search icon
என் மலர்tooltip icon

  தஞ்சாவூர்

  • பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
  • இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

  தஞ்சாவூா்:

  தஞ்சை அருகே உள்ளது பொன்னப்பூர் கிழக்கு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், தங்கள் ஊருக்குள் மது உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என ஏகமனதாக முடி வெடுத்துள்ளனர்.

  இந்த முடிவின்படி பொன்னாப்பூர் கிழக்கு கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மது உள்ளிட்ட எந்தவிதமான போதைப் பொருளையும் விற்க தடை செய்யப்பட்டுள்ளது, மீறி விற்றாலோ விற்பனைக்குத் துணை போனாலோ அது இந்த கிராமத்துக்கு நீங்கள் செய்யும் துரோகம்.

  பல குடும்பங்களின் பாவ செயலில் ஈடுபடாதீர்கள் என போஸ்டர் அடித்து பஸ் நிறுத்தம், மளிகை கடைகள், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் ஒட்டியுள்ளனர்.

  அத்துடன் மது உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக, வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து கிராம இளைஞர்கள் கூறும்போது, 'இளைஞர்கள் ஒன்றிணைந்து எங்கள் கிராமத்துக்குள் போதைப்பொருள் விற்பதையும் பயன்படுத்துவதையும் தடை செய்வது என முடிவு செய்துள்ளோம். இந்த முடிவுக்கு இளைஞர்கள் மற்றும், பெண்கள் மத்தியில் 100 சதவீதம் வரவேற்பு கிடைத்துள்ளது.

  கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரத்தில் எங்கள் கிராமம் மிகவும் பின் தங்கி உள்ளதுக்கு போதைப் பொருள் பயன்பாடு தான் காரணம். ஆகவே எங்கள் ஊரின் ஒட்டுமொத்த நலனுக்காக போதைப்பொருள் பயன்படுத்தக்கூடாது விற்கக் கூடாது என முடிவெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

  நாங்கள் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதில் பெருமையாக உள்ளது என்றனர். இளைஞர்களின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

  • திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.
  • சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  தஞ்சாவூர்:

  தமிழகத்தில் கடந்த 3 வாரங்களாவே கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக சுட்டெரித்தது. பகலில் கடும் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.

  தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெப்பத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டனர். தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தின் அளவு பதிவானது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

  இந்த நிலையில் இன்று காலை தஞ்சையில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ந்த காற்று வீசியது. சிறிது நேரத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து சில நிமிடம் மிதமான அளவில் மழை பெய்தது. பின்னர் வெயில் அடித்தது. இதேப்போல் திருவையாறு சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை கொட்டின.

  மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் இன்று காலை காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கொள்ளிடம் புத்தூர், தைக்கால், ஆச்சாள்புரம், புதுப்பட்டினம், சந்தபடுகை, திட்டுபடுகை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. சீர்காழியில் இடி, மின்னலுடன் கருமேகங்கள் சூழ்ந்து உள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

  இதேப்போல் நாகை மாவட்டம் நாகூர், பணக்குடி, மஞ்சக்கொல்லை, புத்தூர், சிக்கல் உள்ளிட்ட பல இடங்களிலும் கோடை மழை பெய்து குளிர்வித்தது.

  தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த மழையால் பூமி குளிர்ந்ததோடு வெப்பம் ஒரளவு தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  மேலும்கோடை குறுவை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் மும்முனை மின்சாரம் இன்றி பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் குறுவை விதைப்புகள் கருகி வந்ததால் வேதனையில் இருந்த நிலையில் தற்போது பெய்த கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  • குடிபோதையில் இருந்த நபர்களுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சாவூா்:

  தஞ்சை அருகே உள்ள சானூரப்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 27). இவர் திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

  இந்த நிலையில் ஹரிஹரன் நேற்றிரவு தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது அவர் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே மது குடித்துக் கொண்டிருந்த சிலரிடம் மது எங்கே கிடைக்கும் என கேட்டுள்ளார். இதில் குடிபோதையில் இருந்த நபர்களுக்கும், ஹரிஹரனுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

  வாக்குவாதம் முற்றவே ஹரிஹரனை சரமாரியாக தாக்கினர். இதில் கீழே விழுந்து காயமடைந்த ஹரிஹரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  இது பற்றி தகவல் அறிந்த தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹரிஹரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • தஞ்சையில் 227 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 819 மாணவர்கள், 13 ஆயிரத்து 915 மாணவிகள் என 25 ஆயிரத்து 734 பேர் தேர்வு எழுதினர்.
  • கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது.

  தஞ்சாவூர்:

  தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து மதிப்பெண்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை பிளஸ்-2 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

  தஞ்சை மாவட்டத்தில் 227 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 819 மாணவர்கள், 13 ஆயிரத்து 915 மாணவிகள் என 25 ஆயிரத்து 734 பேர் தேர்வு எழுதினர்.

