search icon
என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.
    • திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2 ஆயிரத்து 7 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சோழிங்கநல்லூர் பகுதி யைசேர்ந்த 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குகிற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அளித்து கொண்டு இருக்கிறது.

    நமது அரசு ஏழை, எளிய, அடித்தட்டு, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க.வும், திராவிட மாடல் அரசும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். அதே போல் நீங்களும் கழகத்துக்கும், நம்முடைய அரசுக்கும் பக்கபலமாக இருந்து வரு கிறீர்கள்.

    தேர்தல் சமயத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். சென்னையில் பட்டா பிரச்சனை பல வருடமாக இருக்கிறது. அப்படி பட்டா கிடைக்காமல இருப்பவர்களுக்கு நிச்சயம் பட்டா வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தேன்.

    தேர்தல் முடிவுகள் வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. இந்த 2 மாதத்திற்குள் முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்து உள்ளார்.

    பல வருடமாக பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது பட்டா கிடைத்து உள்ளது. திராவிட மாடல் அரசு இன்றைக்கு பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டங்கள், சாதனைகளை எல்லாம் நீங்கள் அத்தனை பேருக்கும் எடுத்து சொல்ல வேண்டும். உங்களுக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறது. எங்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், மா.சுப்பிரமணி யன், அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எழிலன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், 15-வது மண்டலகுழு தலைவரும், பகுதி செயலாளருமான மதியழகன், பாலவாக்கம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
    • பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

    இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

    இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.

    இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். 

    • அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
    • குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    இதேபோல் வாலாஜாபாத் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சி மற்றும் பழையசீவரம் ஊராட்சியில் வனத்துறை சார்பில், தமிழ்நாடு உயிர் பண்ணை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மரகதப் பூஞ்சோலையை பார்வையிட்டனர். பின்னர் அந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து பழையசீவரம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் குளம் வெட்டும் பணியினை பார்வையிட்டனர்.

    உத்திரமேரூர் ஒன்றியம், வளத்தோடு கிராமத்தில், வேளாண்மை துறை சார்பில், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ், பயிரிட்டுள்ள தக்கைப் பூண்டு செடியினை பார்வையிட்டு, விவசாயிகளிடம் விவசாய பணிகள் குறித்தும், மானாம்பதி ஊராட்சியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய சுகாதார நிலையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், வன அலுவலர் ரவி மீனா,வேளாண்மை இணை இயக்குநர் (பொ)ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி அருள்பாலிப்பார்.
    • பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள சிறப்பு பெற்ற வரதராஜப் பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழாவில் 3-வது நாளிலும், ஆனி மாதம் மற்றும் ஆடி மாதம் என 3 முறை தங்கக்கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மாத கருட சேவையை யொட்டி உற்சவர் தேவராஜ சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து வாகன மண்டபத்துக்கு வந்து தங்ககருட வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தியும், முத்துக்கிரீடம் மற்றும் தங்க ஆபரணங்கள், மாலைகள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

    பின்னர் பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடை பெற்றது. மஞ்சள் பட்டாடை அணிந்து தங்கக்கருட வாகனத்திற்கு வந்த பெருமாள் முதலா வதாக கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்திற்குள் வலம் வந்தார். பின்னர் கோவிலின் நுழைவு வாயிலில் ராஜகோ புரத்தின் முன்பாக கோபுர தரிசனம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஆஞ்சநேயர் சந்நிதியில் சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து கோவில் மாட வீதியில் உலா வந்து பெருமாள் எழுந்தருளினார். பின்னர் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • பல்வேறு கோணங்களில் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகே உள்ள அய்யம்பேட்டை, நடுத்தெருவை சேர்ந்தவர் ருத்திரகோட்டி. இவரது மனைவி மோகன பிரியா. நெசவு தொழில் செய்து வருகிறார்கள்.

    பட்டு ஜரிகை அடகு கடையும் வைத்து உள்ளனர். இவர்களது மகன் தனுஷ் (வயது21). பி.எஸ்.சி கணிதம் படித்து உள்ள அவர் அரசு பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராகி வந்தார். கடந்த வாரம் நடைபெற்ற ஒரு அரசு பணிக்கான தேர்வும் எழுதி இருந்தார்.

    கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் இருந்த தனுஷை அவருடைய நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்தனர். அப்போது வெளியே சென்ற தனுஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர். மேலும் தனுஷின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தனுசின் நண்பர்களிடம் கேட்ட போது அவர்களும் தேடிவந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலாஜாபாத் அடுத்த வில்லிவலம் பஞ்சாயத்துக்குட்பட்ட கோயம்பாக்கம் பகுதியில் உள்ள பாலாற்றில் துண்டிக்கப்பட்ட வாலிபரின் வலது கால் ஒன்று தனியாக கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாலாஜாபாத் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த காலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பாலாற்று பகுதி முழுவதும் கால் துண்டிக்கப்பட்டவரின் உடல் புதைக்கப்பட்டு உள்ளதா? என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


    அப்போது பாலாற்றில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒரு இடத்தை தோண்டிய போது அழுகிய நிலையில் தனுசின் உடல் புதைக்கப்பட்டு இருந்தது. உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக கோயம்பாக்கம் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தனுஷ் மாயமான அன்று கார் ஒன்று அவ்வழியே செல்வது பதிவாகி இருந்தது. அது அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த கொலையுண்ட தனுஷின் நண்பரான விஷ்வாவின் கார் என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்தபோது நண்பரான சுந்தர் என்பவருடன் சேர்ந்து தனுசை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்ததாக தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து விஷ்வா, சுந்தர் ஆகிய 2 பேரையும் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரும் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்கள். கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரித்த போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

    விஷ்வா புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கவும் வீட்டை பழுது பார்க்கவும் சிறுக, சிறுக தனுஷின் பெற்றோரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று இருக்கிறார். இந்த பணத்தை விஷ்வா திருப்பி கொடுக்கவில்லை. மேலும் பணத்திற்கான வட்டியும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் தனுஷ் பணத்தை திருப்பி கேட்டு அடிக்கடி நெருக்கடி கொடுத்து இருக்கிறார்.

    இதனால் கோபம் அடைந்த விஷ்வா நண்பரான தனுசை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்த தனுசை காரில் அழைத்து சென்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்தார். இதற்கு உடந்தையாக மற்றொரு நண்பர் சுந்தர் இருந்தார்.

    பின்னர் தனுசின் உடலை பாலாற்றில் மணலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் போட்டு மூடிச்சென்று உள்ளனர். ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையினால் அந்த பகுதியில் இருந்த மணல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு சுற்றிய நாய்கள் புதைக்கப்பட்ட தனுசின் காலை கடித்து துண்டாக்கி தனியாக இழுத்து வந்து உள்ளன.

    இதன்பின்னரே தனுஷ் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று பல்வேறு கோணங்களில் வாலாஜாபாத் போலீசார் கைதான மாணவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
    • மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் மாநகராட்சி மேயர், துணை மேயர், 49 மாநகராட்சி உறுப்பினர்கள் பதவியில் உள்ளனர். திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் மாநகராட்சி மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருபரன் துணை மேயராகவும் உள்ளனர்.

    மாநகராட்சி மேயர் தங்களை உரிய முறையில் மதிக்கவில்லை. தங்கள் வார்டுகளுக்கு தேவையான மக்கள் நல பணிகளை செய்து தரவில்லை என அதிமுக, பாமக, பாஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், சுயேச்சை, உறுப்பினர்கள் கூறி வந்த நிலையில் தற்போது ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும், சேர்ந்து கொண்டு மேயர் மகாலட்சுமி யுவராஜுடன் மோதல் போக்கை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த நிலையில் திமுக மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என 33 பேர் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரி டம் மனு வழங்கி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து நகராட்சி துறை அமைச்சர் கே.என். நேரு மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் மேயரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.

    இருப்பினும் மாநகராட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி கமிஷனர் செந்தில் முருகன், மாநகராட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் 1998 (திருத்தப்பட்ட சட்டம் 32, ஆண்டு 2022) பிரிவு 51 (2) (3) படி காஞ்சிபுரம் மாநகராட்சி உறுப்பினர்களால் மாநகராட்சி மேயர் மீது அளிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்துவதற்கான கூட்டம் இந்த மாதம் 29-ம்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி கூட்டம் நடைபெற உள்ளது என்றும், மேற்படி கூட்டத்தில் மாநகராட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு அதற்கான கடிதங்களை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    மாநகராட்சி கவுன்சிலர்கள் விவரம்

    மொத்தம்:- 51

    திமுக - 33

    காங்கிரஸ் -1

    அதிமுக -8

    தமாகா -1

    பாமக -2

    பாஜனதா -1

    விடுதலை சிறுத்தைகள் கட்சி-1

    சுயேச்சை -4

    • மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
    • நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டன.

    காஞ்சிபுரம்:

    விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு ஏரிகளில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ள ஆணை வழங்கப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியம், சிறுனை ஏரியில், விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் தொழிலாளர்களுக்கு கட்டணமின்றி ஏரிகளில் இருந்து களிமண் எடுத்துச் செல்வதற்கான ஆணைகளை வழங்கி மண் அள்ளும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.

    இதில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் ஆறுமுக நயினார், உதவி இயக்குனர் இளங்கோவன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டையன் கலந்து கொண்டனர்.

    • தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.
    • நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சியில் மேயராக தி.மு.க.வை சேர்ந்த மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மாநக ராட்சியில் தி.மு.க., அ.தி. மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, சுயேட்சை என 51 கவுன்சிலர்கள் உள்ளனர்.

