search icon
என் மலர்tooltip icon

  திருச்சிராப்பள்ளி

  • வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது.
  • தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும்.

  கே.கே.நகர்:

  திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

  பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும். நான் போட்டியிட போவதில்லை. ஜாதியின் அடிப்படையில் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்கிறேன். ஆதி தமிழ் குடிமக்களை அங்கீகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் அதை செய்கிறோம்.

  தனித்தொகுதி என்பது இல்லை என்றால் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பே இருக்காது. அரசியல் அதிகாரம், அங்கீகாரம் இல்லாமல் இருப்பவருக்கு நாங்கள் வாய்ப்பளிக்கிறோம். நிராகரிக்கப்பட்டவர்களை முன்னேற்றுவது தான் சமூக நீதி.

  நாட்டை அரை நூற்றாண்டு காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி தற்பொழுது ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்கிறார். இவ்வளவு நாள் அவர் என்ன செய்து கொண்டு இருந்தார்? தேர்தல் வரும் பொழுது அனைவர் மீதும் பாசம் வருகிறது. இவை அனைத்தும் நாடகங்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த தமிழக மக்களை வாழவைக்காமல், இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார். நான் ஆட்சியில் அமர்ந்த பின்பு மீனவர்கள் மீது முடிந்தால் யாராவது தொட்டுப் பார்க்கட்டும்.

  காங்கிரஸ் கட்சி இனி இருக்காது, அதனால் பா.ஜ.க.விற்கு செல்லலாம் என்கிற நினைப்பில் விஜயதாரணி அங்கு சென்று இருக்கலாம். காங்கிரஸ் கட்சியாவது அவருக்கு 3 முறை எம்.எல்.ஏ சீட்டு வழங்கியது. ஆனால் பா.ஜ.க.வை பொறுத்தவரை அக்கட்சியில் சேரும்போது ஏதாவது செய்வார்கள். அதன்பின் எந்த செய்தியும் வராது.

  வாக்கு எந்திரத்தை வைத்து தேர்தல் நடக்கும்போது முடிவு மக்கள் கையில் இருக்காது. பா.ஜ.க.வினர் ஒரு கையில் நோட்டு பெட்டியும் மற்றொரு கையில் வாக்கு பெட்டியும் வைத்துள்ளார்கள். அவர்கள் எத்தனை சீட்டு வெல்வோம் என கூறுகிறார்களோ அத்தனையும் வெல்வார்கள். நாம் தமிழர் கட்சியை கூட்டணியில் சேர பல்வேறு கட்சியில் இருந்து அழைப்பு வருகிறது. என்னிடம் ரகசியமாக பேசுகிறார்கள். நானும் அதை ரகசியமாக வைத்துள்ளேன். அதை வெளிப்படையாக கூறுவது மாண்பாக இருக்காது. வேட்பாளர் அறிவித்த பிறகு எங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

  வாக்கு எந்திரத்தை நமக்கு தயாரித்து தருவது ஜப்பான். ஆனால் அந்த நாட்டு தேர்தலிலேயே அதை பயன்படுத்துவதில்லை.

  நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளின் தோடு, மூக்குத்தி உள்ளிட்டவற்றில் விடைகளை மறைத்து வைத்து எடுத்துச் செல்ல முடியும் என கூறுகிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய வாக்கு எந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது என அவர்களே தெரிவிக்கிறார்கள்.

  தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடக்கும் போதும் நிச்சயமாக எங்கள் கட்சி போட்டியிடும் என்று கூறினார்.

  • ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
  • பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

  டால்மியாபுரம்:

  கல்லக்குடி பேரூராட்சியில் இன்று ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியினை ஆர்.டி.ஓ. சிவசுப்பிரமணியன், லால்குடி டி.எஸ்.பி. அஜய் தங்கம், தாசில்தார் முருகன், கல்லக்குடி பேரூரட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.

  திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஊட்டத்தூர் ஊராட்சி மன்ற இந்திரா அறிவழகன், அன்பழகன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர், ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. மாடு பிடி களமானது எந்த வித வளைவுகளும் இன்றி நேர் பாதையாக அமைந்ததால், காளைகள் வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியில் வந்து, வீரர்களை சுழற்றி அடித்து நேராக புயலென விரைந்து சென்று கெத்து காட்டின.

  காளைகள் கெத்து காட்டினால் வீரர்கள் சும்மா இருப்பார்களா? சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடிக்க 450 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் களமிறக்கப்பட்டனர். இவர்கள் அணி அணியாக மாடு பிடி களத்திற்குள் வந்து புயலென வாடி வாசலை விட்டு வெளியில் வந்த காளைகளை, லாவகமா மதில்களை தழுவி, தங்களின் புஜ பலத்தால் காளைகளை வீரர்கள் அடக்கினர்.

  திமிழ் உள்ள திமிரல், பாய்ந்து வந்து, காளைகள் வீரர்களை சிதறடித்தபோது, உன் திமிழ் பிடித்து, தமிரை அடக்குகிறேன் பார் என்று காளையர்கள் வீரம் காட்டிய போதும், பார்வையாளர்கள் மெய் சிலிர்த்து உற்சாகமாக கரகோஷம் எழுப்பி, கத்திய சத்தம் விண்ணை பிளந்தது. சிறப்பாய் சீற்றம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும், பயமறியாத திமிழ் தழுவிய காளையர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

  முன்னதாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடை பெற்றதோடு, மாடுகள் காயமடைந்தால் சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்தனர். மேலும் காயமடையும் இளைஞர்களுக்கு சிசிக்கை அளிப்பதற்காக அவசர கால ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். கல்லக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி நடை பெற்றதையொட்டி அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  • பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
  • உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  உப்பிலியபுரம்:

  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சை பெருமாள் பட்டி தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த சிவகுமார்-மேகலா தம்பதியினரின் ஒரே மகள் மெர்சி (வயது 14). தம்பதியர் இருவரும் பணி நிமித்தம் காரணமாக வெளியூரில் உள்ளனர்.

  இதனால் மெர்சி, உறவினரான பாட்டி ராஜேஸ்வரி உடன் தங்கி, பச்ச பெருமாள்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

  பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரவு பள்ளிப் பணிகளை முடித்து ராஜேஸ்வரி வீடு திரும்பினார்.

  அப்போது வீட்டில் இருந்த மெர்சி தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் குமரேசன், செபாஸ்டின் சந்தியாகு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மெர்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

  தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது.
  • டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

  திருச்சி:

  காவிரியில் போதிய நீர்வரத்து இல்லாத காரணத்தினால் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக இருக்கும் டெல்டாவில் நடப்பு ஆண்டில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

  திருச்சி மொத்த மார்க்கெட்டில் 26 கிலோ எடை கொண்ட மணச்சநல்லூர் பொன்னி அரிசி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ. 1290க்கு விற்கப்பட்டது. இன்றைக்கு அதன் விலை ரூ. 1500 ஆக உயர்ந்துள்ளது.

  சில்லறை மார்க்கெட்டில் ஒரு கிலோ மணச்சநல்லூர் பொன்னி ரூ. 64 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று அட்சயா பொன்னியின் விலை ரூ.74 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று இட்லி அரிசி உள்பட அனைத்து வகையான அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது.

  திருச்சி மணச்சநல்லூர் அரியமங்கலம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அதன் காரணமாக திருச்சியில் மணச்சநல்லூர் பொன்னி ரூ. 1500 க்கு கிடைக்கிறது. இதுவே சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் ரூ.1600 முதல், ரூ. 1700 வரை விற்கப்படுகிறது.

  இந்த விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த விலை ஏற்றத்திற்கு டெல்டா உற்பத்தி பாதிப்பு மட்டுமல்லாமல் கர்நாடகாவில் இருந்து வரும் நெல் வரத்து சரிந்ததும் காரணமாக உள்ளது.

  இது தொடர்பாக திருச்சி உறையூர் கற்பகம் அரிசி மண்டி உரிமையாளர் குணசேகரன் கூறும்போது, திருச்சியில் உள்ள அரிசி ஆலைகளுக்கு முன்பெல்லாம் பெங்களூரில் இருந்து அதிக அளவு நெல் வரும்.

  தற்போது இலவச அரிசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அங்கிருந்து வரும் நெல் வரத்து சரிந்துவிட்டது. காவிரி டெல்டாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அரிசி உற்பத்தி குறைந்து விலை உயர்ந்து விட்டது என்றார்.

  மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு கூறும் போது, பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 25 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்படும்.

  காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி 10 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது.

  அதிலும் திருச்சி, கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 5 சதவீதம் கூட சம்பா சாகுபடி செய்யப்படவில்லை. 1890க்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் காவிரியில் 50,000 ஏக்கரில் மட்டுமே சம்பா சாகுபடி செய்யப்பட்டது.

  அதன் பின்னர் 1924 களில் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிரிடப்பட்டது.

  ஆனால் இன்றைக்கு கர்நாடகா காவிரியின் குறுக்கே 5 அணைகள், 30 ஆயிரம் ஏரிகள் அமைத்ததால் 30 லட்சம் ஏக்கரில் அங்கு சம்பா பயிரிட்டுள்ளார்கள். காவிரி டெல்டாவில் முன்பெல்லாம் முப்போக சாகுபடி இருக்கும்.

  இப்போது ஒரு போகத்திற்கு விவசாயிகள் தள்ளாடுகின்றனர். ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில் சம்பா சாகுபடியும் சுருங்கிவிட்டதால் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்.

  இதற்கிடையே அரிசி ஆலை அதிபர் ஒருவர் கூறுகையில், நடப்பு ஆண்டில் அதிகளவு சாப்பாட்டு அரிசியான சன்ன ரக நெல்களை அரிசி உற்பத்தி ஆலைகள் விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி இருப்பு வைத்துள்ளனர்.

  இதனால் அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் சரிந்துள்ளது.

  இந்த கால கட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அரசின் கையிருப்பில் பல லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டிருக்கும்.

  ஆனால் இப்போது 50 ஆயிரம் டன் நெல் இருப்பு இருக்குமா என்பது கூட சந்தேகமாக உள்ளது. ஆகவே வருங்காலத்தில் ரேசன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

  அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விலை குறைவாக இருக்கும் காரணத்தினாலும், நிபந்தனைகளில் தளர்வுகள் கொண்டு வந்த காரணத்தாலும் தனியார் அரிசி ஆலை அதிபர்கள் நெல்லை பதுக்கி உள்ளனர். ஆகவே வருங்காலங்களில் அரிசி விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார்.

  • வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார்.
  • பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை.

  கே.கே. நகர்:

  பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு வருகிறது.

  இது தொடர்பாக கட்சியின் தமிழக அளவிலான உயர்மட்ட தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

  வருகிற 27, 28-ந்தேதிகளில் தமிழகத்தில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது தேர்தல் கூட்டணி இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் கூறுகின்றன.

  இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று (புதன்கிழமை) காலை 7.10 மணிக்கு ஒரு விமானம் வந்தது. இந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் தே.மு.தி.க. மாநிலத் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் வந்தனர்.

  இதில் சுதீஷ் ரெகுலர் லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். அடுத்த சில மணித்துளிகளில் அண்ணாமலை வி.ஐ.பி. லாஞ்ச் வழியாக வெளியே வந்தார். இதைக் கண்டதும் அவர்களை வரவேற்க வந்திருந்த பா.ஜ.க. மற்றும் தே.மு.தி.க. தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

  ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் 2 பேரும் பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேசி இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. ஆனால் விமானத்தில் சுதீஷ் முன்பக்க இருக்கையிலும், அண்ணாமலை பின்பக்க இருக்கையிலும் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. ஆகவே இருவரும் சந்தித்ததற்கான எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

  பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டினை இன்னமும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க. மற்றும் பாஜக ஆகிய 2 கட்சிகளும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க திரை மறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

  ஆகவே ஒரே விமானத்தில் 2 கட்சிகளின் தலைவர்களும் பயணம் செய்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அண்ணாமலை கரூருக்கும், சுதீஷ் தஞ்சாவூருக்கும் புறப்பட்டுச் சென்றனர். 2 கட்சிகளின் தொண்டர்களும் அவர்களை வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.

  • தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன.
  • பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது.

  திருச்சி:

  திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 15-ந் தேதி தொடங்கி தீயணைப்புத் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் திருச்சி மத்திய மண்டலம் உள்ளிட்ட மாநிலம் முழுவதுமுள்ள 4 மண்டலங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வடக்கு மண்டல அதிக புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. திருச்சி மத்திய மண்டலம் 2 ஆம் இடத்தையும், தெற்கு மண்டலம் 3 ஆவது இடத்தையும் பெற்றன.

  பரிசளிப்பு விழாவில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் ஆபாஷ்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

  தமிழகம் முழுவதும் தீயணைப்பு நிலையங்களில் மீட்புப் பணிகளுக்காக பைபர் படகுகள், ரோபோக்கள், மற்றும் நவீன சாதனங்களை தேவைக்கேற்ப கொள்முதல் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதுடன் உரிய மாற்றங்களும் செய்யப்படும். சென்னை, மற்றும் தென் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்புகளின்போது தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் பணி மகத்தானது எனத் தமிழக முதல்வரே பாராட்டியிருப்பது பெருமை.

  அதே நேரம் தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலையளிக்கின்றன. இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களின்போது தலைமைச் செயலர் ஏராளமான அறிவுரைகளைக் கூறியுள்ளார்.

  அந்த வகையில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து, பட்டாசு ஆலைகள் மற்றும் குடோன்களில் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். மேலும் விபத்துகளைத் தடுக்க 6 மாதங்களுக்குள் புதிய விதிமுறைகள் வரையறுக்கப்படும்.

  பொதுவாகவே பட்டாசு ஆலைகளின் பெரிய குடோன்களுக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம்தான் அனுமதியளிக்கிறது. தீயணைப்புத் துறை சார்பில் சிறிய குடோன்கள் மற்றும் ஆலைகளுக்குத்தான் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விபத்துகள் என வரும்போது தீயணைப்பு மீட்புத் துறைக்கே நெருக்கடி ஏற்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் ஜி. கார்த்திகேயன், மாநகரக் காவல் ஆணையர் ந. காமினி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மத்திய மண்டலத் துணை இயக்குநர் பி. குமார், மாவட்ட அலுவலர் வி. ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர்.
  • ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  முசிறி:

  திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 65) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் இவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.

  அப்போது 2 கார்களில் 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்து கூச்சலிட்டு உள்ளனர்.

  வெளியே வராத ஞானசேகர், வீட்டின் உள்ளே இருந்து யார் என கேட்டுள்ளார். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் ஜே.பி.சண்முகம் உங்களிடம் பேச வேண்டும் என அழைக்கிறார் என தெரிவித்தனர்.

  அப்படி யாரையும் எனக்கு தெரியாது என கூறி கதவை திறக்காமல் இருந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர்கள் கதவை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

  உடனடியாக ஞானசேகர் முசிறி போலீசாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். போலீஸ் வருவதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய்ந்தனர். அப்போது அதில் பதிவான காட்சிகளை பரிசோதித்த போது தகராறில் ஈடுபட்டது முசிறி அருகே, வெள்ளூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருதமுத்து மகன் மெக்கானிக் செந்தில் (40) , ஜவேலி பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஜே.பி.சண்முகம் என்பதும் தெரியவந்தது.