  இதில் 10 ஆயிரத்து 710 மாணவர்கள், 13 ஆயிரத்து 342 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 52 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 93.46 ஆகும்.

  கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 95.18 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அதை விட 1.72 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
  • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது

  தஞ்சாவூா்:

  மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ராசி மணல் அணைக்கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் தஞ்சை அருங்காட்சியகத்தில் காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

  பின்னர் அங்கிருந்து பேரணியாக விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு மத்திய மற்றும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே தஞ்சை சாந்த பிள்ளைகேட் நீர்வளத்துறை காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

  இதையடுத்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேரிக்கார்டு உள்ளிட்ட தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மேலும் விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


  அப்போது பி. ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

  காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

  இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

  • அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலம்.
  • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

  சுவாமிமலை:

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும். இங்கு பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருட தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், தந்தை சிவனுக்கு 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றதுமாகும். அருணகிரிநாதருக்கு, முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய தலமும் இதுவே.

  இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா.. அரோகரா... பக்தி கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

  தேரானது அசைந்தாடியபடி 4 ரத வீதிகளிலும் உலா வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  அதனைத் தொடர்ந்து, நாளை (வெள்ளிக்கிழமை) வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்று, காவிரியில் தீர்த்தவாரியுடன் முடிவடைகிறது.

  • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  தஞ்சாவூா்:

  திருவண்ணாமலையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை டிரைவர் சிவ சண்முகம் ஓட்டி வந்தார்.

  இன்று காலை அந்த பஸ் கும்பகோணத்திற்கு வந்து சிறிது நேரம் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி கொண்டிருந்தது. மீண்டும் அங்கிருந்து தஞ்சாவூருக்கு பஸ் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

  அப்போது தஞ்சாவூர் அருகே மானாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த சிறிய பாலத்தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கவிழ்ந்தது. பயணிகள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர்.

  தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் மற்றும் அப்பகுதி பொது மக்கள் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கிய பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் 26 பயணிகள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி தஞ்சை கீழலாயத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லட்சுமி (வயது 50) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, மற்ற 25 பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
  • தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர்.

  சுவாமிமலை:

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது.

  `பூலோக வைகுண்டம்' என போற்றப்படும் இக்கோவிலில் `சொர்க்க வாசல்' தனியாக கிடையாது என்பது தனிச்சிறப்பாகும்.

  இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 3-வது தலமாக போற்றப்படுகிறது. மேலும், 7 ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கோவில் தேரோனது தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய தேர்களில் 3-வது பெரிய தேர் ஆகும். இந்த தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல் தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.

  முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயாருடன் தேரில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரங்கா.. சாரங்கா... பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 வீதிகளிலும் வலம் வந்து நிலையை வந்தடைய உள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.
  • வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

  தஞ்சாவூா்:

  தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் நாளான இன்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

  இதனை முன்னிட்டு ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு தேரடியில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. 27-வது தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.

  தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். திருவையாறு நான்கு ராஜ வீதிகளில் தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்தது. இன்று மாலையில் தேர் நிலையை வந்து அடையும். அப்போது தீபாரதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

  விழாவில் வரும் 25ஆம் தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. 26-ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும்.

  • காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
  • பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கும்பகோணம்:

  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பஸ் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருவாய்ப்பாடியை சேர்ந்த ரமேஷ் (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

  இந்த பஸ் கும்பகோணம் பாலக்கரை அருகே வந்து கொண்டிருந்த போது பஸ்சுக்கு முன்பு சிலர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். இதனை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது திடீரென பஸ்சை ஏன் நிறுத்தி இருக்கிறாய்? எனக்கூறி 8 பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சின் உள்ளே சென்று டிரைவர் ரமேஷை சரமாரியாக தாக்கினர். இதில் ரமேஷின் மூக்கு, கண், முகம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே ஓடினர்.

  அந்த கும்பல் டிரைவரை எட்டி உதைத்து கீழே தள்ளியதுடன், மேலும், 2 பேரையும் தாக்கினர். வலி தாங்காமல் டிரைவர் கூச்சலிடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் டிரைவரை மீட்க சென்றனர். அப்போது 2 பேர் பொதுமக்களிடம் சிக்கினர்.

  தகவல் அறிந்து வந்த கும்பகோணம் நகர கிழக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் கும்பகோணம் பாலக்கரை பகுதியை சேர்ந்த சுதர்சன், ஜனார்த்தனன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரின் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

  காயமடைந்த டிரைவர் உள்பட 3 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பஸ்சில் புகுந்து டிரைவரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.