    இதில் அ.தி.மு.க, பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தி.மு.க. கவுன்சிலர்களே மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

    மாநராட்சி கூட்டங்களை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்ற முடியாமல் முடங்கி போய் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி போர்க் கொடி தூக்கி உள்ள தி.மு.க. உள்ளிட்ட கவுன்சிலர்கள் 33 பேர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மனு அளித்தனர்.

    ஏற்கனவே பணிக்குழு கலைக்கப்பட்ட நிலையில் பொது சுகாதார குழு, கணக்கு குழு, நகரமைப்பு குழு, வரிவிதிப்பு குழு உறுப்பினர்கள் பதவியை தி.மு.க. கவுன்சிலர்கள் உட்பட 18 எதிர்ப்பு கவுன்சிலர்கள் ராஜினாமா செய்து உள்ளனர்.

    மீண்டும் மாநகராட்சி ஆணையரை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி 33 எதிர்ப்பு கவுன்சிலர்களின் பிரமாணம் பத்திரங்களையும் தாக்கல் செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் 13 கவுன்சிலர்களை உள்ளடக்கி செயல்பட்டு வரக்கூடிய 2-வது மண்டல குழுவின் தலைவர் மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கூறி 7 எதிர்ப்பு கவுன்சிலர்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.

    இந்த நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட 33 பேர் மீண்டும் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

    அதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும், என்ற எங்கள் கோரிக்கையை தவிர்க்கும் வகையில் மேயருக்கு ஆதரவாக செயல்படும் கமிஷனரை மாற்றி, மன்ற கூட்டத்தை வேறொரு ஆணையரை வைத்து நடத்திட வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

    • ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா.
    • இன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, இரவு சுவாமி, பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார்.

    5-ம் நாள்விழாவான வருகிற 11-ந்தேதி காலை அதிகார நந்தி சேவை உற்சவம், இரவு மருகுவார்குழலி அம்பிகையுடன், அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் நான்கு ராஜ வீதிகளில் உலா வருகிறார்.

    இரவு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 13-ந்தேதி திருத்தேர் உற்சவமும், 16 -ந்தேதி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    19-ந்தேதி தீர்த்தவாரி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.

    • வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.
    • பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த குருவிமலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.61 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பீட்டில் 6-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு என 3 கட்டிடங்கள் கட்டப்பட்டது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தான் இந்தக் கட்டிடம் பயன் பாட்டுக்கு வந்தது. சுமார் 90 மாணவ-மாணவிகள் படிக்கின்ற இந்த நடுநிலை பள்ளியின் புதிய கட்டிடத்தில் 7-ம் வகுப்பு வகுப்பறையில் மேலே உள்ள மேற்கூரை சுவர் திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதனால் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் இறக்கை வளைந்தது.

    வகுப்பறையின் மேற் கூரை சுவர் இடிந்து விழுவதற்கு முன்னதாக அனைத்து மாணவ-மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு இறைவணக்கம் பாடுவதற்காக மைதானத்தில் ஒன்று கூடி இருந்தனர். இதனால் அதிர்ஷ்டவசமாக மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


    இந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடத்தை ஒப்பந்ததாரர், தரமற்ற எம் சாண்ட் மற்றும் கற்களை வைத்து கட்டி இருப்பதால் அது இடிந்து விழுந்துள்ளது தெரிய வந்தது. மேலும் வகுப்பறையில் உள்ள அலமாரிகள், சுவர்கள் ஆகியவற்றிலும் இப்போதே கீறல் விழுந்துள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 மாதங்களில் மேற் கூரை இடிந்து விழுந்துள்ளதால், மாவட்ட கலெக்டர் உடனடியாக இந்த வகுப்பறை கட்டிடத்தை ஆய்வு செய்து பள்ளி மாணவ-மாணவிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற முறையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்தால் அதை இடித்து அப்புறப்படுத்தி விட்டு, தரமான முறையில் புதிய கட்டிடத்தை கட்டித் தரவேண்டும்' என்று கூறியுள்ளனர்.

    • போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.
    • போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    சென்னைக்கு அடுத்தபடியாக மிக பெரிய விமான நிலையம் காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைந்தால் 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் நீர்நிலைகள், விளைநிலங்கள், குடியிருப்புகள் பாதிக்கப்படும் என கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    மேலும் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 705 நாட்களாக மாலை நேரங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்போது காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்ட பயனாளிகளை கணக்கிட்டு தேர்வு செய்வதற்காக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டு 58 கிராம ஊராட்சிகள் உள்ள நிலையில் ஏகனாபுரம் கிராமத்தை தவிர மற்ற 57 கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்ற நிலையில் பரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவில்லை.

    இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர்.

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறாததை கண்டிக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஏகனாபுரம் கிராமத்தை புறக்கணிப்பு செய்வதை கண்டித்தும், விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகிற 3-ந்தேதி (புதன் கிழமை) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் மட்டும் கலந்து கொண்டு தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

    இதன் காரணமாக பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் மீண்டும் சூடு பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ×