search icon
என் மலர்tooltip icon

  திருநெல்வேலி

  • அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.
  • நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது.

  விலங்குகள் தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. அதிலும் வளர்ப்பு மிருகங்களாக நாய், மாடு ஆகியவை மனிதர்களை தாக்குல் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் நெல்லையில் நடந்துள்ள சம்பவம் ஒன்றின் வீடியோ வெளியாகி காண்போரை பதற வைக்கும்படி உள்ளது.

  தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் உள்ள வண்ணனாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரதான சாலையில் இரு மாடுகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அப்போது அந்த வழிகயாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த நீதிமன்ற ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகளும் சேர்ந்து முட்டித் தாக்கியுள்ளன.

  இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது அரசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த வேலாயுதராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலாயுதராஜை மாடு முட்டியதும் அவர் மீது பேருந்து கண நேரத்தில் ஏறி இறங்கியதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்த நிலையில் அந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.   

  • சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
  • கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

  நெல்லை:

  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

  பல்வேறு சிறப்புகள் அமையப்பெற்ற சுவாமி நெல்லையப்பா் கோவிலில் ஆனித்தேரோட்ட திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவையொட்டி தினமும் காலை-மாலை என 2 வேளைகளிலும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.

  விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித்தேரோட்டம் 9-வது நாளான இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

  இன்று தேரோட்டத்தை யொட்டி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்களும் அலங்காரங்கள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

  இன்று அதிகாலை 1.15 மணியளவில் விநாயகர் தேர் பக்தர்களால் இழுக்கப் பட்டு சுவாமி சன்னதி முன்பு நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு முருகர் தேர் இழுக்கப்பட்டது. பின்னர் 3.30 மணி முதல் 4.30 மணிக்குள் சுவாமி -அம்பாள் தேரில் எழுந்தருளினர்.

  காலை 6.30 மணி முதல்7.46 மணிக்குள் சுவாமி நெல்லையப்பர் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரகர மகாதேவா, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பின்னர் 4 ரதவீதிகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் சுவாமி நெல்லையப்பர் மிதந்து வந்தார். அப்போது விண் அதிர கோஷங்கள் எழுப்பப்பட்டது.

  பிற்பகலில் வடக்கு ரதவீதிக்கு வந்து சேர்ந்த சுவாமி தேர் அங்கு நிறுத்தப் பட்டது. அதனை தொடா்ந்து அம்பாள் தேரும், நிறைவாக சண்டிகேஸ்வரா் தேரும் பக்தா்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

  முன்னதாக தேரோட்டத்தை கலெக்டர் கார்த்திகேயன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

  மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி, துணை போலீஸ் கமிஷனர்கள் ஆதர்ஷ் பசேரா, கீதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  4 முறை வடம் அறுந்ததால் இரும்பு சங்கிலி கட்டி இழுக்கப்பட்ட தேர்

  நெல்லையப்பர் சுவாமி தேரை முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அப்போது திடீரென தேரில் பொருத்தப்பட்டிருந்த 4 வடங்களில் 2 மற்றும் 3-வது வடங்கள் அறுந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறையின் அலட்சியத்தால் வடம் அறுந்தது என்று கூறி இந்து முன்னணியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

   உடனடியாக 2 மாற்று வடங்கள் பொருத்தப்பட்டு மீண்டும் 8.16 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பின்னர் சில நிமிடங்களில் மீண்டும் 2-வது முறையாக தேர் வடம் ஒன்று அறுந்து விட்டது. இதையடுத்து 3 வடங்களுடன் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. எனினும் 2 முறை வடம் அறுந்ததால் பக்தர்கள் மனவேதனை அடைந்தனர்.

  இந்நிலையில் 3 வடங்களுடன் இழுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 2 முறை வடம் அறுந்துவிட்டது. இதனால் 2 வடங்கள் மட்டுமே தேரில் இறுதியாக பொருத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து இரும்பு சங்கிலி கட்டப்பட்டு மீண்டும் தேர் இழுக்கப்பட்டது.

  • சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர்.
  • கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.

  நெல்லை:

  இந்திய கடல் பகுதி வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் அவ்வப்போது சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

  நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்றும், நாளையும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும் என ஏற்கனவே மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை நெல்லை மாவட்டம் கூடங்குளம் கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

  இந்த ஒத்திகையில் கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார், உவரி, கூடங்குளம் சட்டம்-ஒழுங்கு போலீசார், மீன்வளத்துறை, வருவாய்த்துறையினரும் கலந்து கொண்டனர்.

  அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று சந்தேகப்படும்படியான நபர்கள், அந்நியர்கள், சந்தேகத்திற்கு இடமான படகுகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டவர்கள் சட்ட விரோதமாக கடல் வழியாக நுழைவதை தடுப்பது குறித்து ஒத்திகை நடத்தினர்.

  சீருடை அணியாத போலீசார் மீனவர்களோடு மீனவர்கள் போல கடலில் படகுகளில் வந்தனர். அவர்களை துல்லியமாக கண்டறிந்து கைது செய்யும் ஒத்திகை நடைபெற்றது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். மேலும் கடற்கரையோர சோதனை சாவடிகளிலும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்யும் ஒத்திகை நடந்தது.

  தூத்துக்குடி மாவட்டத்திலும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாப்பன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒத்திகை நாளையும் 2-வது நாளாக நடக்கிறது.

  இந்த பணியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர். அவர்கள் கடலுக்குள் ரோந்து சென்று பயங்கரவாதிகள் வேடத்தில் வந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். தொடர்ந்து மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு எடுத்து கூறினர்.

  • நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர்.
  • அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  நெல்லை:

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மர்மச்சாவு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடந்த 2 நாட்களாக சிலரிடம் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளின் ஒரு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஜெயக்குமாரின் நண்பர்கள், அவர் சாவுக்கு முந்தைய 2 நாட்களில் சந்தித்தவர்களின் விபரங்கள் சேகரித்து அவர்களிடம் அவர்களது இருப்பிடத்திற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் ஜெயக்குமார் உடல் கிடந்த தோட்டத்தில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வரும் நிலையில் நேற்று டிரோன் காமிரா மூலமும் சோதனை நடத்தினர். தோட்டத்தில் இருந்து 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு டிரோன் காமிரா மூலமாக சோதனை செய்து அதில் தடயங்கள் ஏதும் கிடைக்குமா என ஆராய்ந்தனர்.

  ஆனாலும் இதுவரை உறுதியான முடிவை எடுக்க முடியாமல் அவர்கள் திணறி வருகின்றனர். அவரது மர்மச்சாவு வழக்கில் இதுவரை பல கோணங்களில் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். அந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சந்தேகிக்கும் நபர்களை மறைமுகமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

  • கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது.
  • இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் ஆயுதப்படை பட்டாலியன் மையம் உள்ளது.

  இதையொட்டிய பகுதிக்குள் நேற்று மதியம் ஒரு கரடி சுற்றித்திரிந்தது. அதனை கண்ட சுற்றுலா பயணிகள், பொது மக்கள் அச்சம் அடைந்து ஓடினர்.

  தொடர்ந்து கரடி தமிழ்நாடு 9-ம் அணி பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தில் ஏறியது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அம்பை கோட்ட துணை இயக்குனர் இளைய ராஜா உத்தரவின்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

  அதனை விரட்ட வனத்துறையினர் சில நடவடிக்கைகள் எடுத்த போதிலும், கரடி மரத்தை விட்டு இறங்காமல் மேலேயே இருந்தது. இதனால் வனத்துறையினர் மரத்தின் அடியில் வலையை கட்டிவைத்தனர்.

  இரவு முழுவதும் அங்கேயே வலையை விரித்து வைத்து காத்திருந்த நிலையில், கரடி இறங்க வில்லை. அதனை அம்பை வனக்கோட்ட துணை இயக்குனர் இளையராஜா பார்வையிட்டார்.

  இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வனத்துறையினர் சற்று கண் அயர்ந்திருந்த நேரத்தில் கரடி தானாகவே மரத்தில் இருந்து இறங்கி வனப்பகுதிக்குள் சென்றது.

  இதையடுத்து வனத்துறையினர் வலையை சுருக்கி எடுத்துச்சென்றனர்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார்.
  • மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

  நெல்லை:

  நெல்லை பாளையங்கோட்டை ஆயுதப்படை அருகே உள்ள நம்பிக்கை நகரை சேர்ந்தவர் மதன் (வயது 28).

  இவரும், பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த முருகவேல் மகள் உதய தாட்சாயினி(23) என்பவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில், பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதனால் காதலர்கள் 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்தினம் பாளை ரெட்டியார்பட்டி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

  இதனிடையே மகளை காணவில்லை என முருகவேல் பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.

  இந்த தகவலை அறிந்த பெண் வீட்டாரின் உறவினர்கள் நேற்று மாலையில் மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு சென்றனர். அப்போது வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் சென்ற பெண்ணின் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் அலுவலகத்தை சூறையாடினர்.

  இந்த தாக்குதலில் அங்கிருந்த வக்கீல் பழனி, அருள்ராஜ் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். தொடர்ந்து உதய தாட்சாயினிக்கு திருமணம் செய்து வைத்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் கட்சி அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

  இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில் பெருமாள்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் விசாரணை நடத்தினார்.

