ணை, துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

  இங்கு சரவெடிகளை தவிர வேறு வகை பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது. மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும், அதில் பயன்படுத்தப்படும் மூலப்பொருளான பேரியம் நைட்ரேட்டுக்கு பதிலாக மாற்று வழியை இதுவரை சுப்ரீம் கோர்ட்டோ, மத்திய அரசோ பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்காததால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் இது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  கடந்த 2018-ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பேரியம் நைட்ரேட்டை பயன்படுத்தவும், அதன் மூலம் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

  உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் என பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய சுற்றுச்சுழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றுக்கும் கோர்ட்டு உத்தரவிட்டது.

  இதன் தொடர்ச்சியாக சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. பேரியம் நைட்ரேட் மற்றும் சரவெடிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக 50 சதவீதம் வரை பட்டாசுகள் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

  இதனால் ஏராளமான பட்டாசு தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் பட்டாசு ஆலைகள் உற்பத்தியை தொடங்காமல் உள்ளதால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள தமிழன் பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.

  கூட்டத்தில் தலைவர் கணேசன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய, மாநில, அரசுகள் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி பட்டாசு தயாரிக்க அனுமதி வழங்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவித்துள்ளனர்.

  அதன்படி இன்று முதல் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து உள்ளனர். எனவே தாமதிக்காமல் அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • இந்த வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • பட்டாசு ஆலை போர்மேன் சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

  சிவகாசி:

  குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 1,087 சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

  இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. இதில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமுத்தேவன்பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

  நேற்று மதியம் 12.45 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 4 பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலியானார்கள். ஆலங்குளத்தைச் சேர்ந்த அம்பிகா (30), சாந்தி (43), ஜெயா (57), ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முருகஜோதி (50), கீழாண்மறைநாடு சமத்துவபுரத்தை சேர்ந்த முத்துசாமி (43), குருசாமி (50), முனியசாமி (42), சித்திரப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் (26), கிளியம்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (29), நாச்சியார்பட்டியைச் சேர்ந்த அவ்வைராஜ் (62) ஆகியோர் இறந்தனர்.

  5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்த சிவக்குமார், முத்துக்குமார், ரெங்கம்மாள் உள்பட 4 பேருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிவகாசியை சுற்றியுள்ள 60 சதவீதம் பட்டாசு ஆலைகளை அதன் லைசென்சு பெற்ற உரிமையாளர்கள் நடத்துவதில்லை.

  மாறாக, அதனை மற்றவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள். அவ்வாறு குத்தகைக்கு வாங்கி பட்டாசு ஆலைகளை நடத்துபவர்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. ஒரு அறையில் 4 பேர் மட்டுமே பணியில் இருக்கவேண்டும். ஆனால் இவர்கள் 10-க்கும் மேற்பட்டோரை பணியில் வைக்கிறார்கள்.

  கூடுதல் பணம் சம்பாதிக்கும் நோக்கில் கூடுதல் தொழிலாளர்களை வரவழைத்து பணியில் ஈடுபடுத்துகிறார்கள். வெடிமருந்து பயன்பாடு வழக்கத்தைவிட அதிக அளவில் உபயோகப்படுத்தப்படுகிறது. பட்டாசு தொழிலை மட்டுமே தெரிந்திருக்கும் ஆட்களை கொண்டு ஆலைகளை இயக்காமல் அதிக சம்பளம் தருவதாக கூறி தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாகி விடுகிறது.

  பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தபோது பணியில் இருந்த தொழிலாளி செல்வம் கூறுகையில், மதிய உணவுக்காக அனைவரும் தயாராகிக்கொண்டு இருந்தோம். அப்போது திடீரென அருகில் இருந்த ஒரு அறையில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே நாங்கள் பதறியடித்துக்கொண்டு அருகில் செல்ல முயன்றோம். ஆனால் அடுத்தடுத்த அறைகள் இடிந்து தரைமட்டமாகிக் கொண்டு இருந்தன.

  அதேவேளையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்தது. எனவே எங்களால் நெருங்க முடியவில்லை. ஒருவழியாக முதலில் வெடித்து சிதறிய அறைக்கு அருகில் சென்றபோது அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் நாலாபுற மும் உடல் சிதறிய நிலையில் இறந்துகிடந்தனர். அதிலும் ஒருவரின் ஆடைகள் மட்டும் அங்குள்ள மரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் மீட்கும் போதே 7 பேருக்கு உயிர் இல்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தபோதும் பலரின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

  நாங்கள் ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து இந்த தொழிலை செய்துவருகிறோம். இன்று நடந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என நினைக்கிறோம். காலையில் எங்களுடன் வேலைக்கு வந்தவர்கள் மாலை வீடு திரும்பும்போது உயிருடன் இல்லை என்றபோது அதனை எங்களால் ஏற்க முடியவில்லை.

  காலையில் அனைவரும் ஒன்றாக வேலைக்கு வந்தோம். ஆனால் மாலையில் 10 பேர் பிணமாக வீடு திரும்பியதை எண்ணும்போது மனம் பதறுகிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைக்கும் தொழிலாக பாதுகாப்பற்ற பட்டாசு தொழில் வந்துவிட்டது என்றார்.

  மற்றொரு தொழிலாளி கூறுகையில், இந்த விபத்து முழுக்க முழுக்க மனித குறைபாட்டால் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து பெரும்பாலான பட்டாசு ஆலைகள் இன்னும் திறந்து பணிகளை தொடங்காத நிலையில், தை மாதம் ஒவ்வொரு நிறுவனமாக திறந்து பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது முழுமையாக ஆலையில் பேன்சி ரகம் என்று சொல்லக்கூடிய வாண வேடிக்கை பட்டாசுகள் தான் அதிக அளவு தயாரிக்கப்படுகிறது.

  இந்த வகை வாணவேடிக்கைகளை தயாரிக்கும்போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். அதே நேரத்தில் அறிவியல் ரீதியாக கவனத்துடன் இருக்கவேண்டும். எனவே மனித கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். தற்போது ஒரே நேரத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசுத் தொழிலில் உயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

  இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர்.

  மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர் களை தீவிரமாக தேடி வரு கிறார்கள்.

  • வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
  • மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

  விருதுநகர்:

  விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

  சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

  படுகாயம் அடைந்த தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது.

  • தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார்.
  • ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியக்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல் மாநிலக்கட்சிகளும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை மும்முரமாக நடத்தி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 4 முனை போட்டி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

  இந்த அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சாமி தரிசனம் செய்தார்.

  முன்னதாக அவர் நேற்று இரவு ராஜபாளையம் சென்று அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்து காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு கார் மூலம் வந்தார். அங்கு அவருக்கு அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து அவர் ஆண்டாள் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.

  பின்னர் அவர் கார் மூலம் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு அடிவார பகுதியில் உள்ள அவரது குலதெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுமார் இரண்டு மணி நேரம் இருந்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் அவரது குடும்பத்தின் சார்பில் வனப்பேச்சிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.

  அரசியலில் எந்த ஒரு முடிவு எடுப்பது என்றாலும் ஓ.பன்னீர்செல்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள செண்பகத்தோப்பில் அமைந்திருக்கும் தனது குல தெய்வமான வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு சென்று அனுமதி வாங்கிவிட்டு தான் முடிவு செய்வார். இந்த திடீர் வருகை குறித்து அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ஓ.பி.எஸ். சாமி தரிசனம் செய்ய மட்டுமே வந்துள்ளார். இதில் எந்த அரசியலும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறினர்.

  • லிங்கராஜன் வழக்கம் போல தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார்.
  • போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

  திருச்சுழி:

  விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்த வீரசோழன் அருகேயுள்ள ஏ.தரைக்குடி பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜன் (வயது 28). இவர் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் தொடக்கப்பள்ளி அருகே டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை நடத்தி வருகிறார். தற்போது டி.புனவாசல் பகுதியில் வசித்து வருகிறார்.

  இந்தநிலையில் லிங்கராஜன் வழக்கம் போல நேற்று தனது பிளக்ஸ் கடையில் வேலைகளை கவனித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் காயமின்றி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியது.

  கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து வீரசோழன் போலீஸ் நிலையத்தில் லிங்க பாண்டியன் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் மாலை லிங்கராஜனின் ஊரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் வீரசோழன் அரசுப்பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் பள்ளி முடிந்து பஸ் ஏற வந்தபோது அங்குள்ள கடையில் பாணி பூரி சாப்பிட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரசோழன் தெற்குத்தெருவை சேர்ந்த கொங்குசெல்வம் (19) என்பவர் தான் சப்பிட்டதற்கும் பணம் தருமாறு கூறியுள்ளார்.

  ஆனால் மாணவர்கள் பணம் கொடுக்க மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த கொங்குசெல்வம், சசிகுமார் மற்றும் சாரதி ஆகிய இருவரையும் ராக்கிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன பள்ளி மாணவர்கள் லிங்கராஜனிடம் சென்று அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளனர். இதற்கிடையில் கொங்கு செல்வமும் மாணவர்களை பின் தொடர்ந்து பிளக்ஸ் கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

  அவர்களை லிங்கராஜன் கண்டித்து அனுப்பியுள்ளார். இந்தநிலையில் தான் கொங்குசெல்வம் தனது கூட்டாளியுடன் சேர்ந்து லிங்கராஜனுக்கு சொந்தமான பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

  எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன்-அபிராமம் சாலையில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வீரசோழன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

  • இன்று காலை சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார்.
  • பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.