  இதனையடுத்து அவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரியல் எஸ்டேட் செய்து வரும் ஞானசேகர் ஒருவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வரவு செலவு இருப்பதை அறிந்து கொண்டு அவரை மிரட்டி பணம் பறிப்பதற்காக சென்றதாக விசாரணையில் தெரியவந்தது.

  இதையடுத்து ஞானசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சண்முகம் மாவட்ட செயலாளர் ஆகவும், செந்தில் ஒன்றிய பொறுப்பாளராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
  • போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

  திருச்சி:

  தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

  இதில் பங்கேற்ற விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தங்களது கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி நின்றனர். மேலும் சில விவசாயிகள் சாலைகளில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

  இந்த நிலையில் ராமச்சந்திரன், பரமசிவம், நவீன் குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்த பகுதியில் உள்ள செயின் பால் காம்ப்ளக்ஸில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்த டவர் காம்ப்ளக்ஸ் மொட்டை மாடியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ளது. இதில் 5 விவசாயிகளும் ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை கீழே இறங்க கூறினர்.

  ஆனால் அவர்கள் தொடர்ந்து இறங்க மறுத்து அடம்பிடித்தனர். அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

  பின்னர் தலைவர் வேண்டுகோளை ஏற்று அந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டவரில் இருந்து இறங்கினர். இதற்கிடையே தலைவரை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்பதாக அந்த விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர்.

  இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

  • திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம்.
  • தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

  திருச்சி:

  திருச்சி மத்திய மண்டல ம.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தல் நிதி வழங்கும் விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சட்டசபையில், கவர்னர் உரையை வாசிக்காமல் புறக்கணித்தது இதுவே முதல் முறை. தமிழ் தாய் வாழ்த்து பாடியதை தொடர்ந்து உரையும், நிறைவாக தேசிய கீதம் பாடுவதை அவர் முரண்பாடு என்கிறார்.

  அவரைப் பொறுத்தமட்டில் தொடக்கத்திலும் நிறைவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என விரும்புகிறார்.

  கடந்த முறை தலைவர்கள் காமராஜர், அண்ணா, பெரியார், கலைஞர் ஆகியோர் பெயரை தவிர்த்து உரையை வாசித்தார். அதற்காக விளக்கத்தை கவனத்தில் அளிக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் செய்து வருகிறார்.

  அவருக்கு கவர்னராக இருப்பதற்கான அடிப்படை தகுதி இல்லை. பா.ஜ.க., அரசின் பிரதிநிதி போல் செயல்படுகிறார்.

  தமிழகம் மட்டுமின்றி பா.ஜ.க. அல்லாத கேரளா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகளிலும் பா.ஜ.க அரசின் தலையீடு உள்ளது. லோக்சபா தேர்தலுக்காக, நெருடல் எதுவும் இல்லாமல் கூட்டணியில் செயல்பட்டு வருகிறோம்.

  நாடு முழுவதும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என்று பா.ஜ.க. கூறுவதும் தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்குகளை வாங்குவோம் என்று கூப்பிட்டாங்க சொல்வதும் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் ஏதேனும் முறைகேடு செய்வார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

  18 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, எரி பொருள் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகள் பாஜக அரசு நிறைவேற்றப்படவில்லை. எரிபொருளுள் விலை உயர்வு தான் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் காரணம்.

  பல விஷயங்களில் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருப்பதால், பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

  திருச்சியில் மதிமுக போட்டியிட வேண்டும் என்று தோழர்கள் விருப்பம். கட்சித் தலைமையும் கூட்டணி தலைமையும் ஆணையிட்டால் திருச்சியில் போட்டியிடுவேன்.

  கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் ஒரு மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக ஒரு மக்களவைத் தொகுதி கேட்டிருக்கிறோம்.

  இன்னும் 10 நாட்களில் திமுக இறுதி முடிவு எடுக்கும். இந்த தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கப்படும் தனிச் சின்னத்தில் போட்டியிட திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

  இதில் நல்ல முடிவை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.