  தொடர்ந்து பெண்ணின் தந்தை முருகவேல்(55), பெண்ணின் அண்ணன் சரவணக்குமார்(27), தாய்மாமாவான புதுப்பேட்டையை சேர்ந்த சங்கர்(35), உறவினர்கள் குரு கணேஷ்(27), மதுரை யோகீஸ்வரன்(23), பெண்ணின் தாய் சரஸ்வதி(49), மார்த்தாண்டத்தை சேர்ந்த சித்தி சுமதி(44), பாட்டி ராஜிலா(75), பெரியம்மா புதுப்பேட்டையை சேர்ந்த அருணாதேவி(51), மதுரை பெரியம்மா வேணி(52), அக்காள்கள் ஸ்டெல்லா(29), சூர்யா(32) ஆகிய 12 பேரை கைது செய்தனர்.

  மேலும் இந்த பிரச்சனையில் தொடர்புடைய பந்தல் ராஜாவும் வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர்கள் மீது அத்துமீறி கும்பலாக நுழைவது, மிரட்டல், சூறையாடுவது, பெண்களை தவறான வார்த்தையில் பேசியது உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

  இதில் பெண்ணின் பாட்டி ராஜிலா வயது மூப்பின் காரணமாகவும், பெண்ணின் அக்கா சூர்யா கைக்குழந்தையுடன் இருப்பதன் காரணமாகவும் 2 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. மற்ற 11 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல்.

  நெல்லையில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரமடைந்த பெண் வீட்டார் மார்க்சிஸ்ட் அலுவலத்தை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  மார்க்சிஸ்ட் அலுவலகத்திற்கு பெண் வீட்டாரை சேர்ந்த 30 பேர் நுழைந்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

  பட்டியலினத்தை சேர்ந்த இளைஞருக்கும், மாற்று சாதியை சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

  பின்னர், சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை தங்களுடன் அழைத்து செல்ல பெண் வீட்டார் வந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

  இந்நிலையில், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.

  • முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.
  • சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

  நெல்லை:

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக விசரணை நடைபெற்று வருகிறது.

  இந்த விசாரணையில் ஆஜராவதற்காக தெற்கு கள்ளிகுளம் முன்னாள் ஆலய தர்மகர்த்தாவும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆனந்தராஜா ஆஜரானார்.

  அவரிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஜெயக்குமார், மரண வாக்குமூலம் என்ற பெயரில் எழுதி இருந்த முதல் கடிதத்தில் தனது உயிருக்கு ஆபத்து இவர்களால் நேரலாம் என்று பலரது பெயரை குறிப்பிட்டு இருந்தார்.

  அதில் முதல் நபராக ஆனந்த ராஜாவின் பெயரை குறிப்பிட்டு இருந்ததார். இந்நிலையில் இன்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர்.
  • ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

  நெல்லை:

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  நேற்று ஏடிஜிபி வெங்கட்ராமன், சி.பி.சி.ஐ.டி . ஐ.ஜி. அன்பு, போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நெல்லைக்கு வருகை தந்து ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டம், அவரது வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களது மகன்கள் கருத்தையா, மார்ட்டின் மற்றும் ஜெயக்குமாரின் மனைவி ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

  சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது. முன்னதாக இன்ஸ்பெக்டர் உலக ராணி தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் 'டம்ப் டவர்' மூலமாக ஜெயக்குமார் மரணம் அடைந்த நாளன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

  இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செல்போன் சிக்னல்கள் காட்டப்பட்ட நிலையில் அதனை நேற்று கவனத்துடன் பகுப்பாய்வு செய்தனர். அதில் 500 எண்கள் கண்டறியப்பட்டு சந்தேகப்படும்படியாக தற்போது 25 செல்போன் எண்களை கண்டறிந்துள்ளனர். அந்த 25 செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அந்த நபர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

  இந்த எண்கள் அனைத்தும் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் மற்றும் கொலை செய்யப்பட்ட நாள் அன்று அந்த பகுதியில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் இந்த சந்தேக செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அதன் உரிமையாளர்களிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரிக்கும் பட்சத்தில் இதில் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிந்து விடும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கருதுகின்றனர்.

  இதனால் ஜெயக்குமார் வழக்கு சூடு பிடித்துள்ளது. இதன் மூலமாக ஜெயக்குமாரின் மர்மச்சாவு வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

  இதற்கிடையே சிபிசிஐடி போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி இன்று 2-வது நாளாக நெல்லையில் முகாமிட்டு இந்த விசாரணையை துரிதப்படுத்தி வருகிறார்.

  மேலும் அவர் விசாரணை குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கி அதன்படி விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார்.